Thursday, August 18, 2011
மூன்று இளைஞர்களை தூக்கு கொட்டடிக்கு அனுப்புவது ஏன்? : பெ. மணியரசன் பேச்சு
“பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டால் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை என்று பொருளாகும்” என்று சென்னையில் நேற்று(17.08.2011) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.
இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.
மோசடியாக துன்புறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலங்களையே ஒரே சாட்சியமாக்க கொண்டு வழங்கப்பட்ட இந்த மரண தண்டனைகளை, தமிழக முதல்வர் செ.செயலலிதா,
தமிழக ஆளுநருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்கும் அதிகாரத்தின் மூலம் இரத்து செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
”இரத்து செய் இரத்து செய் மரண தண்டனையை இரத்து செய்! தமிழக அரசே தமிழக அரசே ஆளுநர் மூலம் இரத்து செய்! இலட்சணக்கில் தமிழரை கொன்ற இந்திய அரசே இன்னும் உன் வெறி அடங்கவில்லையா?”என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கிப் பேசினார்.
அவர் பேசும் போது, ”தமிழினத்தின் அடையாளமாக சிறையில் உள்ள இம்மூவரும் இன்றுள்ளனர். செய்யாத குற்றத்திற்காக அவர்கள் ஏற்கெனவே 21 ஆண்டுகள் அநியாயமாக சிறை வைக்கப்பட்டு விட்டனர்.
இந்நிலையில், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது அநீதியாகும். செய்யாத குற்றத்திற்காக ஏற்கெனவே ஆயுள் தண்டனை அனுபவித்து விட்ட அவர்களுக்குத் தூக்குத் தண்டனை தருவது எந்த வித்ததிலும் நியாமல்ல.
இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த இந்தியாவின் வெறி இன்னும் அடங்கவில்லை. அதன் தொடர்ச்சியாகத் தான் இம்மூவரையும் காவு கொள்ள இந்தியத் துடிக்கிறது.
உலகெங்கும் போர்க் குற்றவாளி அரசாக நிற்கும் இலங்கையை காப்பாற்றத் துடிக்கும் இந்தியா, அந்நாட்டுக்கு செய்த இராணுவ உதவிகளை மறைக்கவும், திசைத்திருப்பவும் தான் இந்த மூன்று இளைஞர்களை தூக்குக் கொட்டடிக்கு அனுப்பியிருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்ட விதி என் 161ன்படி தமிழக ஆளுநருக்கு மரண தண்டனையை இரத்து செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் பயன்படுத்த, தமிழக அரசு அவருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை” என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், பேரறிவாளனின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார், தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், தமிழுரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் புலவர் கி.த.பச்சையப்பனார், ஓவியர் வீரசந்தனம், எழுகதிர் ஆசிரியர் முனைவர் அருகோ, தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் புலவர் சி.பா.அருட்கண்ணனார், புலவர் இராமச்சந்திரன் உள்ளிட்டேர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment