Labels

Friday, August 19, 2011

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் சந்திரிகாவின் ஒப்புதல் வாக்குமூலமும் - எழில்.இளங்கோவன்



இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் ஈழத்தில் வடக்கு ‡ கிழக்கு மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று உள்ளது.

இத்தேர்தலில் ஈழ விடுதலைக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 183 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ராஜபக்சேவின் கட்சி வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் தென்னிலங்கைச் சிங்களர் பகுதிகளில் அக்கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது.

இங்கே கவனிக்கத்தக்க செய்தி ஒன்று இருக்கிறது. விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கட்சி மற்றும் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஈழத்தமிழர்கள் வெற்றி பெறச் செய்துள்ளார்கள். அதுபோல சிங்களர் பகுதிகளில், தென்னிலங்கையில் சிங்களர்கள் ராஜபக்சேவை வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.

இதன் மூலம் ஈழம் வேறு, சிங்களம் வேறு என்று இரு இன மக்களும் தத்தம் தீர்ப்பை உறுதி செய்திருப்பது தெளிவாகிறது. ஈழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் இன்று களத்தில் இல்லாத நிலையிலும், ஈழ மக்கள் தம் வாக்குகளின் மூலம் தனி ஈழத்திற்கான அங்கீ காரத்தை வழங்கி இருக்கிறார்கள்.

உலக அளவிலும், ஐக்கிய நாடுகள் அவையினர் அறிக்கை மூலமாகவும் போர்க் குற்றவாளியாக நிற்கும் ராஜபக்சேவை, உலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று குரல்கள் வலுவாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில்தான், இந்த உள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பைத் தமிழர்கள் வழங்கியுள்ளார்கள்.

தேர்தல் தீர்ப்பு வெளியான இரண்டு நாள்களில் முன்னாள் பிரதமர் சந்திரிகா குமாரதுங்கா, ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். அவர் பேச்சில்:

" என்னுடைய தந்தை பண்டாரநாயக தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால்தான் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து நாட்டையே 30 ஆண்டுகள் நெருக்கடியில் தள்ளியது.

சிங்களத்திற்கு இணையான அந்தஸ்து தமிழுக்கும் வேண்டும் என்று தமிழர் இயக்கங்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. இதில் தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்ற கோரிக்கை பிறந்தது. அந்தக் கோரிக்கையும் ஏற்கப்படாததால் கூட்டாட்சி வேண்டும் என்று கேட்டார்கள். அதையும் நிராகரித்த காரணத்தால், தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கை பிறந்தது. அரசு நிர்வாகத்தில் தமிழர்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை, கல்வி வேலை வாய்ப்பில் அவர்களுக்கு எதுவும் கிடையாது. எங்கும் எதிலும் சிங்களம் மட்டுமே என்ற கொள்கை காரணமாகவே மிகப் பயங்கரமான மோதல்கள் வெடித்தன.

என்னுடைய தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே, தமிழர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்ததாலேயே, தமிழர்களிடையே 5 போராளிக் குழுக்கள் தோன்றின. அவர்களில் முன்னணியில் இருந்த விடுதலைப்புலிகள் உள்பட அனைத்துமே தமிழ் ஈழம் என்ற தனி நாட்டிற்காகப் போராடின. இந்நிலையில் இப்போதைய (ராஜபக்சே) அரசு, முழுக்க முழுக்க ஒரு சர்வாதிகார அரசு போல நடந்து கொள்வதைப் பார்த்து வியப்படைகிறேன் "

இலங்கையின் முன்னாள் பிரதமர் உண்மையைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதாவது தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டியதன் அவசியம் என்ன என்பதைச் சந்திரிகாவின் இந்தப் பேச்சு உறுதி செய்கிறது.

ஆகவே ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழ் ஈழம் ஒன்றுதான் இனிமேல் தீர்வு. தெற்கு சூடான், எரித்திரியா, கிழக்கு தைமூர் போன்ற நாடுகளின் விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து, அந்த நாடுகளின் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அந்நாடுகள் விடுதலை பெற்றன. இறுதியாக மக்கள் வாக்கெடுப்பின் மூலம் விடுதலை பெற்று 193ஆம் நாடாக மலர்ந்தது தெற்கு சூடான்.

இதே நடைமுறையை ஐ.நா. அவையும், உலக நாடுகளும் ஈழத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். ஈழத்தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படி வாக்கெடுப்பு நடத்தினால் இன்றைய உள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பை இன்னும் வலுவாக வழங்குவார்கள் ஈழத்தமிழர்கள். அதனடிப்படையில் 194ஆம் நாடாக தமிழ் ஈழம் அமைந்து, ஐக்கிய நாடுகள் அவையில் இடம் பெற வேண்டும் என்பதுதான் ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு.

ராஜபக்சேவுக்குத் தண்டனையும், தமிழ் ஈழ நாடு ஐ.நா.வில் இடம் பெறும் நாளும் எந்நாளோ?

- எழில்.இளங்கோவன்

No comments:

Post a Comment