Friday, August 12, 2011
என் மகனை காப்பாற்றுங்கள்: நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை: பேரறிவாளன் தாயார் கண்ணீர்
20 ஆண்டுகளாக சிறையில் வாடிய என் மகனை காப்பாற்றுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிம் பேசிய அவர்,
இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கிறேன். வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள் இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன்.
உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக காந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும் அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக்கொண்டிருக்கும்பொழுதே தூக்கிலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம்.
மக்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். பேரறிவாளனுக்கும் ராஜீவ் காந்தி கொலை சதிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இனி மக்களாகிய நீங்கள் உணர்ந்து, உங்கள் கருத்தை உரக்கச் சொன்னால் மட்டுமே என் மகனும் அவனை போல இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது. தாய்மார்கள் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து, என் மகனின் உயிர் மீட்பு போராட்டத்தில் கண்டிப்பாக என்னுடன் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
மாணவர்களும், சட்ட நிபுணர்களும் ஒரு வரலாற்று தவறு நிகழ்வதை இப்பொழுதே தடுக்க வேண்டும். மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இவர்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய ஒருசேர உரத்து குரல் கொடுக்க வேண்டும். இனியும் காலம் இல்லை என்பதை நான் சொல்லத் தேவை இல்லை என்று நம்புகிறேன்.
தமிழக முதல்வரும் என் மகனின் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அவன் உயிரை காக்கும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment