Labels

Thursday, August 18, 2011

மரண தண்டனை முடிவை...: மு.க.ஸ்டாலின் பேட்டி



வேலூர் மத்திய சிறையில் உள்ள முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதனை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 18 .08 .2011 அன்று சந்தித்தார். 30 நிமிடம் சிறையில் அவருடன் பேசிவிட்டு பின்னர் வெளியே வந்த மு.க.ஸ்டாலினிடம், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது தொடர்பாக உங்களது கருத்து என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், எங்கள் தலைவர் கூறியதைப்போல, நாங்களும் மரண தண்டனைக்கு எதிர்ப்பானவர்கள். ஆகையால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

தூக்கு தண்டனையை எதிர்க்கும் கட்சிகளோடு இணைந்து போராட தயார் - சீமான் :

வேலூர் மத்திய சிறையில் உள்ள தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை 18 .08 .2011 அன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,

தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு இவ்விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி, தூக்கு தண்டனையை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.


திமுகவும் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. தூக்கு தண்டனையை எதிர்க்கும் கட்சிகளோடு இணைந்து போராட தயாராக உள்ளோம் என்றார்.

தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும் என்று நம்புகிறோம் - வழக்கறிஞர் சந்திரசேகர் :

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக குரல் கொடுத்து வரும் வழக்கறிஞர் சந்திரசேகர் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதி அலுவலகத்துக்கு அனுப்பிய மூன்று பேரின் மனுக்களை நிராகரித்ததற்கான முறையான கடிதம் இன்னும் வரவில்லை. அந்த கடிதம் வந்த பின்னர் உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். அதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதற்காக தமிழகத்தில் பிரபலமான மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். இக்குழு எப்படி இந்த தண்டனையை ரத்து செய்வது என்பதற்கான சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை என்பதால், இவர்களுக்கான தண்டனையை ரத்து செய்ய முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

No comments:

Post a Comment