Labels

Tuesday, August 30, 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனை: சட்ட விதிகளைவிட மனித நேயமே முக்கியம்: கி. வீரமணி



பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள சட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டும் அறிக்கை வருமாறு:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை, அளிக்கப்பட்ட மூன்று பேர்களான பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கை - மனித உரிமை அமைப்புகள், மனிதநேயர்கள் அனைவரது (மக்கள்) சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஆகும்.

கருணை மனுவை நிராகரித்தது ஏன்?

இதனை ஏற்கெனவே பதவியிலிருந்த இரண்டு குடிஅரசுத் தலைவர்கள் நிராகரிக்காமல் வைத்திருந்தனர். இப்போது மூன்றாவதாக வந்துள்ளவர் (உள்துறை அமைச்சகத்தின் கருத்துப்படி) நிராகரித்து விட்டதோடு, அந்த ஆணையினை வேலூர் மத்திய சிறைச்சாலைக்கும் அனுப்பியுள்ளார். இதனால் விரைவில் அவர்களது தூக்குத் தண்டனையை நிறைவேற்றிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் நிலையில், இக்கடைசி நிமிடத்தில்கூட அத்தண்டனையை நிறுத்தி, மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை வட இந்தியத் தலைவர்களாலும்கூட வற்புறுத்தப்படுகிறது. இதில் மனிதநேயம் பொங்கி, மனிதாபிமான அணுகுமுறை காட்டப்படல் வேண்டும் என்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இம்மூவரும் சுமார் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளனர். இதுவே ஓர் ஆயுள் தண்டனைக் காலமாகும். தூக்குத் தண்டனையை ஏற்பதைவிட மிகவும் கொடூரமான சித்ரவதையாகும். இதை எண்ணிப் பார்க்க ஏனோ தவறியது குடிஅரசுத் தலைவரின் முடிவு. இதுபற்றி காங்கிரஸ் கட்சி தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள், தமிழ் இன உணர்வாளர்கள், மனிதநேய அடிப்படையில் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைத்துள்ள நிலையில், அவர்களது கருணையும், மனிதாபிமானமும் இந்த மூவர் விஷயத்தில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.

முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்

மற்ற பல்வேறு செய்திகளில் அணுகுமுறை, முடிவுகளில் முதல் அமைச்சரிடம் நாம் மாறுபட்ட நிலையிலும், வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் முதலிய அனைவருக்கும் அவர் இப்போது முதல் அமைச்சர் என்ற முறையில் கருணை காட்டுவதை - கடமையாகக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நாமும் வலியுறுத்துகிறோம்.

அடுத்து, சட்டரீதியாகவே இவர்கள் மூவர் விஷயத்தில் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கின் பல்வேறு சட்ட அம்சங்கள் உள்ளன என்பதால், நீதிமன்றங்களிலும்கூட அரசு சார்பிலேயே ஆலோசனைகள் வழங்க இடம் உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் நடைமுறை

எடுத்துக்காட்டாக,
இந்த மன்னிப்பு - கருணை வழங்கும் விதிகள் இந்திய அரசியல் சட்டத்தில் புகுத்தப்பட்டதே, பிரிட்டிஷ் பாராளுமன்ற, நடவடிக்கைகள் - விதிகள் - அங்குள்ள நீதிமுறைகளின் அடிப்படையில் என்பது விவரம் தெரிந்த அனைவரும் அறிந்த ஒன்று.

1907இல் இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சர் (Home Secretary என்று அழைக்கப்பட்டவர்) ஹெர்பட் கிளாட்ஸ்டன் அவர்கள் பிரிட்டனின் அவுஸ் ஆஃப் காமன்ஸ் என்ற மக்கள் அவையில், இந்த மன்னிப்பு வழங்குதல், கருணை காட்டுதல் சம்பந்தமான விதிகளின் பயன்பாடு பற்றி விளக்குகையில், குறிப்பிட்டார். அது சட்டப் புத்தகங்களிலும் வெளியாகியுள்ளது.

Earlier in 1907, Herbert Gladstone, Home Secretary, in a speech in the House of Commons, emphasised that numerous considerations are relevant and that the exercise of the prerogative does not depend in principles of strict law and justice, still less of sentiment. “It is a question of policy and judgment in each case, and in my opinion, a capital execution which in the circumstances, creates horror and compassion for the culprit rather than a sense of indignation at his crime is a great evil.”

1907 ஆம் ஆண்டிலே இங்கிலாந்து நாட்டின் உள்துறைச் செயலாளர் ஹெர்பர்ட் கிளாட்சன் பொது மக்கள் அவையில் (House of Commons) பேசும்போது, இதில் பல்வேறுபட்ட விஷயங்கள் பரிசீலனை செய்யப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என்பதையும், முடிவு எடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்துவது நீதி மற்றும் சட்டக் கொள்கைகளையே சார்ந்திருப்பது அல்ல என்பதையும், அதைவிட மன உணர்வுகளை சார்ந்திருப்பது மிகவும் குறைவானதே என்பதையும் வலியுறுத்தினார். ஒவ்வொரு வழக்கிலும் அடங்கியிருப்பது கொள்கை மற்றும் மதிப்பீடு பற்றிய ஒரு கேள்வியேயாகும். மரண தண்டனை என்பது அதன் சூழ்நிலைகளில் பெரும் பீதியைக் கிளப்புவதே என்பதும், அவரது குற்றம் மிகப் பெரும் கொடுமையானது என்று குற்றம் சாட்டுவதை விட, கருணை காட்டுவதே சிறந்தது என்பதும் எனது கருத்தாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்ல, நமது இந்திய சட்டக் கமிஷன் அறிக்கைகளில்கூட இந்தக் கருணை காட்டுதலில் பல்வேறு முக்கிய அம்சங்களைக் கணக்கில் எடுத்த பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது (1967) Vol I, பக்கங்கள் 317-18.

கொலைக் குற்றம் புரிந்து தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பவர்கள்.

(1) ஏற்கெனவே திட்டமிட்டு பேசினர். Pre-meditation

(2) அவர்களது வயது

(3) அவர்களது மனது, உடல் நிலை,

(4) அவர்களது பழைய வரலாறு பழைய குற்றவாளியா என்பன

(5) வெளியே இருந்துவந்த நிர்பந்தச் சூழ்நிலை.

இத்தகைய அம்சங்களையெல்லாம்கூட ஆய்வுக்கு எடுத்து பரிசீலிக்கப்பட்டுத்தான் இறுதி முடிவு (நிராகரிப்பது போன்ற) வர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மேலவை கருணை அப்பீலை முடிவு செய்யுமுன்பு, உள்துறை அமைச்சகம், இந்த வழக்கில் சரியாக, முறையாக விசாரிக்கப்படாமல் உள்ளது என்ற ஒரு துளிசந்தேகம் ஏற்பட்டாலும், ஜூரிகள் (அங்கு ஜூரிகள் முறை உண்டு) குற்றவாளி என்று தீர்ப்பளித்துத் தூக்குத் தண்டனையை பரிந்துரை செய்து ஏற்ற நிலையிலும்கூட, மறுபரிசீலனை - மறுவிசாரணை செய்தாக வேண்டும் என்பதே சட்டப் பூர்வ நிலையாகும்.

இங்கிலாந்து நீதிமன்றத்தில் இப்படி தவறு நடந்துள்ளதை திருத்தும் மறுவிசாரணை வழக்கேகூட நடந்துள்ளது.

அங்குள்ள தலைமை நீதிபதி Lord Chief Justice லார்டு கோடர்ட் (Lord Goddard) என்பவர் முன்னால் கிரிமினல் அப்பீல் மறுவிசாரணைக்கு வந்து (மன்னருக்குத் தரப்பட்ட கருணை மனு வழக்கில்) நடைபெற்ற வழக்கில், தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டவர் நிரபாரதி என்பது வெளியாக்கப்பட்டது.

இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டினை சட்ட ரீதியாக, நியாய அடிப்படையில் எடுத்து வைக்கவும் இடம் உண்டு.

மற்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் ஓர் ஆலோசனை வாரியம் (Advisory Board) அமைக்கிறார்கள். இங்கு அதுபோன்ற எதுவும் இல்லாததால் அவர்கள் கருத்தறிந்தே, குடியரசுத் தலைவரோ, கவர்னரோ முடிவு எடுக்கும் நிலை இல்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

சட்டவிதிகளைவிட மனிதநேயம் முக்கியம்

சட்டம் - விதிகளைவிட மனிதநேயம் முக்கியம். சிறைத் தண்டனைகளின் தத்துவமே வெறும் தண்டிப்பு (Mere Punishment) என்பது மாறி, இப்போது Reformation குற்றம் செய்திருந்தாலும்கூட அவர்களைத் திருந்தி நல்வாழ்வு வாழச் செய்வதுதான் என்கிறபோது, இந்தக் கருணைப் பிரச்சினையில் அந்த அடிப்படையும் முக்கியம் அல்லவா?

மனமிருந்தால் மார்க்கம் உண்டு. நளினிக்குக் காட்டிய அதே கருணையை இம்மூவருக்கும் காட்டுவது மனிதநேய அடிப்படையில் தேவையல்லவா?

நமது அரசியல் சட்டப்படி பால் அடிப்படையில் வித்தியாசம் காட்டப்படுவதுகூட விரும்பத்தக்கதல்லவே. எனவே மத்திய, மாநில அரசுகள் மீண்டும் தங்களது மனிதாபிமானத்தினைக் காட்ட இந்த அரிய தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் - கேட்டுக் கொள்கிறோம்.

3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தொடர் பொதுக்கூட்டங்கள்- சீமான் :

நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதால் அவர்கள் தூக்கு கொட்டடி முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

உலகம் நாகரீகமான முறையில் எவ்வளவோ வளர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தண்டனை முறைகள் தவறு செய்த மனிதனைத் திருத்துமாறு இருக்க வேண்டும். தவிர அவனைச் சட்டத்தின் பெயரால் கொலை செய்வதாக இருக்கக்கூடாது.

கல்வியிலும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்விலும் மிகவும் மேம்பட்ட இன்றயை நாகரீக உலகம் மரண தண்டனையை, ஒரு கொடுங்குற்றமாகக் கருதுகிறது. அதனால் தான் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.

உலகத்துக்கே அகிம்சை போதித்ததாகக் கூறும் இந்தியாவில்தான் மரண தண்டனை இருக்கிறது. அரசியல் குறுக்கீடற்ற நேர்மையான, சுதந்திரமான, விசாரணை முறைகள் நமது காவல் துறை அமைப்பில் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முழுமையான வாய்ப்பு இந்தியாவில் அளிக்கப்படுவது இல்லை.

3 தமிழர்கள் இன்று தூக்கு கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருப்பதும் அவ்வாறே இதனை மாற்றி அமைக்கும் சமூகக் கடமை நம் அனைவரின் முன்பும் இருக்கிறது. தவறிழைக்காத 3 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரியும் இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

முதற்கட்டப் பயணத்திட்டம் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 26 ந்தேதி பல்லடத்திலும், 27 ந்தேதி திருச்சியிலும், 28 ந்தேதி நெல்லையிலும், 29 ந்தேதி கடலூரிலும், 31 ந்தேதி கோவையிலும், செப்டம்பர் 2 ந்தேதி மன்னார்குடியிலும் கூட்டங்கள் நடைபெறுகிறது. அனைத்துக் கூட்டங்களிலும் நான் கலந்து கொண்டு பேசுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 பேரின் தூக்கு தண்டனை: மத்திய, மாநில அரசு நினைத்தால் தடுக்க முடியும் - வைகோ :

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் எழுதிய நூலின் இந்தி பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கு உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அர்ப்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,


மத்திய அரசு நினைத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவர்கள், கருணை உள்ளத்தோடு, தாய் உள்ளத்தோடு இந்த மூன்று உயிர்களையும் காப்பற்ற வேண்டும் என்று கட்சியினரையெல்லாம் கடந்து அனைவரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். மாநில அரசை வேண்டியிருக்கிறோம். மத்திய அரசு இந்த கட்டத்தில் கூட தடுத்து நிறுத்த முடியும். மாநில அரசு இதனை தடுத்த நிறுத்த இயலும். அவர்களையும் எப்படியாவது இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறோம்
என்றார்.

மூவரின் தூக்கு தண்டனையை குறைப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் முடியும் - ராமதாஸ் :

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்ததற்கான அதிகாரப்பூர்வமான ஆணை வேலூர் சிறை நிருவாகத்திற்கு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த 7 நாட்களில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தண்டனை நிறை வற்றப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது மனிதாபிமானமுள்ள அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருக்கிறது.


தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தடா சட்ட விதிகளுக்கு முரணாக 19 வயதிலேயே கைது செய்யப்பட்டவர். தடா சட்ட விதிகளின்படி, சி.பி.ஐ.யால் சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன் ஆகியோருக்கும் இதே முறையில்தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தனிமை சிறை கொட்டடியில் கொடுமையை அனுபவித்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த கருணை மனு மீது 11 ஆண்டுகள் கழித்து குடியரசு தலைவர் முடிவெடுத்துள்ளார். ஏற்கெனவே தூக்கு தண்டனையைவிட மிகக் கொடுமையான தனிமை சிறை தண்டனையை அனுபவித்துவிட்ட மூவருக்கும் மீண்டும் ஒரு தண்டனை வழங்குவது நீதியாக இருக்காது.


ஒருவரின் கருணை மனு மீது முடிவெடுப்பதில் காலதாமதம் செய்யப்பட்டால், அவருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எத்தனையோ தீர்ப்புகளை வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவீந்தர் சிங்பால் புல்லார் என்பவரின் கருணை மனு மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 23ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் காட்டப்பட்டது சரியல்ல என்றும், இதை அடிப்படையாக வைத்து அவரது தண்டனையை குறைப்பது குறித்த கோரிக்கை மீது முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து முருகன், சாந்தன், பரறிவாளன் ஆகிய மூவருக்கும் நீதி வழங்குவதற்கு பொருந்தும்.


இன்னொருபுறம் இந்த மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், மாநாடு, மனிதசங்கிலி எனப் பல்வேறு மக்கள் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாகரிகமான சமுதாயத்தில் தூக்கு தண்டனை என்பது பெரும் களங்கமாக இருக்கும் என்று மனிதஉரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இம்மூவரும் தண்டிக்கப்பட்ட இராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் கார்த்தி கய ன, இந்தியாவில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


எந்த நிமிடம் உயிர் பறிக்கப்படுமோ என்ற வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் மூவரையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக அரசுக்கு இருக்கும் நிருவாக அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களின் தூக்கு தண்டனையை குறைப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் முடியும். எனவே, இம்மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்வதற்காக தமிழகச் சட்டப் பரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment