Thursday, August 18, 2011
கேட்பது உயிர்ப் பிச்சை அல்ல... மறுக்கப்பட்ட நீதி! - அலறும் பேரறிவாளனின் அம்மா!
கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க, மரணத்தின் விளிம்பில் நிற்கிறார் பேரறிவாளன்.
தன் மகனுக்காக, சட்டத்தின் அத்தனை கதவுகளையும் தட்டித் தட்டி சோர்ந்துகிடக்கிறார் அந்தத் தாய் அற்புதம் அம்மாள்!
''என் பையனுக்கும், ராஜீவ் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அறிவை வெளியே கொண்டுவர்றதுக்கு எத்தனையோ தடவை போராடினோம். சட்டம் எங்க பக்க நியாயத்தை, கருத்தைக் காது கொடுத்துக் கேட்கவே மாட்டேங்குதே. 21 வருஷங்களா ஒவ்வொரு நிமிஷமும் 'என்ன நடக்குமோ’ன்னு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம். நல்லது நடக்கும்கிற நம்பிக்கை பொடியாப் போயிடுச்சே...
13 ஈழத் தமிழர்கள், 13 இந்தியத் தமிழர்கள்னு சரிபாதியாச் சேர்த்து இந்த வழக்கை ஜோடிச்சு இருக்காங்க. 1991, ஜூன் மாசம் 11-ம் தேதி, அறிவை விசாரிக்கணும்னு வந்தாங்க. நாங்களே அனுப்பிவெச்சோம். ஆனா, அடுத்த சில நாட்களில் பத்திரிகைகளில், 'பேரறிவாளனைத் தேடிக் கண்டுபிடிச்சோம்’னு செய்தி வந்தது.
படுகொலை செய்யப்பட்டது முன்னாள் பிரதமர் ராஜீவ். அதைப்பத்தி விசாரணை வெளிப்படையா நடந்திருக்கணும் இல்லையா..? என் பையனைப் பிடிச்சிட்டுப் போனப்ப, அவனுக்கு 19 வயசு. அப்ப தடா சட்டம் இல்லை. ஆனா, அதுக்கு அப்புறம் இந்த வழக்கை தடாவுக்குக் கீழே கொண்டுவந்தாங்க. தமிழ்நாட்டுல தடாவுக்குக் கீழே வந்த வழக்கு இது ஒண்ணுதான். அந்த சட்டப்படி, 20 வயசுக்கு மேற்பட்டவங்களைக் கைது செய்யலாம், இதற்கு முன், 'அவர் எந்தக் குற்றச் செயல்களிலாவது ஈடுபட்டிருக்காரா, அவர் குடும்பம் குற்றம் ஏதும் செய்திருக்கா?’னு பார்ப்பாங்க. இந்த வழக்கில் எதையுமே கடைப்பிடிக்கலை. ஒவ்வொரு முறை என் மகன் நீதிமன்றத்துக்கு வரும்போதும் அவனோட பேசுறதுக்குக்கூட நாங்க அவ்ளோ கஷ்டப் பட்டோம்...
விரும்பி வாக்குமூலம் கொடுத்ததா சொல்றாங்க. ஆனா, சிறையில் எப்படி வாக்குமூலம் வாங்குவாங் கங்கிறது உங்களுக்கு எல்லாம் தெரியாததா? அதுவும் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார். அதை நீதிமன்றத்தில் நிராகரிச்சுடுவாங்கனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனா, இந்த வழக்கில் அந்த வாக்குமூலத்தைச் சேர்த்துட்டாங்க. உச்ச நீதிமன்றம், 'இந்த வழக்கு தடாவின் கீழே விசாரிக்கப்பட்டது தவறு’னு சொல்லி இருக்கு. ஆனா, வாக்குமூலத்தை மட்டும் எப்படி ஏத்துக்கிறாங்கனு தெரியலையே?
கைது செய்யப்பட்ட 26 பேரில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டாங்க. மூணு பேருக்கு ஆயுள் தண்டனை. மீதி நாலு பேருக்கு மரண தண்டனை. இதில் இரண்டு பேர் இந்தியத் தமிழர்கள், மீதி ஈழத் தமிழர்கள். நளினிக்கு ஆயுள் தண்டனையாக் குறைச்சாங்க. இப்ப முருகன், சாந்தன், பேரறிவாளன் மூணு பேரோட கருணை மனுவை 12 வருஷங்கள் கழிச்சு நிராகரிச்சிருக்காங்க. இது நியாயமா?
ஒன்பது வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்தாங்கிறதுதான் என் மகன் மேல் இருக்கும் குற்றம். அதுகூட ஒரு பெட்டிக்கடைக்காரர் சொன்னதை வெச்சுப் போட்டிருக்காங்க. அந்த 'பெல்ட் பாம்’ஐ யார் செஞ்சாங்கனு இன்னிக்கு வரை யாருக்குமே தெரியலை.
சோனியா காந்தியே, 'எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ, இவர்களைத் தூக்கிலிடுவதில் விருப்பம் இல்லை. உங்களிடம் (ஜனாதிபதியிடம்) கருணை மனு வரும்போது, இவர்களுக்குத் தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை’னு கடிதம் எழுதி இருக்காங்க. அப்படி இருந்தும் கருணை மனு நிராகரிக்கப்பட்டு இருக்கு. முன்பு பெட்டிக்கடைக்காரரின் சாட்சியை ஏற்றுக்கொள்ள முடியாதுன்னு சொன்ன நீதிபதிகள் பின்னர் ஏனோ ஏத்துக்கிட்டாங்க. மரண தண்டனை அளிக்கும் கட்டா யத்துக்கு தள்ளப்பட்டுட்டாங்க.
ஏ-1 பிரிவில் இருக்கும் நளினிக்கு ஆயுள் தண்டனை கொடுத்திருக்காங்க. ஆனா, ஏ-18 அதாவது, 18-வது குற்றவாளியா இருக்கும் என் மகனுக்குத் தூக்குத் தண்டனையா? நளினிக்குத் தண்டனை குறைச்சதுக்கு அப்புறம்தான், பிரியங்கா போய் சந்திச்சிருக்காங்க. மரண தண்டனை கூடாதுனு ஊருக்கெல்லாம் பிரசாரம் பண்ணிட்டு இருக்கேன். ஆனா, கடைசியா என் மகனுக்கே இந்த நிலைமையா?
பரோலில்கூட விடாம, பரீட்சை எழுதவிடாம, அவனோட வசந்த காலத்தை எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிக்குறான்யா... யாரும் முகம் சுளிக்கிற மாதிரிகூட பேச மாட்டான். அவன் 10-ம் கிளாஸ் படிக்கிறப்ப என்.சி.சி. ஸ்டூடன்ட். இவனுக்கு என்ன ரேங்க் கொடுக்கறதுனு அதிகாரிங்களே திண்டாடி இருக்காங்க. பெரியார் கொள்கை வழி வந்த குடும்பம்கிறதால பொது நலத்துக்காக வாழணும்னு அவன் முடிவு செஞ்சதுதான் தப்பாப்போயிடுச்சு. அப்படிப்பட்ட புள்ளையைப் பெத்த எனக்கு இந்த சமூகம் 'கொலைகாரனைப் பெத்தவ’னு பட்டம் கொடுக்குது!
அறிவோட அப்பா குயில்தாசன் மனசு உடைஞ்சு வீட்டிலேயே கிடக்கார். அவர் நல்ல கவிஞர். ஆனா, இப்ப எல்லாம் பேனா எடுத்தா, சிறைபற்றி மட்டுமே எழுத வருதுங்கிறதால எதையும் எழுதறது இல்லை.
அறிவு கேட்கிறது எல்லாம் உயிர்ப் பிச்சை இல்லை... மறுக்கப்பட்ட நீதி! மனுஷங்க வாழ்ற நாட்டுலதானே நானும் இருக்கேன்... இங்க யாருக்கும் மனிதாபிமானமே இல்லையா?''
அந்த அம்மாவின் கண்ணீருக்கு காலம் தரப்போகும் விடை என்ன?
இன்னும் நம்பிக்கை இருக்கிறது!
கருணை மனு நிராகரிக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றப்போகும் தேதியை முடிவு செய்வார்கள். இந்த நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க முடியும் என்கிறார்கள், மரண தண்டனைக்கு எதிரான செயற்பாட்டாளர்கள். நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 72-வது பிரிவு இந்த அதிகாரத்தை குடியரசுத் தலைவர்களுக்கு வழங்குகிறது. சட்டப் பிரிவு 161, மாநில ஆளுநர்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது!
- ந.வினோத்குமார், படங்கள்: வீ.நாகமணி
நன்றி : ஜூனியர் விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment