Labels

Sunday, August 7, 2011

இலங்கை அரசுடனான பொருளாதார ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் : பிரதமரிடம் வைகோ



நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காகவே வந்தார் வைகோ . 02.08.2011 அன்று நண்பகல் 12.20 மணி முதல் 12.40 மணி வரையிலும், பிரதமர் மன்மோகன் சிங்கை, நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உள்ளே இருக்கின்ற பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்

நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் வந்த வைகோவைப் பார்த்த மத்திய அமைச்சர் சரத் பவார், 'எப்ப நீங்க உள்ளே வரப்போறீங்க?' என்று அரவணைத்தார். இதே மாதிரி , மத்திய அமைச்சர்கள் பலரும் தங்கள் பாசத்தைத் தெரிவிக்க ... பூரித்த மனோநிலையில் பிரதமரது அலுவலகத்துக்குள் நுழைந்தார் வைகோ!

"நான் உங்களைக் குற்றம்சாட்டிக் கடிதங்கள் கொடுப்பதற்காகவே உங்களை சந்திக்கிறேன். நீங்களும் நான் நேரம் கேட்டதும், உடனடியாக நேரம் ஒதுக்குகிறீர்கள். அதற்காக எனது நன்றிகள்!" என்று வைகோ சொல்ல ... "உங்கள் உயர்ந்த கொள்கைக்காகவே நீங்கள் என்னை சந்திக்கிறீர்கள். அதை நான் மதிப்பதால், உங்களை சந்திக்கிறேன்! என்று பதில் சொன்னாராம் பிரதமர்.

மூன்று கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் வைகோ கொடுத்தார். "முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை ஒன்றைக் கட்ட கேரள அரசு முயற்சித்து வருவது, தமிழக மக்களுக்கு எதிரானது. தமிழர்களுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, அந்த அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசு பொய் சொல்கிறது!" என்று வைகோ சொன்ன போது, அந்த அணை கட்டி ௧௦௦ ஆண்டுகள் ஆகி விட்டதே. அது பலவீனம் அடைந்து இருக்காதா?" என்று பிரதமர் கேட்டாராம்.

"௧௦௦௦ ஆண்டுகள் ஆனாலும் அந்த அணை வலுவாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு அணையை வலுப்படுத்துவதற்கான பணிகளை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகம் செய்து வருகிறது. மத்திய அரசின் நீர் வள ஆணையம் நியமித்த வல்லுநர் குழுவும், முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவே சொல்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலு இழக்கச் செய்வதற்காகவே கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது. சட்டத் திருத்தவும் கொண்டுவந்து உங்களுக்கு அனுப்பி உள்ளது. இப்படி ஒவ்வெரு மாநிலமும், 'அணைகள் எல்லாம் தங்களுக்குத்தான் சொந்தம்' என்று சொன்னால் என்ன ஆகும்? எங்கள் மாநில முதலமைச்சர் உங்களுக்கு இதுபற்றி விரிவாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறாரே.." என்று ஜெயலலிதாவின் கடிதத்தையும் வைகோ ஞாபகபடுத்தினாராம். "இவை அனைத்துமே எனக்கு தெரியும். நான் இதில் கவனம் செலுத்துகிறேன்!" என்றாராம் பிரதமர்.

இரண்டாவதாக வைகோ சொன்ன பிரச்சனை, ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளனைப் பற்றியது. "கொலை சதியைப்பற்றி பேரறிவாளனுக்கு எதுவுமே தெரியாது. அவர் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிரிஷ்னையரே சொல்லி இருக்கிறார். பேரறிவாளனைக் கடுமையாக துன்பபடுத்தித் தான் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள். இளம் வயதில் கைதான அவர், ௨௦ ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார். அவரது வாழ்க்கையே அழிந்துவிட்டது. ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்து செய்துவிட்டீர்கள். அதுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்." என்று வைகோ சொன்னது அனைத்தையும் உற்றுக் கவனித்த பிரதமர், "உங்கள் கோரிக்கையை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்!" என்றாராம் " நானே இதுபற்றி அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்திக்க இருக்கிறேன்.." என்று சொல்லி விட்டு மூன்றாவதாக ஈழப் பிரச்சினைபற்றி பேசி இருக்கிறார்.

"தொடர்ந்து உங்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் அனைத்திலும் 'இலங்கைப் படுகொலைக்கு பொறுப்பாளியாகி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்படும்' என்று சொல்லி இருந்தேன். ஆனால், அதைத்தான் இந்தியா தொடர்ந்து செய்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஜெனீவா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையை ஆதரித்து கியூபா கொண்டு வந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரித்துள்ளது. உலகமே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லும் சூழலில் இந்தியா மட்டும் இப்படி நடப்பது சரியா? இந்தியா இனியாவது இலங்கைக்குத் தரும் உதவிகளை நிறுத்தி, தனது கறையை கழுவ வேண்டும். அனைத்துப் பொருளாதார, நிதி உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்..." என்று வைகோ சொன்னபோது, "இலங்கைக்கு நாம் உதவி செய்யவில்லை என்றால், சீனா இலங்கைக்குள் வந்துவிடும்!" என்றாராம் பிரதமர். "சீனா வந்துவிட்டது இலங்கைக் கடற்படை படகுளில் வந்து தமிழக மீனவர்களைத் தாக்குவது சீனக் கப்பற்படை வீரர்கள் தான். இந்தியா எத்தகைய உதவிகளைச் செய்தாலும் இலங்கை நாடு, சீனாவுக்குத்தான் நண்பனாக இருக்கும். சீனாவையும் பாகிஸ்தானையும்தான் நட்பு நாடாக அவர்கள் நினைப்பார்கள். நம்மை சேர்க்க மாட்டார்கள்!" என்று வைகோ சொன்ன போது சீரியஸாகக் கேட்டார் பிரதமர். இந்த சந்திப்புக்குப் பிறகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேரறிவாளன் விடுதலை குறித்து வைகோ பேசினாராம்.


ஈழத்தமிழர் படுகொலை குறித்து, தமிழில் தான் வெளியுட்டுள்ள சி.டி-களின் ஆங்கிலப் பிரதியை டெல்லி பத்திரிக்கையாளர்களுக்குப் பிரத்தியோகமாகப் போட்டுக் காண்பித்தார் வைகோ. அந்த உருக்கமான சி.டி-யை பார்த்த பல பத்திரிக்கையாளர்கள், "கொழும்புவில் இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது எங்களுக்கே தெரியாது!" என்று பகிரங்கமாகப் பேசிக்கொண்டனர். வைகோவை சந்தித்த டெல்லி வாழ் தமிழ் மாணவர்கள், "நீங்கள் தான் தமிழீழத்தின் இந்திய அம்பாசிடர்! என்று சொன்னதை நெகிழ்வுடன் கேட்டார் வைகோ!

-சரோஜ் கண்பத்

நன்றி : ஜூனியர் விகடன்.

No comments:

Post a Comment