Tuesday, August 30, 2011
உலகில் உள்ள சகல எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும்...: நாடு கடந்த தமிழீழ அரசு கோரிக்கை
நாடு கடந்த தமிழீழ அரசின் தகவல் துறை துணை அமைச்சர் சுதர்சன், சிவகுரு நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்துமாறு கோரும் குரல்கள் தமிழகம் எங்கும் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
எழுத்தாளர்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பில் இருந்தும் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. எனவே, உலகில் உள்ள சகல எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் மரண தண்டனைக்கு எதிராக தமது ஒப்புதலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
3 பேரின் உயிரைக் காப்பாற்றுங்கள்! - ஜெயலலிதாவுக்கு உலக தமிழ் அமைப்பு வேண்டுகோள்:
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிரை காப்பாற்றுங்கள் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது கருணை மனுக்கள் இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். காலவெள்ளத்தின் பின்னோக்கிச் சென்று பார்ப்பின், உலகின் பல்வேறு நாடுகளின் சட்டங்கள் பெருந்தன்மையுடன் தங்களது தீர்ப்புகளை திருத்தி எழுதியிருக்கின்றன.
ஆனால் சட்டமே நினைத்தாலும் திருத்தி எழுதி இயலாத தீர்ப்பு மரண தண்டனையே. இதை மனதில் கொண்டே உலகிலுள்ள 130க்கும் மேற்பட்ட நாடுகள் சட்டத்தின் மூலமாகவோ, நடைமுறையின் மூலமாகவோ மரண தண்டனையை ஒழித்து விட்டன.
மரண தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்றார் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். மேலும் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. ராஜீவ் கொலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை அறிவிப்பு உலகத் தமிழர்களையும், உலகில் மனிதாபிமானம் பேணுவோரையும் பேரதிர்ச்சியும், பெருங்கவலையும் கொள்ளச் செய்துள்ளது.
தண்டனைக்குள்ளானவர்களின், குற்றத்தன்மையினையும் கடந்த 21 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் வாடும் அவர்களின் நிலையினை கருத்தில் கொண்டும் அவர்கள் மூவருக்கும் தாங்கள் தண்டனை குறைப்பு செய்ய ஆவணச் செய்ய வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
உலக நாடுகள் முன் தமிழர்களை தலை நிமிரச் செய்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்த தாங்கள் தாயுள்ளத்தோடு இவ்வேண்டுகோளையும் செயல்படுத்தினால் மனித நேயம் போற்றும் மாபெரும் தலைவராக மக்கள் மனதில் நீங்கா இடம் கொள்வீர்கள் என்பது உறுதி.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் கடிதம் எழுத வேண்டும் - சீமான் :
கோவை குஜராத்தி சமாஜத்தில் உலக மனிதாபிமானக் கழகம் சார்பில் “மனிதம் காக்க மரண தண்டனை ஒழியட்டும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:
இலங்கையில் கடந்த 1 1/2 ஆண்டுகளில் 1.75 லட்சம் தமிழகர்கள் கொல்லப்பட்டனர். ராஜபக்சே போர் குற்றவாளி என்று உலக நாடுகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசு தமிழகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மூவரின் மரண தண்டனையை மட்டுமல்லாது உலகம் முழுவதும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மரணம் என்பது தண்டனை அல்ல. அது ஒரு முடிவு.
தண்டனை என்பது திருந்தி மீண்டும் வாழ்வதற்கு வாய்ப்பு அளிப்பதுதான். 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். தமிழக அமைச்சரவையை கூட்டி 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் கடிதம் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment