Sunday, August 7, 2011
பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
யாழ்ப்பாணத்தில், உதயன்' பத்திரிகை ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது, சிங்கள அரசு குண்டர்களை ஏவி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியது, ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கும் கொடுஞ்செயல் ஆகும்.
ராஜபக்சேயின் ஆட்சியில், உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கும் சுதந்திரம் இல்லை. வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவதே இல்லை. உதயன் ஆசிரியர் தாக்கப்பட்டதன் மூலம், ராஜபக்சே அரசின் கோரமுகம், மீண்டும் வெளிப்பட்டு உள்ளது.
உலகெங்கும் பத்திரிகை சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் காக்க விரும்புவோர் அனைவரும், சிங்கள அரசின் அராஜகத்துக்கும், சிங்கள இனவாதக் குண்டர்களின் வன்முறைகளுக்கும் எதிராகப் பலத்த கண்டனம் எழுப்ப வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
வழக்கம் போல இந்தியா அமைதி காத்து வருகிறது - திருமாவளவன் :
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’விடுதலைப்புலிகளை ஒழித்து விட்டோம் என்றும், தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளில் மட்டுமே தற்போது கவனம் செலுத்துகிறோம் என்றும் கூறி வருகிற சிங்கள ஆட்சியாளர்கள் இன்னும் எத்தகைய இனவெறி ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பதற்கு உதயன் ஆசிரியர் மீதான தாக்குதலே சாட்சியமாக விளங்குகிறது.
ஏற்கனவே இதுபோன்று பல தமிழ் ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்.
தற்போது குகநாதனை குறி வைத்துத் தாக்கப்பட்டிருக்கும் செயலானது தமிழீழ மண்ணில் நடைபெற்று வரும் சிங்கள இனவெறியர்களின் அட்டூழியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வராமல் தடுக்கும் முயற்சியும், அச்சுறுத்தலுமேயாகும்.
இந்தப் போக்கை அமெரிக்க ஐக்கிய அரசும் கண்டித்துள்ளது. வழக்கம் போல இந்தியா அமைதி காத்து வருகிறது.
ஈழத்தில் நடைபெற்று வரும் கொடுமைகள் தொடர்பாக விவாதிப்பதற்கும் இந்திய நாடாளுமன்றத்தில் வாய்ப்பளிக்காமல் இந்திய ஆட்சியாளர்கள் நழுவி வருகின்றனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
சிங்கள இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை தொடருவோம் - சீமான் :
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தின் குரல் வளையை முழுவதுமாக நெரிக்கப்பட்டுள்ளது. இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட படுதோல்வி பொறுக்க முடியாமல் ஆளும் தரப்பு இத்தாக்குதல் மூலம் வஞ்சம் தீர்க்கப் பார்க்கிறது.
இதுவரை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் ராஜபக்சேயின் ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை வெறித்தாக்குதலுக்கு இரையாகி உள்ளனர். அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டன.
ஆனால் சிங்கள இனவெறி அரசோ உலகின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக விசாரணை என்ற பெயரில் சிலரைக் கைது செய்து நாடகமாடியிருக்கிறது.
இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தும் அடங்காத ராஜபக்சேயின் இனப் பாசிசம் இன்னும் தனது தமிழர் மீதான வேட்டையைத் தொடருகிறது.
இதற்கு பத்திரிகையாளர் குகநாதன் இரையாகியிருக்கிறார். நாமும் தொடர்ந்து சிங்கள இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை தொடருவோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment