Labels

Tuesday, August 30, 2011

இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்: ஈழத்தமிழர் ஆதரவு கூட்டத்தில் தீர்மானம்



பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் (21.08.2011) ஈழத்தமிழர் ஆதரவு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:


பொருளாதார தடை


* ஐ.நா.சபையின் நிபுணர் குழு வெளியிட்ட ஈழத்தமிழர் படுகொலை குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.நா.சபை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


* ஐ.நா.சபையின் நிபுணர் குழு தனது அறிக்கையில் இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டையும், மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களையும் சுமத்தி இருப்பதால், இந்திய அரசு அங்கு நிகழ்ந்த சம்பவங்களை இனப்படுகொலை என்று ஏற்று குற்றவாளிகளை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.


பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்...


* இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவர்களை ஐ.நா.சபை போர்க்குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கையுடன் பொருளாதார உறவுகளை இந்திய அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவது.

* தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பித்தும், இலங்கையில் முன்பு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு மாறாக தற்போது எந்தவித அதிகார பரவலையும் ஏற்பதாக இல்லை என்றும் அறிவித்து உள்ள இலங்கையின் வெளியுறவு செயலாளர் கோத்தபய ராஜபக்சேயை கண்டிக்கிறோம்.


பன்னாட்டு விசாரணை


* ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றம் செய்த குற்றவாளிகளை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.


* ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்ற பின்னணியாளர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருடைய தூக்கு தண்டனையை தளர்த்தும் வகையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு கவர்னர் வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment