Labels

Sunday, August 7, 2011

இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை சபாநாயகர், எம்பிக்கள்: உறுப்பினர்கள் எதிர்ப்பால் பரபரப்பு



இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்பிக்கள் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் 01.08.2011 அன்று கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவை கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சே உள்ளிட்டவர்களை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் இலங்கை எம்பிக்களை, மக்களவை உறுப்பினர்கள் இன்முகத்துன் இந்தியாவிற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.


இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தம்பிதுரை எம்பி தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், போர்க் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் இலங்கை பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.


உறுப்பினர்களின் எதிர்ப்பால் சபாநாயகர் மீராகுமாரால் உரையை வாசிக்க முடியவில்லை. விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாச்சாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.

ஆனால், இதனை ஏற்காத அ.தி.மு.க. எம்.பி.க்கள், வெட்கம் வெட்கம் என்று கோஷமிட்டனர். தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை எம்பிக்கள் - இந்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம் :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழினத்துக்கு விரோதமான நடவடிக்கையில் இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாள் அன்றே சிங்கள நாடாளுமன்றப் பிரதிநிதிகளை விருந்தினர்களாக அனுமதித்து தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு அவமதித்துள்ளது.


சிங்கள நாடாளுமன்ற பேரவைத் தலைவர் சமல் இராஜபக்சே தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 01.08.2011 மக்களவை தொடங்கியதும் பேரவைத் தலைவர் திருமதி மீராகுமார், ""இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் நமது மக்களவை நடவடிக்கைகளை கவனிக்க வந்திருக்கிறார்கள்!'' என்று அறிவிப்புச் செய்திருக்கிறார்.

இந்த நடவடிக்கை கோடானுகோடித் தமிழர்களைக் காயப்படுத்தியுள்ளது. மேலும் இந்தக் குழு தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்க இருப்பதாகவும் அதற்குரிய ஏற்பாடுகளை இந்திய அரசு செய்திருப்பதாகவும் தெரியவருகிறது.


சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சியளிப்பது, இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தன்னுடைய பதவி ஓய்வுபெறும் நிலையில் இராஜபக்சேவோடு விருந்தில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகள் இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையேயான உறவில் உள்ள இணக்கத்தையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது தமிழர்களை அவமதிப்பதாக இருக்கும், தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகிறது என்ற கருத்து உருவாகும் என்கிற அச்சம் இல்லாமல் இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.


பதவி ஓய்வு பெற்றுவிட்ட நிலையிலும் இராஜபக்சேவோடு விருந்து உண்ட நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமித்திருப்பதை, தமிழினத்துக்கெதிராகச் செயல்பட்டதற்காகவே நிருபமா ராவுக்கு பாராட்டிப் பரிசு வழங்கியிருப்பதாகவே உணர முடிகிறது. இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. சமல் இராஜபக்சே தலைமையிலான பிரதிநிதிகளை உடனடியாக இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.


இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

போர்க்குற்றவாளிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? - ராமதாஸ் கண்டனம் :

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவினர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.


இலங்கையில் நடைபெற்ற போரின்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களிளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததற்காக இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியவர்களுக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம் அளித்த இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கது.


இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவையோ அல்லது அவரது நாட்டின் தலைவர்களையோ உலகின் எந்த நாடும் வரவேற்பதில்லை. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி ராஜபக்சே எவ்வளவோ முயன்றும் அவரை சந்திக்க இங்கிலாந்து தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற நேரிட்டது. அதேபோல் ராஜபக்சே அமெரிக்கா சென்றால் அவரைக் கைது செய்ய அந்நாட்டுடு நீதிமன்றமும், காவல்துறையும் காத்திருக்கின்றன.


இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை கொண்ட இந்திய அரசு மட்டும் இலங்கை அதிபரையும், அந்நாட்டு தலைவர்களையும் மாதத்திற்கு ஒருமுறை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழத்திற்கு வந்தபோது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்ப்பட்டனர்.


ஆனால், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் இந்திய அரசு வரவேற்று உபசரிப்பது தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் கொலைக்குற்றம் சாற்றப்பட்ட சிங்களத் தலைவர்களை இந்தியாவுக்கு அழைப்பதை நிறுத்திவிட்டு, ராஜபக்சே உள்ளிட்டோர் மீது போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர் பிரச்னையை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சி - பழ.நெடுமாறன் :

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் ஈழத் தமிழர் பிரச்னை எழுப்பப்படும் என்பதால் எதிர்க்கட்சிகளை திசைதிருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,


இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபட்சே தலைமையில் வந்துள்ள குழுவினருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.


நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டம் தொடங்கும் வேளையில் இலங்கை நாடாளுமன்றக் குழு வந்திருப்பது திட்டமிட்ட ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்னால் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கொழும்பு சென்று ராஜபட்சேவை சந்தித்துப் பேசியதின் விளைவாகவே இக்குழு அனுப்பப்பட்டுள்ளது. மழைக்காலக் கூட்டத் தொடரில் ஈழத் தமிழர் பிரச்சினை உறுதியாக எழுப்பப்படும் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சிகளைத் திசைத் திருப்புவதற்கு இலங்கைக் குழுவை இந்திய அரசு திட்டமிட்டு வரவழைத்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக மக்களின் மன உணர்வுகளை மேலும் மேலும் அவமதிக்கும் வகையில் இந்திய அரசு ராஜபட்சே குழுவுடன் கைகோர்த்து நிற்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும்கூட இந்திய அரசு திருந்தவில்லை. தமிழக மக்கள் இந்த துரோகத்தை ஒரு போதும் மறக்கவோமன்னிக்கவோ மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்.


இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எம்.பி.க்களுக்கு வரவேற்பா? - பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் கண்டனம் :

இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போன்று உள்ளது என்று பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.


இது தொடர்பாக பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


’’ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுத்த தமிழர்கள் மீதான இறுதிக் கட்டப் போர் என்று ராஜபக்சேவால் கூறப்பட்ட நிகழ்வில், அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று இலங்கை அரசு கூறி உள்ளது.

ஐ.நா.சபையின் வல்லுநர் குழுவால் போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சேவின் தம்பி கொத்தபய ராஜபக்சே, போரின் போது பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

சேனல் 4-ன் ஒளிபரப்பலை அறவே மறுத்து வந்த சிங்கள இனவெறி அரசு இப்போது ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் கொலை வெறித் தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

ராஜபக்சே உலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா. சபை நடுநிலை விசாரணைக் குழுவைக் கொண்டு போரின் பாதிப்புகளை விசாரிக்க வேண்டும் என்றும், இந்திய அரசு இலங்கையுடன் ஆன பொருளாதார உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்றும், தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து அனைத்து கட்சியினரும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தமிழர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.


இந்தநிலையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் கட்சியை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பாராளுமன்றத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளனர். தமிழர்களின் உணர்வுகளுக்குச் சற்றும் மதிப்பு அளிக்காமல் தமிழர்களைக் கொன்று குவித்தவர்களுக்குச் சிறப்புச் செய்தது குறித்து பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் தனது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.


அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலுக்காக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்ட சபாநாயகரின் செயல் மேலும் தமிழர்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அமைந்து உள்ளது.


தமிழர்களை கொன்றுக் குவித்த ராஜபக்சேவின் பிரதிநிதிகளை இந்திய பண்பாடு, விருந்தோம்பல் என்னும் பெயரால் வரவேற்றுச் சிறப்பித்ததை உணர்வுள்ள தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.


இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை எதிர்த்துக் குரல் கொடுத்த தமிழ்நாட்டு உறுப்பினர்களுக்குச் சங்கம் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு இந்திய அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என்பது பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கை ஆகும்
’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment