Sunday, August 7, 2011
என்னை சந்தித்த ஈழத் தம்பி, எங்கே குத்தினால் என்ன நெல்லு அரியாக வேண்டும் அவ்வளவுதானே..: திருமா பேச்சு
தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், இலங்கை இனப்பிரச்சனைக்கு தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் 07.08.2011 அன்று நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த கருத்தரங்கிற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
திருமாவளவன் பேசியதாவது:
தமிழ் ஈழமே தீர்வு என்று இந்த நேரத்தில் நாம் உரக்க முழங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தமிழ் ஈழத்தைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள். தமிழ் ஈழ கோரிக்கையை யாரும் முன் வைக்க மாட்டார்கள். ஏதேனும் ஒரு தீர்வை சொன்னால் அதை ஒப்புக்கொண்டு அங்கே உள்ளவர்கள் அடிபணிந்து கிடப்பார்கள் என்கிற மமதை சிங்கள இனவெறி ஆட்சியாளர்களிடம் உருவாகியிருக்கிறது. அவர்களின் ஆணவத்திற்கு, மமதைக்கு சம்மட்டி அடி கொடுக்கிற வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.
தமிழர்களின் துயரத்திற்கு தமிழ் ஈழம் அமைந்தால் தான் தீர்வு கிடைக்கும். பல ஆயிரம் தமிழர்களை ரத்த வெள்ளத்தில் கொன்று குவித்த ராஜபக்சே கும்பல் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ், பாஜக என மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் தமிழ் ஈழம் அமைவதை விரும்பவில்லை.
இருபத்தைந்து ஆண்டுகால ஆயுத போராட்டத்தில் தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஈழ விடுதலைக்கான குரல் எழுப்பப்படவில்லை. ஒரு சிலர் இங்கே அழைத்துவரப்பட்டு பேசப்பட்டார்கள். பேரணியில் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் மாநிலத்தில் தமிழ் ஈழ விடுதலைப்பற்றி ஆதரித்து பேசியது உண்டா. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். பாஜக ஆண்டபோதும் அதுதான் கொள்கை. காங்கிரஸ் ஆளுகிறபோதும் அதுதான் கொள்கை.
இந்துக்களுக்கான கட்சி என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொள்கிற பாஜக என்றைக்காவது அங்கே அழிக்கப்படுகிறவர்கள் இந்துக்கள் என்று கோபப்பட்டது உண்டா. அங்கே இடிக்கப்படுகின்ற கோயில்கள் இந்து கோயில்கள் என்று ஆத்திரப்பட்டது உண்டா.
பாஜக இந்த நாட்டை நான்கு முறை ஆளவில்லையா. என்றைக்காவது ஒருமுறையாவது அவர்கள் வெளியுறவுக் கொள்கையிலே மாற்றத்தை கொண்டுவந்தது உண்டா. ஒரு வாதத்திற்காக நான் சொல்லுகிறேன். இந்தியாவை ஆண்ட பாஜகவும் சரி, ஆண்டுக்கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கட்சியும் சரி, இது காங்கிரஸ் என்று அழைக்கப்படுகின்ற பாஜக. அது பாஜக என்று அழைக்கப்படுகின்ற காங்கிரஸ் கட்சி. அவர்கள் வெளிப்படையான மதவாத சக்திகள். இவர்கள் மறைமுகமான மதவாதிகள். அவர்களின் கொள்கையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். இவர்களின் கொள்கையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். ராஜபக்சேவின் கொள்ளையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான்.
தமிழ் ஈழத்தை தமிழ்நாட்டில் ஆதரிப்பவர்கள் யார். இன்று சட்டமன்றத்தில் அம்மா தீர்மானம் நிறைவேற்றிவிட்டார். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று. எத்தனையோ தீர்மானங்கள் அப்படி நிறைவேற்றப்பட்டுவிட்டன. எல்லாம் அவை குறிப்புகளாகத்தான் இருக்கின்றன. நான் கேட்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவிலே தமிழ் ஈழம் தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதிமுக நண்பர்களை பார்த்து நான் கேட்கிறேன். அம்மாவை பார்த்து நான் கேட்கிறேன்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக இந்த இனம் நசுக்கப்பட்டிருக்கிறது. அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறது. அழிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையிலே மீண்டும் ஒற்றை ஆட்சியின் கீழ் சமஉரிமை என்பது பொருந்தாது. அது நடைமுறைக்கு ஒத்துவராது. ஆகவே அங்கு புலிகள் இல்லை என்று நீங்கள் சொல்லுகிறபடி நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும் புலிகள் அங்கே இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களின் தேவை தமிழ் ஈழம் தான். எங்களின் ஒரே கோரிக்கை தமிழ் ஈழம்தான். வெளிப்படையாக அந்த தீர்மானத்தை நிறைவேற்ற அதிமுக முன்வருமா.
எம்ஜிஆர் தலைமையில் இருந்த அதிமுக வேறு. அன்று இருந்த இந்திய அரசியல் சூழல் வேறு. ஆனால் அம்மா தலைமை ஏற்ற பிறகு, தமிழ் ஈழ விடுதலை தொடர்பாக என்ன நிலைப்பாடு.
தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லுகிற திமுக. பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் திமுக இன்று ஒரு சூழ்நிலை கைதி. தனி ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றினாலும், அதிமுகவின் நிலை என்னவோ அதுதான் திமுகவின் நிலை.
தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள். அதிமுகவில் ஒரு கோடி பேர் உறுப்பினர்கள் என்று சொல்லப்படுகிறது. திமுகவில் அதைப்போலவே ஒரு கோடி பேர் உறுப்பினர்கள் என்று சொல்லப்படுகிறது. ஏறத்தாழ இரண்டு கோடி பேர் அமைதி. ஈழம் தொடர்பாக வாய் திறக்க முடியாது. பேச முடியாது. புலிகளை ஆதரிக்க முடியாது. தமிழ் ஈழம்தான் தீர்வு என்று களம் இறங்கி போராட முடியாது. இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் தமிழ் ஈழம் கூடாது என்கிற நிலை. காங்கிரஸ் எதிரிகள். தமிழ்நாட்டில் என்ன ஆதரவை நாம் வென்றெடுத்திருக்கிறோம்.
சும்மா 100 பேர் வைத்திருக்கிறவன்தான் வெளியே வந்து கத்திக்கிட்டு இருக்கிறான். ஈழம் ஈழம் அது ஒன்றே எங்கள் தாகம் தாகம். அவன் பேனர் வைத்திருக்கிற கட்சி. அது கட்சிக்கூட கிடையாது குழு.
தமிழ்நாட்டிலே இன்றைக்கு வெளிப்படையாக தமிழ் ஈழமே தீர்வு. அது ஒன்றுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் வேட்கை என்று வெளிப்படையாக ஆதரிக்கிற கட்சிகள் இணைந்து கைகோர்த்து நிற்கிற கட்சிகள் பாமக விடுதலைச் சிறுத்தைகள்.
இந்த நிலையில் தமிழ் ஈழத்தைப் பற்றி பேசுகிறவர், யாரை சீண்டலாம், யாரை இடிக்கலாம். யாரை குற்றம் சொல்லலாம். யார் மீது பழி போடலாம் என்று ஒரு கும்பல் திரியுது. அவன் ஒரு நாளாது ஒரு தீப்பெட்டி அனுப்பியிருக்க மாட்டான். ஒரு மண்ணெண்ணெய் அனுப்பி இருக்க மாட்டான். சர்க்கரை அனுப்பி இருக்க மாட்டான். மருந்து அனுப்பி இருக்க மாட்டான். இங்கிருந்து ஈழத்துக்கு எந்த பொருளையுமே அனுப்பி வைச்சிருக்க வாய்ப்பே கிடையாது. சும்மா சினிமாவிலே ஆடியிருப்பான். பாடியிருப்பான். கூத்தடிச்சுருப்பான்.
திருமாவளவன் துரோகம் இழைத்துவிட்டார். திமுக கூட்டணியில் இருந்ததால் பாமக துரோகம் இழைத்துவிட்டது. பாமக நடத்தாத மாநாடுகளா. விடுதலைச் சிறுத்தைகள் நடத்தாத போராட்டங்களா. இந்த கட்சிகள் களம் அமைத்து போராடாமல் இருந்திருந்தால், இத்தனை காலமும் இந்த அரசியலை அடைகாத்து இங்கு கொண்டு வந்திருக்க முடியுமா.
தேர்தல் அரசியலில் தவிர்க்க முடியாத நிலைப்பாடுகளை எடுக்க நேரிடுகிறது. கொள்கை அடிப்படையில்தான் கூட்டணி அரசியல் வைக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் இந்தியாவில் எந்த கட்சியும் எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க முடியாது. பாஜகவோடு காங்கிரஸ் வைத்துக்கொள்ள முடியாது. காங்கிரசோடு பாஜக வைத்துக்கொள்ள முடியாது. திமுகவோடு அதிமுக வைத்துக்கொள்ள முடியாது. அதிமுகவோடு திமுக வைத்துக்கொள்ள முடியாது. அவ்வளவுதான். அதுதான் தவிர்க்க முடியாது. மற்றப்படி எல்லா கட்சிகளும் மாறி மாறிதான் வந்தாக வேண்டும் வேறு வழியில்லை. இது அரசியல் அதிகார பகிர்வுக்கான ஒரு தற்காலிக, இடைக்கால ஒப்பந்தம் அவ்வளவுதான். ஒரு தம்பி சொன்னான். என்னை சந்தித்த ஈழத் தம்பி, எங்கே குத்தினால் என்ன நெல்லு அரியாக வேண்டும் அவ்வளவுதானே. நீங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் உங்கள் ஆதரவு எங்களுக்குத்தான். அதுபோதும் அண்ணா என்று சொன்னான்.
பாமக தலைமையிலே தமிழீழ ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக உருவாக வேண்டும் என்பது 2009ல் நான் சொன்னேன். வேண்டுகோளாகத்தான் வைத்தேன்.
திருமாவளவன் ஏன் திமுக கூட்டணியில் இருக்கிறார். பதவி வெறி. பதவி ஆசை. காழ்ப்புணர்ச்சி. ஆதரவைக் கூட எப்படி சிதைக்க வேண்டுமோ அந்த வல்லமை தமிழனிடம் மட்டும்தான் இருக்கு. இவன் ஒன்னும் அங்க செய்யறதுக்கு யோக்கிதை கிடையாது. எவன் செய்யுறானோ அவனை எல்லாம் வெளியேத்துவான். ஏன் என்றால் அவனுக்கு அந்த விளம்பர வெறி வந்துவிட்டது.
நம்முடைய ஆதரவு சக்திகளையெல்லாம் ஒன்றிணைக்க வேண்டும். அதுதான் நமக்கு முக்கியம். ராமதாஸ் எந்த அணியில் இருந்தாலும், திருமாவளவன் எந்த அணியில் இருந்தாலும் தமிழ் ஈழ ஆதரவு அணி என்று எந்த அணியில் இருந்தாலும் பேசட்டும். அதுதான் முக்கியம்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கான போராட்டம். அது அதிமுக ஆதரவு போராட்டமா. திமுக ஆதரவு போராட்டமா அல்ல. தமிழ்நாட்டில் இன்றைக்கு அப்படித்தான் இங்கே இருக்கக்கூடிய தமிழின உணர்வாளர்கள் தமிழ் ஈழ ஆதரவு என்கிற பெயரால் தமிழ் ஈழத்துக்கு எதிரான நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இன்றைக்கு இது எப்படி மாறிவிட்டது என்றால், சிங்களவனை எதிர்ப்பதற்கு பதிலாக, ராஜபக்சேவை எதிர்ப்பதற்கு பதிலாக, இந்திய அரசை எதிர்ப்பதற்கு பதிலாக, சோனியா காந்தியை எதிர்ப்பதற்கு பதிலாக, அவர்களது அரசியலை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, திருமாவளவன் போன்ற சில தனி நபர்களை விமர்சிக்கின்ற அளவுக்கு இது சுருக்கப்பட்டுவிட்டது.
இன்றைக்குக் கூட நான் தயார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய. அது ஒன்றும் பெரிய மகுடம் இல்லை. அதனால் ஒரு பயனும் கிடையாது. அது காலில் உரலை கட்டிக்கிட்டு நடக்கிற மாதிரி. யாராவது சொன்னால்தான் எனக்கு ஞாபகமே வருது. நீ எம்பி என்று சொன்னால்தான் ஞாபகமே வருகிறது. நீ நாடாளுமன்றத்துக்கு போகவில்லை. டெல்லிக்கு போகவில்லையா. ஆயிரத்தெட்டு வேலை நமக்கு. இந்த கருத்தரங்கை நாளைக்கு நடத்துவதாக இருந்தோம். வேறு வழியில்லாமல் நாடாளுமன்றத்தில் போய் உட்கார்ந்து வருவோமே. பள்ளிக்கூடத்தில் போய் உட்கார்ந்து வருவதுபோல் உட்காந்த்துவிட்டு வருவோமே. அங்க போன உடனேயே நினைச்ச மாதிரியெல்லாம் பேசிவிட முடியாது. அதைப்பற்றி பேசினால் வேறுமாதிரி போகும். நேரமாகும். நாக்கு வழிக்கக்கூட பயன்படாத பதவி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி. அதற்காக எல்லாம் திருமாவளவன் தேர்தல் அரசியலுக்கு வரவில்லை. இரண்டரை வருடம் மிச்சம் இருக்கும்போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவன் திருமாவளவன். பதவி, அந்த ஆசை, இந்த ஆசை என்பதற்கு எல்லாம் போகவில்லை. இங்க இருக்கிறவன் தான் அரசியல் பன்ன வேண்டும் என்பதற்காக சொல்கிறான்.
தமிழ் ஈழத்துக்காக உங்களோடு கைகோர்த்து நிற்பதற்கு எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேவேளையில் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சி பெற வேண்டும். இதற்காக நான் போராடி கொண்டிருக்கிறேன். எங்கள் கட்சியின் தோழர்களை மதித்து அவர்களின் எண்ணங்களை மதித்து அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு நெருக்கடி நிலையில் நின்று கொண்டிருக்கிறேன்.
கட்சியை கலைத்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு தம்பி வா என்று அழைத்தால் வர தயாராக இருப்பவன் திருமாவளவன். எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. குடும்ப வாழ்க்கை இல்லை. எனக்கு பதவி வேண்டாம். பரிசு வேண்டாம். நான் மிகவும் சாதாரணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் துறக்க நான் தயாராக இருக்கிறேன்.
தந்தை பெரியாரைப் போல எந்த பதவியும் இல்லாமல், எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றுவோம் என்று அழைத்தால் இந்த நொடியே நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்த 25 ஆண்டுகாலமாக நான் பாடுபட்டு உருவாக்கியிருக்கிற இந்த அமைப்பு. அமைப்பைச் சார்ந்த பொறுப்பாளர்கள். பொறுப்பாளர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் இவற்றையெல்லாம் நான் கவனத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடியில் நின்று கொண்டிருக்கிறேன்.
ஆகவே எதிர்காலத்தில் எப்படி நாம் இணைந்து பணியாற்றுவது என்பது பற்றி இன்னும் இன்னும் கூடி கூடி விவாதிப்போம். பேசுவோம். ஆனால் எந்த விவாதமும் தேவையில்லை. ஈழத்திற்கான களத்தில், மொழியை காப்பாற்கான களத்தில், தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கான களத்தில் நிபந்தனையற்ற முறையில் நான் கைகோர்த்து நிற்க தயாராக இருக்கிறோம்.
தமிழ் இனம் விடுதலைப் பெற்றுவிடக் கூடாது என்று கருதுகிற கட்சிகள் எவை. தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று போராடுகிற சக்திகள் எவை. இவற்றை மக்களிடைய அடையாளம் காட்ட வேண்டியது நமது கடமை. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை மாறாத வரையில், இந்திய அரசு ஒருபோதும் தமிழ் ஈழம் வென்றெடுப்பதற்கு துணை நிற்காது. சர்வதேசம் அழுத்தம் ஏற்படாத வரையில் இந்திய அரசு ஒருபோதும் வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்ளாது
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
2009 ஏப்ரல் 30ல் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியது... - ராமதாஸ் பேச்சு :
பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,
2009 ஏப்ரல் 30ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுகவின் பொதுச்செயலாளர், இப்போது இருக்கின்ற முதல்வர் அவர்கள் முசிறியில் பேசிய பேச்சு. 'இலங்கை தமிழர்கள் தனி நாடு பெறவேண்டும். பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் 1971ல் வங்கதேசம் உருவானதுபோன்று, அது எந்த சர்வதேச சட்டத்தின்படி படைகளை அனுப்பியது. 1987 ராஜீவ்காந்தி எந்த சர்வதேச சட்டத்தின்படி இலங்கைக்கு அமைதி காக்கும் படையினை அனுப்பினாரோ, அதே சர்வதேச சட்டத்தின்படி நாங்கள், நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் அணிதான் வெற்றிபெறப் போகிறது. நாங்கள் மத்தியிலே ஆட்சி அமைப்போம். (இப்போது பேசுறதெல்லாம் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா). அதே சர்வதேச சட்டத்தின்படி நாங்களும் இலங்கைக்கு இந்திய படையை அனுப்பி, அங்குள்ள தமிழர்களுக்கு தனி நாடு அமைத்து தருவோம் என்றார்.
இப்போது நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இந்த தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் இப்பொழுது கொண்டு வாருங்கள். உங்களுக்கு தயக்கம் இருந்தால் எங்கள் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு அவர்களை ஒரு தீர்மானத்தை கொண்டு வரச் சொல்லுகிறோம். அதை நீங்கள் ஆதரியுங்கள்.
1997 பிப்ரவரி 1ஆம் தேதி ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி மாநாடு 5 லட்சம் பேர் பங்கேற்ற மாநாட்டை சென்னையில் நடத்தினோம். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை விட்டால் தமிழ்நாட்டில் இவர்களை உயர்த்தி பிடிக்க வேறு யார் இருக்கிறார்கள்.
ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள், வேறு கட்சிகள் சொல்லட்டும். நாங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் துணிந்து சொல்லமாட்டார்கள். திருமாவளவன் சொன்னதைப்போல் தமிழ்நாட்டு அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும், அதையும் தாண்டி எந்த நிலையிலும் தமிழை பாதுக்க வேண்டும். தமிழ் இனத்தை பாதுகாக்க வேண்டும். தமிழ் ஈழத்தை பெற்றே தீர வேண்டும். அடைந்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளோடு எந்தவித போராட்டத்திற்கும் இந்த இரண்டு கட்சிகளையும், கட்சிகளின் தொண்டர்களையும் தொடர்ந்து தயார் படுத்தி வந்திருக்கின்றோம். அதனுடைய வெளிப்பாடுதான் திருமாவளவன் தனது இன்னுயிரையும் விட தயாராக இருந்தார்கள். நான் சென்றுதான் இன்னும் நாம் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று கூறி, அந்த உண்ணாவிரத்தை நிறுத்துமாறு நான் வேண்டுகோள் வைக்க, அவரும் அதனை ஏற்று அந்த உண்ணாவிரத்தை நிறுத்தினார்.
இதைப்பற்றியெல்லாம் சிலர் விமர்சிக்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். தமிழ் ஈழமே தீர்வு. அதற்காக எந்த விலை கொடுக்கவும் இந்த இரண்டு இயக்கமும் தயாராக இருக்கிறது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment