Labels

Friday, August 12, 2011

ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் :வைகோ



இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி, டெல்லியில், பாராளுமன்றம் அருகே வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் யஷ்வந்த் சின்கா, ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொண்டனர்.


இலங்கைக்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்ள வேண்டும்., இலங்கை அரசை இன படுகொலை குற்றத்துக்கு உள்படுத்த வேண்டும்., இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை, ம.தி.மு.க. தலைவர் வைகோ வற்புறுத்தி வருகிறார்.

இந்த கோரிக்கைகளை வற்புறுத்தி நேற்று டெல்லியில் பாராளுமன்றம் அருகே ம.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பேனர்களுடன் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார்.


அவர், ‘’இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்து இருக்கிறது என்பது ஐ.நா. வெளியிட்ட அறிக்கை உறுதி படுத்துகிறது. அங்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள், இலங்கை ராணுவத்தால் 2009-ம் ஆண்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.


இலங்கை அரசை மத்திய அரசு தட்டிக்கேட்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும். ராஜபக்சேவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அவரை நீதியின் முன் நிறுத்த வேண்டும். ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.


இலங்கை தமிழர் பிரச்சினையை ஐ.நா. சபையிலும், சர்வதேச மனித உரிமை கழகத்திலும் விவாதிக்க பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்காத பிரதமரை கண்டிக்கிறோம். மத்திய அரசு தனது மவுனத்தை கலைத்து செயல்பட வேண்டும்.


தமிழர்களை கொன்று குவித்த காரணத்துக்காக, இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை வெளியேற்ற வேண்டும். இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்கு, தமிழ் ஈழம்தான் நிரந்தர தீர்வு
’’ என்று பேசினார்.

ஈழத்தமிழர்களை நாம் ஆதரிக்கிறோம் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறுவோம் - யஷ்வந்த் சின்கா :

பாரதீய ஜனதா தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான யஷ்வந்த் சின்கா,

’’இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதித்தால், இலங்கைக்கு சீனா உதவும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க இந்தியா தயங்குவதாக பிரதமர் கூறி இருக்கிறார்.

மத்திய அரசு சீனாவுக்கு பணிந்து விட்டதைதான் இது காட்டுகிறது.


இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் பேரணிக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில் நான் கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன். ஏன்? இலங்கைக்கு கடல் பயணம் செய்து, நமது எதிர்ப்பை காட்டவும் தயாராக இருக்கிறேன்.

ஈழத்தமிழர்களை நாம் ஆதரிக்கிறோம் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறுவோம்
’’என்று பேசினார்.

ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் - ராம்விலாஸ் பஸ்வான் :

லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பேசும்போது,

’’இலங்கை தமிழர்களுக்காக பாராளுமன்றத்திலும், வெளியேயும் போராட தயாராக இருக்கிறோம்.

டெல்லியில் உள்ள இலங்கை தூதர் அலுவலகம் முன் இந்த மாத இறுதியில், எங்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம். இதில் வைகோ கலந்து கொள்ள வேண்டும்.


இலங்கை தமிழர்கள் நமது சகோதரரும், சகோதரிகளும் என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம்.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ராணுவத்தினர் கொன்று குவித்ததை ஐ.நா. உறுபதிபடுத்துகிறது. ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?


இந்தியா முழுவதும், இலங்கை தமிழர்களுக்காக வைகோ தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும்
’’ என்று பேசினார்.

No comments:

Post a Comment