Labels

Friday, August 12, 2011

ராஜிவ்காந்தி கொலை வழக்கு! மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனு நிராகரிப்பு!



முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.


இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000ம் ஆண்டில் உறுதிசெய்தது. பின்னர், இவர்களில் நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதிசெய்ததைத் தொடர்ந்து 3 பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர்.


3 பேரும் தாக்கல் செய்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கடந்த வாரம் நிராகரித்துவிட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சட்டப்படி நடவடிக்கை - பழ.நெடுமாறன்:

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


21 ஆண்டு காலம் சிறையில் வாடிய பிறகும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பானதாகும். 1992ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கும் ஒட்டு மொத்தமாக மரண தண்டனை விதித்தபோது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்காடி 18 பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்படவும் மூவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவும், இக்குழு வழி செய்தது.


மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்காக அப்போதைய ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்து அவர் அதை தள்ளுபடி செய்தவுடன் அது செல்லாது என உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றிபெற்றது இக்குழுவே ஆகும். அதைப்போல இப்போதும் மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்திருப்பதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை இக்குழு மேற்கொள்ளும்.


ராஜிவ் கொலையில் மேலும் புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என ஜெயின் கமிஷன் அளித்த பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட சி.பி.ஐ. புலன் விசாரணைக்குழு இன்னமும் தனது விசாரணையை முடித்து அறிக்கையைத் தரவில்லை. இதுபோன்ற உண்மைகளைக் கவனத்தில் கொள்ளாது இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்திருப்பது வருந்தத்தக்கது. எனவே சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இக்குழு விரைந்து எடுக்கும்
என்று பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்க- ராமதாஸ் :


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு பரிந்துரையின் அடிப்படையில் குடியரசு தலைவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 1999-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து இந்த மூவரும் தாக்கல் செய்த கருணை மனுக்களை கடந்த 2001-ம் ஆண்டில் அப்போதைய குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் ஆய்வு செய்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சிவராசன், தணு ஆகியோர் உயிரிழந்துவிட்ட நிலையில், கொலை சதிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கத் தேவையில்லை என்று கே.ஆர். நாராயணன் கூறிவிட்டார்.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதன் பேரில் 2003-ம் ஆண்டில் இவர்களின் கருணை மனுக்களை மீண்டும் ஆய்வு செய்த அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாமும், அதே காரணங்களை கூறி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி உள்துறை அமைச்சகத்துக்கு ஆணையிட்டார்.

அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், 8 ஆண்டுகள் கழித்து இந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று தற்போது உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்ததாகவும், அதை ஏற்றே குடியரசு தலைவர் கருணை மனுக்களை தள்ளுபடி செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தங்களது வாழ்க்கை எந்த நொடியில் முடிவுக்கு வருமோ என்ற கவலையுடன் 20 ஆண்டுகளை தனிமைச் சிறைக் கொட்டடியில் கழித்துள்ளனர். இது தூக்குத் தண்டனையை அனுபவிப்பதைவிட மிகவும் கொடுமையானது.

ஏற்கெனவே 20 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்ட இவர்களை தூக்கிலிட்டால் அது இரட்டை தண்டனையாக அமைந்து விடும். இது இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும்.

மரண தண்டனை என்பதையே ஒழிக்க வேண்டும் என்ற முழக்கம் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. உலகில் உள்ள 95 நாடுகளில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. மேலும் 40 நாடுகளில் இத்தண்டனை செயல்படுத்தப்படுவதில்லை.

இத்தகைய சூழலில் ஏற்கனவே இரண்டு குடியரசு தலைவர்களால் தூக்கில் இடப்பட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்ட மூவரை தூக்கிலிடுவது மனிதாபிமானம் உள்ள செயலாக இருக்காது. மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைக்கு பெருமை சேர்ப்பதாகவும் இருக்காது.

எனவே, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்யும் முடிவை மறு ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
," என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மரண தண்டனையை முற்றாக ஒழிக்கவேண்டும் - தொல்.திருமாவளவன் அறிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கருணைமனுவைக் குடியரசுத்தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.


திரு.கே.ஆர்.நாராயணன், திரு.அப்துல் கலாம் ஆகியோர் காலத்தில் நிராகரிக்கப்படாத இந்தக் கருணைமனுக்கள், இந்த நாட்டுக்கே தாய் எனக் கருத்தத்தக்க ஒருவர் குடியரசுத் தலைவராக இருக்கும் நேரத்தில் நிராகரிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. சுமார் இருபது ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் அவர்களுக்குக் கருணைகாட்டி விடுதலை வழங்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் அவர்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறது.


குற்றம் இழைத்த ஒருவருக்கு வழங்கப்படுகிற தண்டனையின் நோக்கம் அவர் மீண்டும் அந்தக் குற்றத்தைச் செய்யாமல் தடுப்பது மட்டுமல்ல, அவரைத் திருத்துவதும்தான். தவறு செய்த ஒருவரைப் பழி வாங்குவதற்கும் அவரைத் தண்டிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நமது நீதி அமைப்பு பழி தீர்ப்பதற்கானதல்ல. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதை எந்தவொருநாட்டின் நீதி அமைப்பும் இன்று ஏற்றுக்கொள்வதில்லை. இந்த உண்மையை உணர்ந்ததால்தான் உலகெங்கும் மரண தண்டனை ஒழிப்புக்கான குரல் இப்போது வலுவடைந்து வருகிறது.


2010 ஆம் ஆண்டு கணக்கின்படி உலகில் தொண்ணூற்றுஆறு நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மேலும் ஒன்பது நாடுகள் ராணுவ குற்றம் தவிர, சாதாரண குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதில்லை. இவைதவிர மேலும் முப்பத்துநான்கு நாடுகள் மரண தண்டனையைத் தமது சட்டப் புத்தகத்தில் வைத்திருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில்லை. ஆக மொத்தத்தில் உலகில் 139 நாடுகளில் இப்போது மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை.


இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக எவரும் தூக்கிலிடப்படவில்லை என்றாலும் மரணதண்டனை வழங்கப்பட்டே வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 105 பேருக்கு இங்கே மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.


1937ஆம் ஆண்டிலேயே மகாத்மா காந்தியடிகள் மரண தண்டனைக்கு எதிராகப் பேசியிருக்கிறார். ‘‘மரண தண்டனை என்பது அகிம்சைக்கு எதிரானதாகும். உயிரை உருவாக்கியவர்தான் அதை எடுத்துக்கொள்ள முடியும். அகிம்சையின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் ஒரு அரசு கொலையாளியை மனந்திருந்தச் செய்வதற்கான வழிகளைத்தான் பின்பற்ற வேண்டும். குற்றங்கள் என்பவை நோய்களைப் போன்றவை. அதனால் பீடிக்கப்பட்டவர்களை நோயாளிகளாகக் கருதி வைத்தியம் செய்வதே சரியானதாகும்’’ என்று காந்தியடிகள் தெளிவாகக் கூறியிருக்கிறார்.


புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் மரணதண்டனை கூடாது என்றுதான் வலியுறுத்தினார். ‘‘உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்வதைவிடவும் மரண தண்டனையை முற்றாக ஒழித்து விடுவதையே நான் ஆதரிப்பேன். இந்தப் பிரச்சனைக்கு அதுதான் சரியானத் தீர்வாக இருக்கும். நமது நாடு அகிம்சையைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட ஒரு நாடாகும். நடைமுறையில் அதை முழுமையாக பின்பற்றாவிட்டாலும்கூட அகிம்சையை இயன்றவரை நாம் பின்பற்றுவதுதான் சரி. அப்படிப்பார்த்தால் மரண தண்டனை என்பதையே முற்றாக ஒழித்துவிடுவதுதான் சரியானதாக இருக்கும்’’ என்று அவர் குறிப்பிட்டார். அம்பேத்கரின் கருத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட அரசியல் நிர்ணய சபை மரண தண்டனையை ஒழிப்பதா? வேண்டாமா? என்று முடிவு செய்யும் அதிகாரத்தை எதிர்கால நாடாளுமன்றத்திடம் விட்டுவிடுவது எனத் தீர்மானித்தது.


சுதந்திரத்துக்குப் பிறகு உருவான இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தே வந்துள்ளன. புகழ்பெற்ற நடிகரும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவருமான பிருதிவிராஜ் கபூர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் இதற்காகத் தனிநபர் மசோதாக்களை நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் கொண்டு வந்திருக்கிறார்கள்.


அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படும் என்று நமது நீதிமன்றங்கள் கூறி வருகின்றன. ஆனால் இது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. 1950ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புகளை ஆராய்ந்த ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பும், மக்கள் சிவில் உரிமைக் கழகமும் (பியுசிஎல்) இந்தியாவில் வழங்கப்படுகிற மரண தண்டனைகள் அரிதினும் அரிதான வழக்குகளில் அளிக்கப்படவில்லை. மாறாக ஒவ்வொரு நீதிபதியும், ஒவ்வொரு கோணத்தில் தண்டனையை வழங்கியிருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியிருக்கின்றன.மரண தண்டனை குறித்த விவரங்களை இந்திய அரசு ரகசியமாகவே வைத்திருக்கிறது எனவும் அவை குற்றம் சாட்டியிருக்கின்றன.


மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்ற குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கும் இந்த நேரத்தில் சர்வதேச உணர்வுகளுக்கு மாறாக நமது நாடு நடந்துகொள்வது சரியல்ல. எனவே பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகிய மூவரது மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும். மரண தண்டனையை முற்றாக ஒழிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய அரசு உறுதிப்படுத்திய செய்தி இதயத்தை வாள் கொண்டு பிளக்கிறது - வைகோ :

ராஜீவ் கொலையாளிகள் மூன்று பேரின் தூக்குதண்டனைக்கான கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் நிராகரித்து விட்டதற்கு வருத்தம் தெரிவித்து, மூன்று பேரின் தூக்கு தண்டனையைக் குறைக்க வலியுறுத்துமாறு முதல்வருக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும், ’’இருபது ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடி வதங்கி, வாழ்வின் அற்புதமான வாலிபப் பருவத்தைத் துன்ப இருளில் பறிகொடுத்து விட்ட, மூன்று தமிழ் இளைஞர்களின் உயிரை முடிக்க, அவர்களுக்குத் தூக்குத் தண்டனையை இந்திய அரசு உறுதிப்படுத்தியது என்ற செய்தி, இதயத்தை வாள் கொண்டு பிளக்கிறது.




ஜனநாயக உரிமைகளை அடியோடு பறித்துக் கொண்ட எதேச்சாதிகாரச் சட்டமான, தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, காவல்துறையின் சித்ரவதை மூலமாக, அச்சுறுத்தலால் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், தடா சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டு இருந்த 41 பேரில், 26 பேருக்குத் தூக்குத்தண்டனை என்று தீர்ப்பு அளித்தது.


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் பெங்களூரில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகன் எனும் இம்மூவரும் ‘திருபெரும்புதூர் கொலைச் சம்பவத்தில், குற்றவாளிகள் அல்லர் என்பதுதான் உண்மை’ ஆகும்.


எனவே, நிரபராதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், பழ. நெடுமாறன் உயிர்காப்பு அமைப்பின் தலைவராக, இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் நடராசன் மூலமாக வழக்கை நடத்த ஏற்பாடு செய்தார்.


1999 மே மாதம், உச்சநீதிமன்றம், 19 பேரை விடுதலை செய்தது; மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது; முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் நால்வருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தது.


அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு தள்ளுபடி செய்தது.


தமிழக ஆளுநர் பாத்திமா பீவி அவர்களிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர், தமிழக அரசின் கருத்தைப் பெறாமலேயே, தாமாகவே கருணை மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார்.


‘அரசாங்கத்தின் கருத்தைத்தான் ஆளுநர் பிரதிபலிக்க முடியுமே தவிர, தாமாக முடிவு எடுக்க சட்டத்தில் இடம் இல்லை’ என்று, உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் தொடுத்த வழக்கில், வழக்கறிஞர் சந்துரு வாதாடினார்.


‘ஆளுநர் தாமாக முடிவு எடுக்க முடியாது’ என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.


இதன் பின்னர், நளினியின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் நாராயணனிடம் கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டது.


2001 ஆம் ஆண்டு, நான்கு பேரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கும், அவர்களின் கருணை மனுவை ஏற்க வேண்டியும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்று, நானும், நெடுமாறனும், பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி ஆகியோரை நேரில் சந்தித்து, முறையீட்டுக் கடிதங்கள் கொடுத்தோம்.




உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், ‘உலகில் 135 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது; பேரறிவாளனின் துன்ப நிலையைச் சுட்டிக்காட்டி, மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.



ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் டாக்டர் மன்மோகன்சிங் அரசின், உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், நளினிக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக, குடியரசுத் தலைவரால் குறைக்கப்பட்டது.


மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள பேரறிவாளன், இரண்டு பேட்டரி செல்கள் கடையில் வாங்கிக் கொடுத்தார், என்பதுதான் குற்றச்சாட்டு ஆகும். சதியிலும், குற்றத்திலும், அவருக்குப் பங்கு இருப்பதாகச் ஜோடிக்கப்பட்ட வழக்கில்,தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்.


2011 ஆகஸ்ட் 2 ஆம் நாள், டாக்டர் மன்மோகன் சிங்கை நானும், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்களும் சந்தித்து, ‘குற்றம் புரியாமலேயே, 19 வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனின் இருபது ஆண்டு இளமைக் காலம், சிறை எனும் நரகத்தில் அழிக்கப்பட்டு விட்டதால், கருணை உள்ளத்தோடு, மனிதாபிமானத்தோடு, மரண தண்டனையை ரத்து செய்யுமாறு வேண்டுகோள் கடிதத்தை நேரில் சந்தித்துக் கொடுத்தோம்.


‘உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைப்பதாக’ பிரதமர் கூறினார். அன்று மாலையிலேயே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களைச் சந்தித்து, மரண தண்டனையை ரத்துச் செய்வதற்கான கோரிக்கை மனுவைக் கொடுத்ததோடு, பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் மரண தண்டனையையும் மனிதாபிமானத்தோடு ரத்து செய்ய வேண்டும் என்று அவரிடத்தில் கேட்டுக் கொண்டோம். உள்துறை அமைச்சர் எதுவும் சொல்லவில்லை.




எவ்விதத்திலும், மரணக் கொட்டடியில் இருந்து மூவரையும் மீட்டு விட முடியும் என்ற எனது நம்பிக்கையில் இடி விழுந்து விட்டது.

மரண தண்டனையை உறுதி செய்து உள்துறை அமைச்சகம் அனுப்பிய பரிந்துரையின் பேரில், கருணை மனுக்கள்

நிராகரிக்கப்பட்டு, மூவருக்கும் தூக்குத்தண்டனையைக் குடியரசுத் தலைவர் உறுதி செய்து விட்டதாக, ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான செய்தியைப் பார்த்து, நெஞ்சம் துடிதுடித்துப் போன நான், உள்துறை அமைச்சரைச் சந்திக்க எவ்வளவோ முயன்றும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.


ஜனநாயக விரோத தடா சட்டத்தின்கீழ், போலீஸ் சித்திரவதை மூலம் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், வழங்கப்பட்ட தீர்ப்பு, நீதியின்பாற்பட்டதா? என்பது ஒரு கேள்வி.


மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரில், ஒருவருக்கு தண்டனையை ரத்துச் செய்துவிட்டு, மற்ற மூவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு எடுப்பது நியாயம்தானா?


இந்தியாவில் கடைசியாக, 2004 ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அர்ஜூன் சட்டர்ஜி என்பவர், ஒரு சிறுமியைக் கற்பழித்துக் கொலை செய்த வழக்கில், அவருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் இதுவரை, எவருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை.


1995 க்குப் பிறகு, கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒருவரும் தூக்கில் இடப்படவில்லை. இந்தப் பின்னணியில், பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும், விதிக்கப்பட்டு உள்ள தூக்குத்தண்டனையை இரத்துச் செய்வதற்கு, இன்றைய நிலையில் கூட மத்திய அரசால் முடியும். கருணை மனுவை நிராகரித்து, ஒருவருக்குக் குடியரசுத் தலைவர் தூக்குத்தண்டனையை உறுதி செய்தாலும்கூட, அதற்குப் பின்னரும், மத்திய அரசு, அந்தத் தண்டனையை நிறுத்தி வைத்து, ரத்து செய்வதற்கு அதிகாரம் இருக்கின்றது. இதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன.


இந்த மூன்று இளம் தமிழர்களின் உயிரைப் பாதுகாக்க, அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கின்ற தூக்குத்தண்டனையை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை, கருணை உள்ளதோடு மேற்கொள்ள வேண்டுமென, தமிழக முதல் அமைச்சரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
’’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மூன்று தமிழர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே - த.பெ. பொது. கட்சி :

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


’’இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும அப்பாவித் தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.

இராசீவ் கொலை வழக்கிற்கு தடாச் சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், அதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கொண்டு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

காவல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட ஒப்பதல் வாக்குமூலம் வழக்கமான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் செல்லாது. தடாச் சட்டம் பொருந்தாது என்றபின், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைத் தான் உச்சநீதிமன்றம் பின்பற்றியிருக்க வேண்டும்.


இவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறை அதிகாரி தியாகராசன் என்பவர், ஏற்கெனவே கேரளா எர்ணாக்குளத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது அருட்சகோதரி அபயா என்பவரது கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி அதற்காகத் தண்டனையும் பெற்றவராவார்.

இவர் தான் பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களைத் துன்புறுத்தி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியவர். துன்புறுத்திப் பெறப்பட்ட இவ்வொப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கருதி உச்சநீதிமன்றம் இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது அநீதியாகும்.

இவ்வாறு நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட இத்தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எண் 72 குடியரசுத் தலைவருக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது. பிரிவு எண் 161 மாநில ஆளுநர்களுக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது.

அண்மையில் ஆந்திராவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 தலித் இளைஞர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்து விட்ட பிறகும், மாநில ஆளுநரிடம் எழுத்தாளர் மகா சுவேதா தேவி முறையிட்டார். ஆந்திர மாநில ஆளுநரிடம் கருணை மனு நிலுவையில் உள்ளது என்பதைக் காரணம் காட்டி, ஆளுநரின் முடிவு வரும் வரையில் மேற்படி இளைஞர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தடையாணையும் வாங்கினார்.

1950களில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் சி.ஏ.பாலனின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தபின், கேரளத்தில் ஈ.எம்.எஸ். அரசு ஆளுநர் மூலம் அவரது மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது.

எனவே, இந்த முன்னுதாரணங்களைப் பின்பற்றி, தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களைப் பெற்று, தமிழக ஆளுநர் மூலம் அவர்களது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

ஓசூர்
ஓசூரில் த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் இன்று(13.08.2011) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

மதுரை
இன்று(12.08.2011) மாலை த.தே.பொ.க. தோழமை அமைப்பான மக்கள் உரிமைப் பேரவை சார்பில் 5 மணிக்கு மீனாட்சி பசார் அருகில், தலைமை அஞ்சல் நிலையம் முன்பு மக்கள் உரிமைப் பேரவை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ச.அருணாச்சலம் தலைமையில் இதே கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். இதில், நாம் தமிழர், த.தே.வி.இ., உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளும் பங்கேற்கின்றன.

தஞ்சை
தஞ்சையில், 16.08.2011 செவ்வாய் பனகல் கட்டிடம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், த.தே.பொ.க. நகரச் செயலாளர் இராசு. முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னனணிப் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

சென்னை
17.08.2011 அன்று மாலை 5 மணிக்கு சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார். பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மையார் உட்பட பல தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

சிதம்பரம்
சிதம்பரம் மேல வீதி அண்ணா சிலை அருகில், 16.08.2011 அன்று மாலை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் விளக்கவுரையாற்றுகிறார்.

கோவை
கோவையில் த.தே.பொ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மாநகரக் காவல் ஆணையர் அனுமதி மறுத்துள்ளார். இது தொடர்பாக த.தே.பொ.க. நிர்வாகிகள் மாநகரக் காவல்துறையிடம் மீண்டும் முறையீடு செய்துள்ளது. விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடம், நாள் அறிவிக்கப்படும்.

இந்த ஆர்ப்பாட்டங்களில், திரளான தமிழர்களும், மனித நேயர்களும் கலந்து கொண்டு இக்கோரிக்கைக்கு வலுசேர்க்க வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள்
’’ விடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


ராஜீவ்காந்தி கொலையில் 3 பேரின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யவேண்டும் - கிருஷ்ணசாமி :


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்துள்ளார். இதைத்தொடர்ந்து 3 பேருக்கும் எந்த நேரத்திலும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சம் உள்ளது. இது உலகில் அனைத்து தமிழர்களுக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.


ராஜீவ்காந்தி கொலையில் ஜனநாயக ரீதியில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளவில்லை. இதனால் குற்றம் சுமத்தப்பட்ட 3 பேருக்கும் தூக்குத்தண்டனை கூடாது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஜெயின் கமிஷன், மல்டி ஏஜென்சி போன்ற அமைப்புகள் இன்னும் சரியான விசாரணை அறிக்கையை சமர்க்கவில்லை. அவரது கொலையில் ஒட்டுமொத்த பின்னணி இன்னும் சரியாக வெளிவரவில்லை. அனுமானத்தில் அடிப்படையிலும், ழூகத்தின் பேரிலும் குற்றம் சாட்டியவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாமா?


பேரறிவாளன் உள்பட 3 பேரின் தூக்குத்தண்டனையை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தூக்குத்தண்டனை விதித்து 20 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களை மரண கொட்டடில் அடைக்கப்பட்டுள்ளதே கொடுமையானது. 150 நாடுகளில் மரண தண்டனை சட்டம் அமலில் இல்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் 2 தலித் இளைஞர்களின் தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.


இது போன்ற முன் உதாரணங்கள் இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும். ஏற்கனவே 3 பேர் குறித்து உள்துறை அமைச்சகம் அனுப்பிய பரிந்துரையை முன்னாள் ஜனாதிபதிகள் கே.ஆர்.நாராயணன், அப்துல்கலாம் ஆகியோர் நிராகரித்து திருப்பி அனுப்பினர். ஆனால் பிரதீபாபாட்டீல் மட்டும் கருணை மனுக்களை ஏற்றுக்கொண்டு நிராகரித்தது ஏன்.


உலகில் ஒரு தமிழருக்கு ஆபத்து என்றால் ஒட்டு மொத்த தமிழர்களும் குரல் கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஆபத்து என்கிறபோது, ஏன் குரல் கொடுக் ககூடாது. இவர்களின் கருணை மனு மறு பரிசீலிக்க ஒட்டு மொத்த தமிழர்கள் சார்பில் கோரிக்கை விடவேண்டும்.


தமிழகத்தில் ஆளுநருக்கும், அரசுக்கும் 3 பேரின் தூக்குதண்டனை நிறுத்தி வைப்பது தொடர்பாக அமைச்சரவை கூடி முடிவு எடுக்க அதிகாரம் உண்டு. விரைவில் தடுத்த நிறுத்த வலியுறுத்தவேண்டும். ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச சதிகாரர்கள் யார் என்ற தெரியவில்லை. வெளிப்படையான விசாரணை எதுவும் நடக்கவில்லை. இது தொடர்பாக மீண்டும் அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தவேண்டும். 3 பேரின் தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒட்டு மொத்த தமிழர்கள் சார்பில் குரல் கொடுப்பேன். தமிழக அரசையும் தலையிட வலியுறுத்துவேன்.


இவ்வாறு கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறினார்.

No comments:

Post a Comment