Labels

Saturday, August 20, 2011

பேரறிவாளன், சாந்தன், முருகன் படம் பொறித்த பனியன் அணிந்து வைகோ, கொளத்தூர் மணி ஆர்ப்பாட்டம்















பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர் முழக்கங்களை எழுப்பினார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அந்த இயக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரையும் பாதுகாக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் 20.08.2011 அன்று தொடர் முழக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பனியனை அணிந்திருந்தனர்.


நிகழ்ச்சிக்கு வந்திருந்த வைகோ உள்ளிட்ட தலைவர்களுக்கும் பனியன்கள் வழங்கப்பட்டன. அவர்களும் பனியன்களை அணிந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று வைகோ முழங்க மற்ற அனைவரும் அதை திரும்ப கூறினர்.


மாண்புமிகு முதல்வர் அவர்களே மூன்று தமிழர்களின் இன்னுயிரை காத்திடுங்கள்
வேண்டுகிறோம் வேண்டுகிறோம் மூன்று தமிழர்களையும் காப்பாற்றும்படி வேண்டுகிறோம்
வேதனையோடு கேட்கிறோம், விம்மலோடு வேண்டுகிறோம், கருணையோடு காத்திடுங்கள்.
தடுத்திடுங்கள் தடுத்திடுங்கள் தடுத்திடுங்கள்
உலகம் முழுவதும் வாழ்கிற பலகோடி தமிழர்கள் வேண்டுகிறார்கள் தூக்கு தண்டனையை தடுத்திடுங்கள்.
ஜாதி, மத எல்லை கடந்து அனைவரும் கண்ணீர் மல்க கேட்கிறோம்.
உங்களை விட்டால் எங்களுக்கு திக்கில்லை. வழியில்லை.
மரண தண்டனையை ஒழித்து இந்தியாவுக்கே புரட்சி வழி காட்டுங்கள்
வரலாறு நன்றி சொல்லும்
வரலாறு உங்களுக்கு நன்றி சொல்லும்
தமிழ் சந்ததிகள் நன்றி சொல்வர்
நிரபராதி தமிழர்களை காப்பாற்றிடுங்கள்
உங்கள் பின்னால் நாங்கள் நிற்போம்
கட்சி, ஜாதி, மத எல்லைகளை கடந்து தமிழ் உலகம் உங்கள் பின்னால் நிற்கும்.
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் மூன்று தமிழர்களை காப்பாற்றுங்கள்.


இவ்வாறு வைகோ தொடர் முழக்கங்களை எழுப்பினார்.

தங்களது கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் வரும் 22ஆம் தேதி எம்ஜிஆர் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று வைகோ தெரிவித்தார். அதில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல்வேறு கட்சி, இயக்கங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கொடி உள்ளிட்ட அடையாளங்களை எடுத்து வரவில்லை. மூன்று பேரை காப்பாற்ற முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கும் வாசகங்களை கைகளில் வைத்திருந்தனர்.

No comments:

Post a Comment