Sunday, August 7, 2011
ராஜபக்சே அரசு ராணுவத்தின் துணையுடன் தமிழ்ப் பெண்களை கற்பழித்துச் சிதைத்த கொடுமைகளை யாராலும் மறக்க முடியாது - திருச்சி சிவா
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்பிக்கள் இந்திய நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளதற்கு தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சே உள்ளிட்ட எம்பிக்களை சபாநயாகர் மீராகுமார் அறிமுகம் செய்து வைத்தபோது எதிர்ப்பு ஏற்பட்டது. போர்க் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் இலங்கை நாடாளுமன்ற பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்று தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக எம்பிக்களின் எதிர்ப்பால் சபாநாயகரால் உரையை தொடர்ந்து வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து இலங்கை எம்பிக்களை இந்திய எம்பிக்கள் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி 01.08.2011 அன்று ஏற்பாடு செய்திருந்தார்.
கூட்டத்தில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்கள் குழுத் தலைவர் திருச்சி சிவா சில கருத்துக்களை பேசி தனது எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
கூட்டத்தில் திருச்சி சிவா பேசியதாவது :
60 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் சிங்களர்களின் எண்ணிக்கை 65 லட்சமாகவும், தமிழர்களின் எண்ணிக்கை 35 லட்சமாகவும் இருந்தது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்களர்களின் எண்ணிக்கை 11/2 கோடியாக உயர்ந்திருக்கிற போது, தமிழர்களின் எண்ணிக்கை அதே 35 லட்சத்தில் இருக்கிறது. தமிழர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிக்கவில்லை என்பதல்ல காரணம். தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர்கள் தமிழர்களை திட்டமிட்டு கொன்று குவித்து வருவதுதான் காரணம். குறிப்பாக உள்நாட்டுப் போரை ஒடுக்குகிறேன் என்கிற பெயரால், ராஜபக்சே அரசு ராணுவத்தினரின் துணையுடன் இரக்கமின்றி மனிதாபிமானமற்ற தன்மையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தும், தமிழ்ப் பெண்களை கற்பழித்துச் சிதைத்த கொடுமைகளை யாராலும் மறக்க முடியாது.
ராஜபக்சே அரசின் இரக்கமற்ற இந்த அனுகுமுறைகளால், லட்சக்கணக்கான தமிழர்கள் குடியிருக்கின்ற இடங்களை இழந்து, சொத்துக்களையும் இழந்து வேறு இடத்திற்கு குடி பெயர வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். இன்னமும், லட்சக்கணக்கான தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசினால் தரப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழுவும், இலங்கையில் மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் நடந்திருக்கின்றன என்று உறுதிபடுத்தியிருக்கிறது.
இப்போது வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, தமிழினத்தை அழித்து விட கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் ராஜபக்சே அரசின் உணர்வுகளை பிரதிபலிக்கும் குழு. இலங்கையில் நடைபெறுகின்ற வன்முறை, மனித உரிமை மீறல்கள், அடக்குமுறை தமிழர்களை அழிக்கும் முயற்சி இவற்றைக் கண்டித்து தமிழினத்தின் மீது வெறுப்புணர்வு காட்டும் இவர்களோடு நட்பு பாராட்ட முடியாது என்கிற கருத்தை வலியுறுத்தி நான் வெளிநடப்பு செய்கிறேன்.
இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.
தொடர்ந்து தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா,
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்கள். அங்கே தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு இன்னும் வசதி வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இலங்கை ராணுவம் செய்தது அனைத்தும் மனித உரிமை மீறல்கள் என்று ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த விசாரணைக் குழுவும் அறிவித்திருக்கிறது.
இலங்கை அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டிக்கும் வகையில் இவர்களோடு நட்பு பாராட்ட முடியாது. இங்கே வந்திருக்கும் இந்த குழு, தமிழர்களை ஒழிக்க வேண்டும் என்ற கங்கனம் கட்டுகிற ஒரு அரசின் பிரதிநிதிகள். இந்த காரணத்தினால் அவர்களோடு நட்பு பாராட்ட எங்களால் முடியாது என்கிற காரணத்தை பதிவு செய்து, இதனை கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன் என்று கூட்டம் துவங்கிய உடனேயே வெளியே வந்துவிட்டேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment