Tuesday, August 30, 2011
குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் : குயில்தாசன்
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனுக்கு வரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உருக்கமாக, ‘’செய்யாத குற்றத்திற்காக மகன் பேரறிவாளன் 21 ஆண்டாக சிறையில் வாடுகிறான்.
மகன் தூக்கிலிடப்படுவதற்கு முன்பே சிறை முன் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்’’ என்று தெரிவித்தார்.
மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றக்கோரி, ஜோலார் பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் உண்ணாவிரம் நடைபெற்றது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் உரிரை காப்பாற்றுவது தமிழக முதல் அமைச்சர் கையில் தான் உள்ளது என்று பேரறிவாளனின் தந்தை தெரிவித்தார். தனது மகனை காப்பாற்றி தன்னிடம் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
தூக்குக்கு எதிர்ப்பு: பெண் வக்கீல்கள் உண்ணாவிரதம்
ஜனாதிபதி கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் ஜெயில் சூப்பிரண்டு மூலம் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன் படி தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த மனுவின் நகல்கள் தமிழக கவர்னர், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, உள்துறை செயலாளர், உள்துறை இயக்குனர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவர்களது வக்கீல் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவை பைசல் செய்யும் வரை தூக்குதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரி ஐகோர்ட்டில் 3 பேரும் மனு தாக்கல் செய்கிறார்கள்.
திங்கள் கிழமை (29.08.2011) மனுதாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீல்கள் சுஜாதா, கயல்விழி, வடிவாம்பாள் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் கிருஷ்ணகுமார், முருகபாரதி, சங்கரன் உள்பட ஏராளமான வக்கீல்கள் கையெழுத்து வேட்டை நடத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தூக்குக்கு எதிர்ப்பு -நடிகர், நடிகைகள் போராட்டம் :
இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் பாரதிராஜா,
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழுவின் அவசர கூட்டம் இன்று (26.08.2011) நடந்தது. அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனித உயிர் அரிதானது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த பாவம் இன்னும் போகவில்லை. இந்த நிலையில், மூன்று தமிழர்களுக்கு தூக்குத்தண்டனை விதிப்பது மகா பாவம். ஒரு கொலைக்கு இன்னொரு கொலைதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அது தமிழராக இருந்தாலும் சரி, ஜப்பானியராக இருந்தாலும் சரி, ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பதை ஏற்க முடியாது.
இந்த 3 தமிழர்களின் உயிரையும் காப்பாற்றுவது, இனமானத்தை காப்பாற்றுவது போல் ஆகும். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது. மிக சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர் படித்தவர். அறிவாளி.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களையும் காப்பாற்றுவதற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழர்கள் அத்தனை பேரும் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக, நாங்கள் முதல் அமைச்சரை நேரில் பார்த்து மனு கொடுக்க இருக்கிறோம்.
பேரறிவாளன் 19 வயதில் ஜெயிலுக்குள் போனவர். இப்போது 40 வயதை கடந்து விட்டார். இத்தனை வருடங்கள் தண்டனையை அனுபவித்த பிறகும் அவருக்கு மரண தண்டனை கொடுப்பது, குரூரம். எனவே இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சென்னை கோர்ட்டுக்கு வந்து வாதாடும்போது, தமிழ் இன உணர்வாளர்கள் அத்தனை பேரும் கோர்ட்டு முன்பு ஒன்று கூடுவோம்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களின் உயிர்களை காப்பாற்றக்கோரி, கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தவும் முடிவு செய்து இருக்கிறோம். எந்த மாதிரியான போராட்டம் என்பதை பின்னர் அறிவிப்போம்.''
இவ்வாறு பாரதிராஜா கூறினார்.
தூக்குக்கு எதிர்ப்பு - போராட்டத்தில் இரும்பொறை :
பேரறிவாளன், முருகன்,சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மனித சங்கில் போராட்டம் நடைபெற்றது.
தமிழர் கழகம் புதுக்கோட்டை பாவாணன், நாம் தமிழர் சத்தியமூர்த்தி, பாமக மாவட்ட செயலாளர் தரணி.ரமேஷ் மற்றும் 100க்கணக்காணோர் தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
இரண்டு மணி நேரத்திற்கு இந்த மேலாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி, பின்னர் 22 பேரின் தூக்கு ரத்து செய்யப்பட்டது. அந்த 22 பேரில் ஒருவரான இரும்பொறை இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாமக, மதிமுக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஈரோட்டில் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதுச்சேரியிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ராஜிவ் கொலை குற்றவாளிகளை தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க முன்வர வேண்டும் : கலைஞர் வேண்டுகோள்
திமுக தலைவர் கருணாநிதி 26 .08 .2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேரை ஏழு நாட்களில் தூக்கிலிட வேண்டும் என்று குடியரசு தலைவர் உத்தரவு வந்ததாக செய்தியாளர்கள் என்னிடம் கேட்டனர். நான் தூக்கு தண்டனை என்பதே கூடாது என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன். அது இந்த மூன்று பேருக்கும் பொருந்தும். குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் ஏற்கெனவே இருபது ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர்.
அவர்கள் செய்தது குற்றம் என்றாலும் கூட அவர்கள் சிறையில் இருந்ததை கருத்தில்கொண்டு அவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற நம்மல் முடிந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் 3 பேரின் உயிரை காப்பாற்ற உருக்கத்துடன் செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்த பிரச்சனையில் அக்கறையுடன் 3 உயிர்களை காக்க முன் வரவேண்டும். இதுகுறித்து முடி வெடுக்க மத்திய அரசும், மாநில அரசும் இந்த பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தூக்குக்கு எதிர்ப்பு : நாடாளுமன்றத்தில் திருமாவளவன் முழக்கம்
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்களின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 26.8.2011 அன்று நாடாளுமன்றத்தில் முழுக்கமிட்டார்.
மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
உள்ளே சென்று, அட்டையை உயர்த்தி பிடித்து மூவரின் தூக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார்.பின்னர் வெளிநடப்பு செய்தார்.
வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை மத்திய அரசு உடனே ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்.
மரண தண்டனை கொள்கையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். இதற்காக 26.8.2011 அன்று நாடாளுமன்ற அவையில் இருந்து வெளிநடப்பு செய்தேன்’’ என்று தெரிவித்தார்.
பேரறிவாளன், சாந்தன், முருகனின் உயிரை காப்பாற்ற குடியரசு தலைவர், பிரதமருக்கு திருமாவளவன் கடிதம் :
தமிழகத்தில் நடந்த ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிறை தண்டனையை கழித்த பேரறிவாளன் சாந்தன், முருகன் ஆகியோர் வரும் செப்டம்பர் 9 அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகமெங்கும் மரணத் தண்டனைக்கு எதிரான குரல் வெடித்து வருகிறது .மரண தண்டனையை கைவிட வேண்டும் என்றும், பேரறிவாளன், சாந்தன், முருகனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மரண தண்டனை ஒழிப்பு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென 26.8.2011 அன்று குரல் எழுப்பினார். அத்துடன் இந்திய குடியரசு தலைவர் பிரத்திபா பாட்டில் அவர்களுக்கும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
20 ஆண்டுகள் சிறை தண்டனையை கழித்து இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்குவது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்குவதாக அமைந்துவிடும் என்று சுட்டிகாட்டி இருபத்துடன், மரண தண்டனை கொள்கையை இந்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அம்மடல் எழுத்தபட்டுள்ளன. நாடாளுமன்ற செயலகத்தின் மூலம் குடியரசு தலைவருக்கும், தலைமை அமைச்சருக்கும் அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மகனை மீட்பேன் : அற்புதம்மாள் உருக்கம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் எழுதிய நூலின் இந்தி பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கு உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கேள்வி: டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க ஏதாவது முயற்சி செய்தீர்களா?
பதில்: இல்லை. எந்த வித முயற்சியும் செய்யவில்லை.
கேள்வி: டெல்லியில் எந்த தலைவர்களை சந்தித்து பேசினீர்கள்?
பதில்: டெல்லியில், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களான பரதன், ராஜா மற்றும் வைகோ ஆகியோரை சந்தித்து பேசினேன். அவர்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள். ஒரு வழக்கில் 20 ஆண்டுகளாக தண்டனை பெற்றபின் மேலும் ஒரு தண்டனையாக தூக்கில் போடுவது சரியா என கேட்டனர். 3 பேரும் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கேள்வி: 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற கோரி தமிழக முதல்வரிடம் மனு தந்து உள்ளீர்களா?
பதில்: ஏற்கனவே தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு தந்து உள்ளோம். அவரை சந்திக்க அனுமதி கிடைத்தால் நேரில் கோரிக்கை வைப்பேன். தமிழக முதல்வர் சகல அதிகாரம் படைத்தவர். அவர் மனது வைத்தால் 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற உதவிட முடியும். அவர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தார் வைகோ
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 26.08.2011 அன்று சந்தித்துப் பேசினார். தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அவர்களிடம் வைகோ ஆலோசனை நடத்தினார்.
பின்னர் வெளியே வந்த அவர், ‘’முருகன், பேரறிவாளன், சாந்தன் மூவரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணை மனு எழுதியுள்ளனர். மூவரும் வேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் கருணை மனுவை அளித்தனர்’’ என்று வைகோ கூறினார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனை: சட்ட விதிகளைவிட மனித நேயமே முக்கியம்: கி. வீரமணி
பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள சட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டும் அறிக்கை வருமாறு:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை, அளிக்கப்பட்ட மூன்று பேர்களான பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கை - மனித உரிமை அமைப்புகள், மனிதநேயர்கள் அனைவரது (மக்கள்) சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஆகும்.
கருணை மனுவை நிராகரித்தது ஏன்?
இதனை ஏற்கெனவே பதவியிலிருந்த இரண்டு குடிஅரசுத் தலைவர்கள் நிராகரிக்காமல் வைத்திருந்தனர். இப்போது மூன்றாவதாக வந்துள்ளவர் (உள்துறை அமைச்சகத்தின் கருத்துப்படி) நிராகரித்து விட்டதோடு, அந்த ஆணையினை வேலூர் மத்திய சிறைச்சாலைக்கும் அனுப்பியுள்ளார். இதனால் விரைவில் அவர்களது தூக்குத் தண்டனையை நிறைவேற்றிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் நிலையில், இக்கடைசி நிமிடத்தில்கூட அத்தண்டனையை நிறுத்தி, மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை வட இந்தியத் தலைவர்களாலும்கூட வற்புறுத்தப்படுகிறது. இதில் மனிதநேயம் பொங்கி, மனிதாபிமான அணுகுமுறை காட்டப்படல் வேண்டும் என்ற சூழலை உருவாக்கியுள்ளது.
இம்மூவரும் சுமார் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளனர். இதுவே ஓர் ஆயுள் தண்டனைக் காலமாகும். தூக்குத் தண்டனையை ஏற்பதைவிட மிகவும் கொடூரமான சித்ரவதையாகும். இதை எண்ணிப் பார்க்க ஏனோ தவறியது குடிஅரசுத் தலைவரின் முடிவு. இதுபற்றி காங்கிரஸ் கட்சி தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள், தமிழ் இன உணர்வாளர்கள், மனிதநேய அடிப்படையில் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைத்துள்ள நிலையில், அவர்களது கருணையும், மனிதாபிமானமும் இந்த மூவர் விஷயத்தில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.
முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்
மற்ற பல்வேறு செய்திகளில் அணுகுமுறை, முடிவுகளில் முதல் அமைச்சரிடம் நாம் மாறுபட்ட நிலையிலும், வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் முதலிய அனைவருக்கும் அவர் இப்போது முதல் அமைச்சர் என்ற முறையில் கருணை காட்டுவதை - கடமையாகக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நாமும் வலியுறுத்துகிறோம்.
அடுத்து, சட்டரீதியாகவே இவர்கள் மூவர் விஷயத்தில் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கின் பல்வேறு சட்ட அம்சங்கள் உள்ளன என்பதால், நீதிமன்றங்களிலும்கூட அரசு சார்பிலேயே ஆலோசனைகள் வழங்க இடம் உள்ளது.
இங்கிலாந்து நாட்டின் நடைமுறை
எடுத்துக்காட்டாக,
இந்த மன்னிப்பு - கருணை வழங்கும் விதிகள் இந்திய அரசியல் சட்டத்தில் புகுத்தப்பட்டதே, பிரிட்டிஷ் பாராளுமன்ற, நடவடிக்கைகள் - விதிகள் - அங்குள்ள நீதிமுறைகளின் அடிப்படையில் என்பது விவரம் தெரிந்த அனைவரும் அறிந்த ஒன்று.
1907இல் இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சர் (Home Secretary என்று அழைக்கப்பட்டவர்) ஹெர்பட் கிளாட்ஸ்டன் அவர்கள் பிரிட்டனின் அவுஸ் ஆஃப் காமன்ஸ் என்ற மக்கள் அவையில், இந்த மன்னிப்பு வழங்குதல், கருணை காட்டுதல் சம்பந்தமான விதிகளின் பயன்பாடு பற்றி விளக்குகையில், குறிப்பிட்டார். அது சட்டப் புத்தகங்களிலும் வெளியாகியுள்ளது.
Earlier in 1907, Herbert Gladstone, Home Secretary, in a speech in the House of Commons, emphasised that numerous considerations are relevant and that the exercise of the prerogative does not depend in principles of strict law and justice, still less of sentiment. “It is a question of policy and judgment in each case, and in my opinion, a capital execution which in the circumstances, creates horror and compassion for the culprit rather than a sense of indignation at his crime is a great evil.”
1907 ஆம் ஆண்டிலே இங்கிலாந்து நாட்டின் உள்துறைச் செயலாளர் ஹெர்பர்ட் கிளாட்சன் பொது மக்கள் அவையில் (House of Commons) பேசும்போது, இதில் பல்வேறுபட்ட விஷயங்கள் பரிசீலனை செய்யப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என்பதையும், முடிவு எடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்துவது நீதி மற்றும் சட்டக் கொள்கைகளையே சார்ந்திருப்பது அல்ல என்பதையும், அதைவிட மன உணர்வுகளை சார்ந்திருப்பது மிகவும் குறைவானதே என்பதையும் வலியுறுத்தினார். ஒவ்வொரு வழக்கிலும் அடங்கியிருப்பது கொள்கை மற்றும் மதிப்பீடு பற்றிய ஒரு கேள்வியேயாகும். மரண தண்டனை என்பது அதன் சூழ்நிலைகளில் பெரும் பீதியைக் கிளப்புவதே என்பதும், அவரது குற்றம் மிகப் பெரும் கொடுமையானது என்று குற்றம் சாட்டுவதை விட, கருணை காட்டுவதே சிறந்தது என்பதும் எனது கருத்தாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமல்ல, நமது இந்திய சட்டக் கமிஷன் அறிக்கைகளில்கூட இந்தக் கருணை காட்டுதலில் பல்வேறு முக்கிய அம்சங்களைக் கணக்கில் எடுத்த பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது (1967) Vol I, பக்கங்கள் 317-18.
கொலைக் குற்றம் புரிந்து தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பவர்கள்.
(1) ஏற்கெனவே திட்டமிட்டு பேசினர். Pre-meditation
(2) அவர்களது வயது
(3) அவர்களது மனது, உடல் நிலை,
(4) அவர்களது பழைய வரலாறு பழைய குற்றவாளியா என்பன
(5) வெளியே இருந்துவந்த நிர்பந்தச் சூழ்நிலை.
இத்தகைய அம்சங்களையெல்லாம்கூட ஆய்வுக்கு எடுத்து பரிசீலிக்கப்பட்டுத்தான் இறுதி முடிவு (நிராகரிப்பது போன்ற) வர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மேலவை கருணை அப்பீலை முடிவு செய்யுமுன்பு, உள்துறை அமைச்சகம், இந்த வழக்கில் சரியாக, முறையாக விசாரிக்கப்படாமல் உள்ளது என்ற ஒரு துளிசந்தேகம் ஏற்பட்டாலும், ஜூரிகள் (அங்கு ஜூரிகள் முறை உண்டு) குற்றவாளி என்று தீர்ப்பளித்துத் தூக்குத் தண்டனையை பரிந்துரை செய்து ஏற்ற நிலையிலும்கூட, மறுபரிசீலனை - மறுவிசாரணை செய்தாக வேண்டும் என்பதே சட்டப் பூர்வ நிலையாகும்.
இங்கிலாந்து நீதிமன்றத்தில் இப்படி தவறு நடந்துள்ளதை திருத்தும் மறுவிசாரணை வழக்கேகூட நடந்துள்ளது.
அங்குள்ள தலைமை நீதிபதி Lord Chief Justice லார்டு கோடர்ட் (Lord Goddard) என்பவர் முன்னால் கிரிமினல் அப்பீல் மறுவிசாரணைக்கு வந்து (மன்னருக்குத் தரப்பட்ட கருணை மனு வழக்கில்) நடைபெற்ற வழக்கில், தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டவர் நிரபாரதி என்பது வெளியாக்கப்பட்டது.
இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டினை சட்ட ரீதியாக, நியாய அடிப்படையில் எடுத்து வைக்கவும் இடம் உண்டு.
மற்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் ஓர் ஆலோசனை வாரியம் (Advisory Board) அமைக்கிறார்கள். இங்கு அதுபோன்ற எதுவும் இல்லாததால் அவர்கள் கருத்தறிந்தே, குடியரசுத் தலைவரோ, கவர்னரோ முடிவு எடுக்கும் நிலை இல்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
சட்டவிதிகளைவிட மனிதநேயம் முக்கியம்
சட்டம் - விதிகளைவிட மனிதநேயம் முக்கியம். சிறைத் தண்டனைகளின் தத்துவமே வெறும் தண்டிப்பு (Mere Punishment) என்பது மாறி, இப்போது Reformation குற்றம் செய்திருந்தாலும்கூட அவர்களைத் திருந்தி நல்வாழ்வு வாழச் செய்வதுதான் என்கிறபோது, இந்தக் கருணைப் பிரச்சினையில் அந்த அடிப்படையும் முக்கியம் அல்லவா?
மனமிருந்தால் மார்க்கம் உண்டு. நளினிக்குக் காட்டிய அதே கருணையை இம்மூவருக்கும் காட்டுவது மனிதநேய அடிப்படையில் தேவையல்லவா?
நமது அரசியல் சட்டப்படி பால் அடிப்படையில் வித்தியாசம் காட்டப்படுவதுகூட விரும்பத்தக்கதல்லவே. எனவே மத்திய, மாநில அரசுகள் மீண்டும் தங்களது மனிதாபிமானத்தினைக் காட்ட இந்த அரிய தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் - கேட்டுக் கொள்கிறோம்.
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தொடர் பொதுக்கூட்டங்கள்- சீமான் :
நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதால் அவர்கள் தூக்கு கொட்டடி முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உலகம் நாகரீகமான முறையில் எவ்வளவோ வளர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தண்டனை முறைகள் தவறு செய்த மனிதனைத் திருத்துமாறு இருக்க வேண்டும். தவிர அவனைச் சட்டத்தின் பெயரால் கொலை செய்வதாக இருக்கக்கூடாது.
கல்வியிலும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்விலும் மிகவும் மேம்பட்ட இன்றயை நாகரீக உலகம் மரண தண்டனையை, ஒரு கொடுங்குற்றமாகக் கருதுகிறது. அதனால் தான் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.
உலகத்துக்கே அகிம்சை போதித்ததாகக் கூறும் இந்தியாவில்தான் மரண தண்டனை இருக்கிறது. அரசியல் குறுக்கீடற்ற நேர்மையான, சுதந்திரமான, விசாரணை முறைகள் நமது காவல் துறை அமைப்பில் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முழுமையான வாய்ப்பு இந்தியாவில் அளிக்கப்படுவது இல்லை.
3 தமிழர்கள் இன்று தூக்கு கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருப்பதும் அவ்வாறே இதனை மாற்றி அமைக்கும் சமூகக் கடமை நம் அனைவரின் முன்பும் இருக்கிறது. தவறிழைக்காத 3 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரியும் இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.
முதற்கட்டப் பயணத்திட்டம் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 26 ந்தேதி பல்லடத்திலும், 27 ந்தேதி திருச்சியிலும், 28 ந்தேதி நெல்லையிலும், 29 ந்தேதி கடலூரிலும், 31 ந்தேதி கோவையிலும், செப்டம்பர் 2 ந்தேதி மன்னார்குடியிலும் கூட்டங்கள் நடைபெறுகிறது. அனைத்துக் கூட்டங்களிலும் நான் கலந்து கொண்டு பேசுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3 பேரின் தூக்கு தண்டனை: மத்திய, மாநில அரசு நினைத்தால் தடுக்க முடியும் - வைகோ :
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் எழுதிய நூலின் இந்தி பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கு உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அர்ப்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
மத்திய அரசு நினைத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவர்கள், கருணை உள்ளத்தோடு, தாய் உள்ளத்தோடு இந்த மூன்று உயிர்களையும் காப்பற்ற வேண்டும் என்று கட்சியினரையெல்லாம் கடந்து அனைவரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். மாநில அரசை வேண்டியிருக்கிறோம். மத்திய அரசு இந்த கட்டத்தில் கூட தடுத்து நிறுத்த முடியும். மாநில அரசு இதனை தடுத்த நிறுத்த இயலும். அவர்களையும் எப்படியாவது இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறோம் என்றார்.
மூவரின் தூக்கு தண்டனையை குறைப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் முடியும் - ராமதாஸ் :
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்ததற்கான அதிகாரப்பூர்வமான ஆணை வேலூர் சிறை நிருவாகத்திற்கு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த 7 நாட்களில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தண்டனை நிறை வற்றப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது மனிதாபிமானமுள்ள அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருக்கிறது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தடா சட்ட விதிகளுக்கு முரணாக 19 வயதிலேயே கைது செய்யப்பட்டவர். தடா சட்ட விதிகளின்படி, சி.பி.ஐ.யால் சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன் ஆகியோருக்கும் இதே முறையில்தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தனிமை சிறை கொட்டடியில் கொடுமையை அனுபவித்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த கருணை மனு மீது 11 ஆண்டுகள் கழித்து குடியரசு தலைவர் முடிவெடுத்துள்ளார். ஏற்கெனவே தூக்கு தண்டனையைவிட மிகக் கொடுமையான தனிமை சிறை தண்டனையை அனுபவித்துவிட்ட மூவருக்கும் மீண்டும் ஒரு தண்டனை வழங்குவது நீதியாக இருக்காது.
ஒருவரின் கருணை மனு மீது முடிவெடுப்பதில் காலதாமதம் செய்யப்பட்டால், அவருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எத்தனையோ தீர்ப்புகளை வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவீந்தர் சிங்பால் புல்லார் என்பவரின் கருணை மனு மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 23ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் காட்டப்பட்டது சரியல்ல என்றும், இதை அடிப்படையாக வைத்து அவரது தண்டனையை குறைப்பது குறித்த கோரிக்கை மீது முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து முருகன், சாந்தன், பரறிவாளன் ஆகிய மூவருக்கும் நீதி வழங்குவதற்கு பொருந்தும்.
இன்னொருபுறம் இந்த மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், மாநாடு, மனிதசங்கிலி எனப் பல்வேறு மக்கள் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாகரிகமான சமுதாயத்தில் தூக்கு தண்டனை என்பது பெரும் களங்கமாக இருக்கும் என்று மனிதஉரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இம்மூவரும் தண்டிக்கப்பட்ட இராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் கார்த்தி கய ன, இந்தியாவில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எந்த நிமிடம் உயிர் பறிக்கப்படுமோ என்ற வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் மூவரையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக அரசுக்கு இருக்கும் நிருவாக அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களின் தூக்கு தண்டனையை குறைப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் முடியும். எனவே, இம்மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்வதற்காக தமிழகச் சட்டப் பரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
தூக்கு தண்டனை பற்றி பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்: கிருஷ்ணசாமி
சட்டசபையில் 26.08.2011 அன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பிரச்சினை பற்றி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் ஜெயக்குமார், இந்த பிரச்சினை குறித்து பின்னர் எனது அறையில் வந்து பேசுங்கள். தற்போது பேச அனுமதி இல்லை என்றார். கிருஷ்ணசாமியின் பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்றும் அறிவித்தார்.
இதையடுத்து அவர் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே பிரச்சினை குறித்து பேச முயற்சி செய்தார். அதற்கும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கிருஷ்ணசாமி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அவையில் இருந்து வெளியேறிய பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடுவதற்காக உத்தரவு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தூக்கிலிடும் நிலைமை உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் அவர்களை காப்பாற்ற கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும். கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்ப முயற்சி செய்து வருகிறேன். ஏற்கனவே 2 முறை இதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றும் அனுமதி கேட்டேன். சபாநாயகர் அனுமதி வழங்க வில்லை. எனவே நான் வெளிநடப்பு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரத்தம் உறையும் இலங்கை தமிழினப் படுகொலைக்கு நியாயம் கேட்டு நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி
இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரம் இளைஞர் - மாணவர்களை திரட்டி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நடத்தும் நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி 2011 ஆகஸ்ட் 26ல் டெல்லியில் நடைபெறுகிறது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.சந்தோஷ்குமார் இந்தப்பேரணிக்கு தலைமை வகிக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோரும் இந்தப்பேரணியில் கலந்துகொள்கின்றனர்.
இந்தப்பேரணியில் பங்கேற்க 24.08.2011 அன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் மற்றும் தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறனும் வழியனுப்பி வைத்தனர்.
முதல்வரிடம் கேட்காமல், வேறு யாரிடம் நாங்கள் கேட்க முடியும்: வைகோ
பேரறிவாளன், முருகன், சாந்தன் விவகாரத்தில் முதல்வரிடம் கேட்காமல், வேறு யாரிடம் நாங்கள் கேட்க முடியும் என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார். சென்னை எம்.ஜி.ஆர்., நகரில் பொதுக்கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:
பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை, மத்திய அரசு உறுதி செய்துள்ளது. அவர்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது வாழ்க்கையை சிறையில் கழித்துள்ளனர்.
மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் என, அனைத்து கதவுகளை தட்டியும் பயன் இல்லை. நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன். ஒரு வேளை நீங்கள் தூக்கு தண்டனையை நிறைவேற்றினால், வரும் 2047ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது இந்தியாவில் தமிழகம் என்ற மாநிலம் இருக்காது. இந்திய தேசிய ஒருமைப்பாடும் தூக்கில் விடப்படும். இந்த விசயத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கருணை காட்டுவார் என நம்பியுள்ளோம். முதல்வரிடம் கேட்காமல், வேறு யாரிடம் நாங்கள் கேட்க முடியும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ் :
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால் அனைத்து கட்சிகளும் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தால் தமிழக முழுவதும் உள்ள மக்கள் ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம். இதனை தமிழக முதல் அமைச்சர் அவர்கள் புரிந்துகொண்டு இந்த தீர்மானத்தை நிறைவேற்றுமாறு பாமக வேண்டுகோள் விடுக்கிறது என்றார்.
பேரறிவாளன், சாந்தன், முருகனை இந்திய சட்டப்படி தூக்கிலிட முடியாது - பிரபல வழக்கறிஞர் கருத்து :
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் இந்திய சட்டப்படி தூக்கிலிட முடியாது என்று பிரபல வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி தமிழக முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு செய்தியாளர் சங்கம் சார்பில் சென்னையில் 22.08.201 அன்று பொதுக்கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு,
பூந்தமல்லி தடா கோர்ட் இந்த வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோது, தடா கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்தது. 4 பேர் தவிர மற்ற அனைவரின் தண்டனைகளும் குறைக்கப்பட்டன.
நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.டி.தாமஸ் குறைத்தார். அதற்கு அவர் கூறிய காரணம் நளினிக்கு சதி செயலில் நேரடி பங்கு இல்லை என்பதாகும். அந்த காரணம் இந்த 3 பேருக்கும் பொருந்தும்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் ஆகும். இவ்மூவரும் ஏற்கனவே ஒன்றரை மடங்கு ஆயுள் தண்டனையை அனுபவித்து விட்டனர். இந்திய சட்டப்படி ஒரு குற்ற வழக்கில் 2 தண்டனை விதிக்க முடியாது. அந்த அடிப்படையில் இவர்களை தூக்கிலிடுவது இந்திய சட்டத்திற்கு எதிரானது என்றார்.
மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து, தி.மு.க. வெளிநடப்பு
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து, தி.மு.க. அ.தி.மு.க. 25 .08 .2011 அன்று வெளிநடப்பு செய்தன.
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பிரச்னை குறித்து மாநிலங்களவையில் 24 .08 .2011 அன்று விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக, அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த பிரச்னையை விவாதிக்க மக்களவை, மாநிலங்களவையில் 25 .08 .2011 அன்று அனுமதி அளிக்கப்பட்டது.
மக்களவையில் குறுகிய நேர விவாதத்தை தொடங்கி வைத்து திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசுகையில், “இலங்கையில் தமிழர்கள் மீது அடக்குமுறை கையாளப்படுகிறது. அவர்கள் ஏராளமான கொடுமைகளை அனுபவித்துள்ளனர். மனித உரிமைகளை மீறியவர்களை சர்வதேச சட்டத்துக்கு முன் கொண்டு வர வேண்டும். இலங்கை தமிழர் நலன் காக்க, இந்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்க, பலமான இந்தியா முன்வர வேண்டும் என இந்திய தமிழர்கள் விரும்புகின்றனர்” என்றார். இதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் தம்பித்துரை உட்பட பலர் பேசினர்.
அதை அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் ஏற்கவில்லை. அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கேபினட் மந்திரியின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்' என்று டி.ஆர்.பாலு கூறினார்.
அவருக்கு அ.தி.மு.க. குழு தலைவர் தம்பிதுரை ஆதரவு தெரிவித்தார். இது சர்வதேச பிரச்சினை. எனவே, ராஜாங்க மந்திரி பதில் அளிக்க முடியாது. கேபினட் மந்திரிதான் பதில் அளிக்க வேண்டும்' என்று தம்பிதுரை கூறினார்.
அப்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த இந்தர்சிங் நம்தாரி, விதிகளின்படி, கேபினட் மந்திரியோ, ராஜாங்க மந்திரியோ அல்லது பாராளுமன்ற விவகார மந்திரியோ பதில் அளிக்க தகுதியானவர்கள்' என்று கூறினார். ஆனால் தமிழக எம்.பிக்கள் அதை ஏற்கவில்லை. எஸ்.எம்.கிருஷ்ணாதான் பதில் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர்.
அதற்கு நம்தாரி, கிருஷ்ணா மேல் சபையில் பதில் அளித்துக் கொண்டிருப்பதால், மக்களவையில் அவர் வெள்ளிக்கிழமை பதில் அளிப்பார்' என்று கூறினார். மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி அகமது, நான் பதில் அளிக்க தகுதியானவன்தான் என்ற போதிலும், உறுப்பினர்கள் விரும்பாவிட்டால், நான் பேசப் போவதில்லை' என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
மாநிலங்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், “இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு, 40 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து உலக நாடுகள் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா ஏன் கேட்கவில்லை? இலங்கை தமிழர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி துரோகம் செய்து விட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பிடிக்க விரும்பும் இந்தியா, இலங்கை மீது போர் குற்ற விசாரணை நடத்த முதலில் வற்புறுத்த வேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் மைத்ரேயன் உள்ளிட்டோர் பேசினர்.
டெல்லி மேல் சபையில், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மிகச்சிறந்த உறவு நிலவுகிறது. இலங்கை இனப்பிரச்சினை மிகவும் உணர்வுபூர்வமானது. இதற்கு நீடித்த தீர்வு காணப்பட வேண்டும். இலங்கையின் அரசியல் சட்ட வரையறைக்குட்பட்டு தீர்வு காணப்படுவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவும். எந்த அளவுக்கு உதவ முடியுமோ, அந்த அளவுக்கு உதவுவோம்.
இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி தமிழர்களின் பாதுகாப்பை மனதில் கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்தினோம். போரால் அவர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் கூறினோம்.
தற்போது, தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், போரால் இடம் பெயர்ந்த தமிழர்கள் விரைவாக மறுகுடியமர்த்தப்பட வேண்டும், உயர் பாதுகாப்பு மண்டலங்கள் நீக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் கவலைகள் போக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறோம்.
இலங்கைக்கு வருமாறு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் சூழ்நிலை குறித்து நேரில் கண்டறிய அங்கு எம்.பி.க்கள் குழுவும் செல்லும். 30 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளின் நலன்களை உறுதி செய்வதே இந்த பயணத்தின் நோக்கம்.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவை இலங்கை பாதுகாப்பு செயலாளர் விமர்சித்தது, நியாயமற்றது என்ற உறுப்பினர்களின் கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன். உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கோபத்தை நான் இலங்கை வெளியுறவு மந்திரியிடம் தெரிவிக்கிறேன். அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த குழுவின் அறிக்கை, இதுவரை ஐ.நா. அமைப்பில் முறைப்படி விவாதத்துக்கு வரவில்லை.
அப்படி வரும்போது, இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும். சேனல் 4' வெளியிட்ட வீடியோ படம் தொடர்பாக, இலங்கை அரசுதான் விசாரணை நடத்தி, ஒளிவுமறைவற்ற முறை மூலமாக, அக்குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும்.
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பணிக்காக இந்திய அரசு ரூ.500 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. 21/2 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும். விவசாய தொழிலை புனரமைக்க வேளாண் கருவிகளும், விதைகள் மற்றும் 500 டிராக்டர்களும் வழங்கப்படும். மேலும், 50 ஆயிரம் வீடுகளும் கட்டித் தரப்படும். மொத்தம் 80 கோடி டாலர் (ரூ.3,600 கோடி) கடன் வழங்கி இருக்கிறோம்.
இந்தியா இலங்கை இடையிலான சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கவலைக்குரியது.
இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.
அப்போது, இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் எண்ணிக்கை பற்றி கிருஷ்ணா கூறிய எண்ணிக்கை தவறானது என்று அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் ஆட்சேபணை தெரிவித்தனர்.
பின்னர், கிருஷ்ணாவின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது கிருஷ்ணா, உங்கள் உணர்வுகளை முற்றிலும் புரிந்து கொள்கிறேன். ஆனால், இறையாண்மை கொண்ட நாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால், நாம் ஒரு எல்லைக்குள்தான் செயல்பட வேண்டி இருக்கிறது' என்று கூறினார்.
இலங்கையில் பல லட்சம் பேரை கொன்ற ராஜபக்சேவை கோர்ட்டில் நிறுத்தக் கூடாதா? - டி.ஆர்.பாலு :
இலங்கையில் பல லட்சம் பேரை கொன்ற ராஜபக்சேவை கோர்ட்டில் நிறுத்தக் கூடாதா? என்று மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசினார்.
மக்களவையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிய விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசிய டி.ஆர்.பாலு,
தமிழர்கள் பகுதியில் சிங்களவர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. இலங்கை ராணுவத்தினர் 2500 கோவில்களை அழித்து அட்டூழியம் செய்துள்ளனர். தமிழ் கலாச்சாரதிற்கு எதிரான போரை தொடங்கியிருக்கிறது இலங்கை.
லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்வை இழந்து தவிக்கிறார்கள். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். ஐ.நா.வை நிர்ப்ந்தப்படுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். 2009ல் வன்னி மீது இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. பாதுகாப்புப் பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களிலும் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. 2009 ஜனவரி மார்ச் மாதங்களில் அப்பாவி தமிழர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ, மனிதாவிமான உதவிகள் தடுக்கப்பட்டன. அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஐநா நிபுணர் குழுவும் அறிக்கை அளித்துள்ளது. முகாம்களில் இருந்த மக்களும் சித்ரவதை செய்யப்பட்டதாக ஐநா குழு குற்றம் சாட்டியுள்ளது. கம்பிவேலி முகாம்களில் 3.30 லட்சம் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்
2009ல் வன்னி மீது இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. பாதுகாப்புப் பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களிலும் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. 2009 ஜனவரி மார்ச் மாதங்களில் அப்பாவி தமிழர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஐநா நிபுணர் குழுவும் அறிக்கை அளித்துள்ளது.
போஸ்னியாவில் மக்களை கொன்றவர்கள் சர்வதேச கோர்ட்டில் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் பல லட்சம் பேரை கொன்ற ராஜபக்சேவை கோர்ட்டில் நிறுத்தக் கூடாதா? இலங்கை ராணுவத் தளபதியை விசாரிக்க ஐ.நா.குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவும் இலங்கை அரசு மறுக்கிறது.
இலங்கையில் தமிழர்களின் நலனைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு இந்த அரசு முன்வரும் என்று தமிழர்கள் நம்பியிருந்தனர்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் எங்கள் சகோதர சகோதரிகள். தமிழ் ஈழத்துக்காக போராடிய ஒரே குற்றத்துக்காக ஏராளமான தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். அங்கு தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
போரின் போது, பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை, ராணுவத்தினர் இடித்து தள்ளி விட்டனர். அங்கிருந்த 97 ஆயிரம் அரிய புத்தகங்கள், கலை பொக்கிஷங்களை அழித்து விட்டனர். இதைத்தவிர 2 ஆயிரம் இந்து கோவில்களையும் சேதப்படுத்தி விட்டனர்.
கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் இருந்த பகுதியை, முக்தி பாகினி அமைப்புக்கு ஆதரவு கொடுத்து, இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டதால், அங்கு வங்காள தேசம் உருவானது. அது போல இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாட்டை இந்திய அரசு உருவாக்கி கொடுக்க முன் வர வேண்டும்.
இவ்வாறு டி.ஆர். பாலு பேசினார்.
இலங்கையுடன் உள்ள உறவு தேவையா? என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும் - ம.தி.மு.க. :
பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் (25.08.2011) நடைபெற்றது. ம.தி.மு.க. உறுப்பினர் கணேச மூர்த்தி பேசும்போது,
"இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு பின்பும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இலங்கைக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்களை, தமிழர்களுக்கு எதிராகவே இலங்கை பயன்படுத்தியது. இலங்கையுடன் உள்ள உறவு தேவையா? என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
கச்சத்தீவில் தமிழர்கள் மீன்பிடிப்பதை தடுக்க இலங்கை அரசுக்கு உரிமையில்லை - ஜஸ்வந்த்சிங் :
மக்களவையில் இலங்கைப் பிரச்னை குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பேசிய பாஜ தலைவர் ஜஸ்வந்த் சிங்,
இலங்கையில் தமிழர்கள் மொழி சிறுபான்மையினர் என்பது மட்டுமல்ல, இன ரீதியாகவும் சிறுபான்மையினர் என்பதால், உரிய மரியாதை தரப்படவேண்டும். தேவையான வசதிகளைச் செய்து தரவேண்டும்.
இலங்கைப் பிரச்னை விவகாரத்தில், தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத் தக்கது. மாநில அரசு இயற்றும் தீர்மானத்தில் யாரும் தலையிட முடியாது. இன அடிப்படையில் தமிழர்களுக்கு உரிய மரியாதையை இலங்கை அரசு தரவேண்டும். கச்சத்தீவில் தமிழர்கள் மீன்பிடிப்பதை தடுக்க இலங்கை அரசுக்கு உரிமையில்லை என்றார்.
போர் முடிந்த பின்னும் இலங்கை ராணுவம் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது - தம்பிதுரை :
இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை,
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு அளித்துள்ள அறிக்கை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனிதாபிமானற்ற முறையில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கைக்கு இந்தியா அளிக்கும் எந்த உதவியும் தமிழர்களை சென்று சேரவில்லை. போர் முடிந்த பின்னும் இலங்கை ராணுவம் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
ஒன்று போரின்போது பொதுமக்கள் மீது ராணுவம் குண்டு விசியது. மருத்துவமனைகள் மீதும் வீசப்பட்டது.
இரண்டு. போரில் காயம் அடைந்தோருக்கு உதவி மறுக்கப்பட்டுள்ளது.
மூன்று. தொடர்ச்சியாக தமிழர்கள் மனித உரிமை மீறலுக்கு ஆளாகி உள்ளனர்.
நான்கு. விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசு செயல்பட வில்லை. உண்மை என்ன வென்றால், இலங்கை அரசு, இந்திய அரசை மிரட்டி காரியத்தை சாதித்து வருகிறது என்றே கூற வேண்டும். நீங்கள் தமிழர் பிரச்சினை பற்றி பேசினால், நாங்கள் சீனாவின் பக்கம் சென்று விடுவோம்' என்று இலங்கை கூறுவது பற்றி சிந்திக்க வேண்டும்.
இலங்கை அரசு, இந்தியாவை எப்போதும் நண்பராக கருதுவது இல்லை. அங்கு நமது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சென்ற போது, அவரை அவர்கள் ராணுவ அணிவகுப்பின் போது எப்படி வரவேற்றார்கள்' என்பதை யோசிக்க வேண்டும். இதை நாம் மறந்து விடக்கூடாது.
இலங்கைத் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போர் முடிந்த பிறகும் தமிழர்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. இந்தியா அளிக்கும் எந்த உதவியும் இலங்கைத் தமிழர்களைச் சென்றடையவில்லை. இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்து வருகிறது. இது வருங்காலத்தில் இந்தியாவுக்கே ஆபத்தாக மாறும்.
இவ்வாறு தம்பித்துரை பேசினார்.
இலங்கையில் தமிழர்கள் மனிதர்களாக வாழ, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்.எஸ்.வி. சித்தன்
பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் (25.08.2011) நடைபெற்றது. காங்கிரசை சேர்ந்த என்.எஸ்.வி சித்தன் பேசும்போது,
"இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. மனிதர்கள் போல் அவர்கள் நடத்தப்பட வில்லை. அவர்கள் மனிதர்களாக வாழ, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
ஈழத்தமிழர்களுக்கு காங். அரசு... - கம்யூ., :
இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி டி.ராஜா,
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது.
நெருக்கடியான தருணங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது. போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஏன் வற்புறுத்தவில்லை. 2009 மே மாதத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மாபெரும் இனப்படுகொலை. இந்திராகாந்தி இருந்தவரை இந்தியாவை உலகம் கவனித்தது. இப்போது யார் இந்தியாவை கண்டுகொள்கிறார்கள் என்றார்.
இலங்கையில் இன்று தமிழ் இளைஞர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டனர் - திருச்சி சிவா :
நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த விவாத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா,
இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் தனிநாடு கேட்டதால் இந்த நிலை உருவாகவில்லை. தமிழர் மீதான வெறுப்பால் இலங்கையில் தமிழ் நூல் நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தமிழ் பெண்கள் ஒட்டுமொத்தமாக மானபங்கம் படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் இன்று தமிழ் இளைஞர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டனர். இந்திய அரசு தமிழர்களுக்காக கொடுத்த ரூ.500 கோடி எப்படி செலவிடப்பட்டது. அமெரிக்க பிரஜை கோத்தபய மீது அந்நாட்டில் விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும்.
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவையும் விசாரிக்க வேண்டும். நாடாளுமன்ற பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு மேல் சபையில் ஒரு அனுதாப தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை - அதிமுக :
பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் பேசியதாவது:
"2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த போர் முடிந்த பின்பும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். ஆனால் அப்போது கூட மேல் சபையில் ஒரு அனுதாப தீர்மானம் கூட நிறைவேற்ற வில்லை.
இலங்கை தமிழர்கள் அனாதையாக நிற்கிறார்கள். இலங்கை அரசால் அவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். அவர்களின் நல்வாழ்வுக்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக வெளிநடப்பு
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இலங்கை தமிழர் பிரச்னையை விவாதத்திற்கு எடுத்து கொள்ளாததால், திமுக, அதிமுக உறுப்பினர்கள் 24.08.2011 அன்று வெளிநடப்பு செய்தனர்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு பிரச்னையை கடந்த வாரமே விவாதிப்பதாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் அமளியால் அது விவாதிக்கப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவையில் 24.08.2011 அன்று , இலங்கை தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாநிலங்களவையில் இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி விவாதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அன்னா ஹசாரே விவகாரம் பற்றித் தான் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பா.ஜ. உறுப்பினர் எஸ்.எஸ்.அலுவாலியா குறுக்கிட்டு, �அன்னா ஹசாரே போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஊழல் பிரச்னை பற்றித்தான் முதலில் விவாதிக்க வேண்டும்� என்றார்.
இதனை கண்டித்து திமுக, அதிமுக, லோக் ஜனசக்தி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பிதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. உடனே, அவை துணை தலைவர் ரெஹ்மான்கான், 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்தி வைத்தார்.
மீண்டும் அவை கூடிய போது, நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா, �முதலில் ஊழல் பிரச்னையை விவாதிக்கலாம்� என்றார். இதை ஏற்று, இலங்கை தமிழர் பிரச்னையை 25.08.2011 அன்று எடுத்து கொள்ளலாம் என்று அவை துணை தலைவர் ரெஹ்மான்கான் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா எழுந்து, �இலங்கை தமிழர் பிரச்னையை தமிழ்நாட்டு பிரச்னையாக பார்க்கக் கூடாது. எல்லோரும் இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்� என்றார். ஆர்.ஜே.டி, எல்.ஜே.பி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக பேசினர். இதன்பின், இலங்கை தமிழர் பிரச்னையை 25.08.2011 அன்று விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னை பா.ஜ & திமுக மோதல் - மக்களவை ஒத்திவைப்பு
இலங்கை தமிழர் பிரச்னையை மக்களவையில் விவாதிக்க பா.ஜனதா எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்களுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை 23.08.2011 அன்று காலை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு ஊழல் பிரச்னை பற்றி விவாதம் நடத்துமாறு பா.ஜ.வினர் கோஷமிட்டனர். கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மறுத்த சபாநாயகர் மீராகுமார், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். முதலில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அடுக்கடுக்காக ஊழல் புகார்களை கூறினார். இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பா.ஜ.வினரும், காங்கிரசாரும் கோஷமிட்டதால் அமளி ஏற்பட்டது. இதனால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியதும் இலங்கை தமிழர் பிரச்னை மீதான விவாதம் தொடங்கியது. முதலில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவை பேச சபாநாயகர் அழைத்தார். அப்போது, பா.ஜ. உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி அவையின் மைய பகுதிக்கு ஓடிவந்தனர். ஊழல் பற்றிய சிறப்பு விவாதத்தை மீண்டும் தொடங்க வேண்டும், இலங்கை தமிழர் பிரச்னை பற்றி பேச அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். அதற்கு, இலங்கை தமிழர் பிரச்னை பற்றிய விவாதம் முடிந்தபிறகு, அதை எடுத்து கொள்வதாக சபாநாயகர் மீரா குமார் பதிலளித்தார்.
இதை ஏற்க மறுத்த பா.ஜவினர் ரகளை செய்தனர். இதனால், ஊழல் பற்றிய விவாதம் தொடரும் என்று மீராகுமார் அறிவித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த திமுக எம்.பி.க்கள், இலங்கை தமிழர் பிரச்னை பற்றிய விவாதம்தான் நடக்க வேண்டும் என்று அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். தொடர்ந்து அமளி நிலவியதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியபோது இலங்கை பிரச்னை பற்றிய விவாதத்தில் பேச டி.ஆர்.பாலு முயற்சித்தார். அப்போதும் பா.ஜ.வினர் அமளியில் ஈடுபட்டனர். முரளி மனோகர் ஜோஷியை பேச அனுமதிக்குமாறு அவர்கள் கோஷமிட்டனர். இதை எதிர்த்து திமுகவினர் கோஷமிட்டனர். அமளி நிலவியதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளி
மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு ஊழல் பிரச்னை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பா.ஜ., கம்யூனிஸ்ட்கள், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரினர். கூச்சல், குழப்பம் நிலவியதால் அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார். அவை மீண்டும் கூடியபோது, பிற்பகல் 2 மணிக்கு ஊழல் பிரச்னை பற்றி விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். ஆனால், உடனடியாக விவாதம் நடத்த வற்புறுத்தி பா.ஜவினர் கோஷம் போட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சியினரும் கோஷமிட்டதால் பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திபோடப்பட்டது.
பிற்பகலில் அவை கூடியதும், விவாதத்துக்கு அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சுக்லா, நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், ஊழல் பிரச்னை பற்றி பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பா.ஜ.வினர் கோஷமிட தொடங்கினர். இதனால், மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசால் முடியும்: வைகோ
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசால் முடியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
விருதுநகரில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்,
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசால் முடியும். இதுகுறித்து மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்த மூன்று பேரின் உயிரை காப்பாற்றுங்கள். கருணையோடு காப்பாற்றுங்கள். சட்டத்திலே இடம் இருக்கிறது. மத்திய அரசை நீங்கள் இந்த மூன்று பேரின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது ரத்து செய்ய வேண்டும். முதலில் தடை பிறகு ரத்து என்ற கோரிக்கையை வையுங்கள். மூவரின் உயிரைக் காக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழர்களின் மனதில் இடியாக தாக்கியுள்ளது - கொளத்தூர் மணி :
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே 23.08.2011 அன்று மதியம் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்குதண்டனையை அரசு ரத்து செய்ய வேண்டும் என கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.
இவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது தமிழர்களின் மனதில் இடியாக தாக்கியுள்ளது. உலக நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்று கூறினார்.
இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்: ஈழத்தமிழர் ஆதரவு கூட்டத்தில் தீர்மானம்
பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் (21.08.2011) ஈழத்தமிழர் ஆதரவு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
பொருளாதார தடை
* ஐ.நா.சபையின் நிபுணர் குழு வெளியிட்ட ஈழத்தமிழர் படுகொலை குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.நா.சபை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
* ஐ.நா.சபையின் நிபுணர் குழு தனது அறிக்கையில் இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டையும், மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களையும் சுமத்தி இருப்பதால், இந்திய அரசு அங்கு நிகழ்ந்த சம்பவங்களை இனப்படுகொலை என்று ஏற்று குற்றவாளிகளை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்...
* இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவர்களை ஐ.நா.சபை போர்க்குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கையுடன் பொருளாதார உறவுகளை இந்திய அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவது.
* தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பித்தும், இலங்கையில் முன்பு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு மாறாக தற்போது எந்தவித அதிகார பரவலையும் ஏற்பதாக இல்லை என்றும் அறிவித்து உள்ள இலங்கையின் வெளியுறவு செயலாளர் கோத்தபய ராஜபக்சேயை கண்டிக்கிறோம்.
பன்னாட்டு விசாரணை
* ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றம் செய்த குற்றவாளிகளை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
* ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்ற பின்னணியாளர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருடைய தூக்கு தண்டனையை தளர்த்தும் வகையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு கவர்னர் வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உலகில் உள்ள சகல எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும்...: நாடு கடந்த தமிழீழ அரசு கோரிக்கை
நாடு கடந்த தமிழீழ அரசின் தகவல் துறை துணை அமைச்சர் சுதர்சன், சிவகுரு நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்துமாறு கோரும் குரல்கள் தமிழகம் எங்கும் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
எழுத்தாளர்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பில் இருந்தும் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. எனவே, உலகில் உள்ள சகல எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் மரண தண்டனைக்கு எதிராக தமது ஒப்புதலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
3 பேரின் உயிரைக் காப்பாற்றுங்கள்! - ஜெயலலிதாவுக்கு உலக தமிழ் அமைப்பு வேண்டுகோள்:
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிரை காப்பாற்றுங்கள் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது கருணை மனுக்கள் இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். காலவெள்ளத்தின் பின்னோக்கிச் சென்று பார்ப்பின், உலகின் பல்வேறு நாடுகளின் சட்டங்கள் பெருந்தன்மையுடன் தங்களது தீர்ப்புகளை திருத்தி எழுதியிருக்கின்றன.
ஆனால் சட்டமே நினைத்தாலும் திருத்தி எழுதி இயலாத தீர்ப்பு மரண தண்டனையே. இதை மனதில் கொண்டே உலகிலுள்ள 130க்கும் மேற்பட்ட நாடுகள் சட்டத்தின் மூலமாகவோ, நடைமுறையின் மூலமாகவோ மரண தண்டனையை ஒழித்து விட்டன.
மரண தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்றார் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். மேலும் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. ராஜீவ் கொலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை அறிவிப்பு உலகத் தமிழர்களையும், உலகில் மனிதாபிமானம் பேணுவோரையும் பேரதிர்ச்சியும், பெருங்கவலையும் கொள்ளச் செய்துள்ளது.
தண்டனைக்குள்ளானவர்களின், குற்றத்தன்மையினையும் கடந்த 21 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் வாடும் அவர்களின் நிலையினை கருத்தில் கொண்டும் அவர்கள் மூவருக்கும் தாங்கள் தண்டனை குறைப்பு செய்ய ஆவணச் செய்ய வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
உலக நாடுகள் முன் தமிழர்களை தலை நிமிரச் செய்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்த தாங்கள் தாயுள்ளத்தோடு இவ்வேண்டுகோளையும் செயல்படுத்தினால் மனித நேயம் போற்றும் மாபெரும் தலைவராக மக்கள் மனதில் நீங்கா இடம் கொள்வீர்கள் என்பது உறுதி.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் கடிதம் எழுத வேண்டும் - சீமான் :
கோவை குஜராத்தி சமாஜத்தில் உலக மனிதாபிமானக் கழகம் சார்பில் “மனிதம் காக்க மரண தண்டனை ஒழியட்டும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:
இலங்கையில் கடந்த 1 1/2 ஆண்டுகளில் 1.75 லட்சம் தமிழகர்கள் கொல்லப்பட்டனர். ராஜபக்சே போர் குற்றவாளி என்று உலக நாடுகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசு தமிழகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மூவரின் மரண தண்டனையை மட்டுமல்லாது உலகம் முழுவதும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மரணம் என்பது தண்டனை அல்ல. அது ஒரு முடிவு.
தண்டனை என்பது திருந்தி மீண்டும் வாழ்வதற்கு வாய்ப்பு அளிப்பதுதான். 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். தமிழக அமைச்சரவையை கூட்டி 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் கடிதம் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி அமெரிக்க தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்வதற்காக கையெழுத்து பிரச்சாரம் நடைப்பெற்றது பெரும் கவனத்தை ஈர்த்தது.
சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி தமிழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பிரிமாண்ட நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சான் ஒசே, சன்னிவேல் உட்பட அருகில் இருந்த பல நகரங்களில் இருந்து தமிழர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததை காண முடிந்தது.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை மனுவில் கையொப்பங்களை சேகரித்தனர்.
இந்திய தூதரகத்தின் மூலம் இந்த கோரிக்கை மனு இந்திய அரசிற்கும் தமிழக முதல்வருக்கும் அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவித்தனர்.
மரண தண்டனைக்கான எதிரான பதாகைகளை ஏந்தி பிரிமாண்ட சென்ட்ரல் பூங்காவை சுற்றி ஊர்வலம் சென்றனர். பல இன மக்களுக்கும் போராட்டத்திற்கான காரணத்தை ஆர்வமாக கேட்டறிந்து தமிழர்களின் இப்போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்ததை கேட்க முடிந்தது.
இந்த ஆர்பாட்டத்தை ஒருகினைத்த தமிழ் உணர்வாளர்கள் தமிழக முதலமைச்சர் தலையிட்டு ஆளுநர் மூலம் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்
மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநிலத் துணைச் செயலாளர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி மற்றும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் வருமாறு,
1991ஆம் ஆண்டு நடந்த வருத்தத்தக்க கொலை சம்பவத்தைத் தொடர்ந்து தூக்கு தண்டனை வழங்கப்பட்டு கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டட நிலையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை, ரத்த செய்ய வேண்டும்û என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு ஒருமனதாக வலியுறுத்துகிறது.
உலகின் முக்கால் பகுதி நாடுகளில் மரண தண்டனை கைவிடுப்பட்டுள்ள போது பன்னாட்டு பெருமையும், பாரம்பரியமும் கொண்ட இந்திய நாடு மரண தண்டனையை தொடர்வது வளர்ந்து வருகிற பண்பாட்டுச் செழுமைக்கு எதிரானதாக அமைந்து விடக்கூடும்.
எனவே, நமது பண்பாட்டில் மரபின் அடிப்படையிலும், உலக ஜனநாயக சக்திகளின் உணர்வுக்கு இசைவாகவும் மேற்சொன்ன மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வது அவசியமாகிறது.
20 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை இனியும் தூக்கிலிடுவது தண்டனைக்கு மேல் தண்டனை வழங்குவதாகும்.
எனவே, மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துவதோடு, தமிழக முதல் அமைச்சர் நேரடியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவர்களை தூக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமேன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது.
Monday, August 22, 2011
திரைப்பட கலைஞர்களிடம் கையொப்ப பெறும் பணி ....
திரைப்பட இயக்குனர் திரு.வேலு பிரபாகரன், கவிஞர் சல்மா, திரைப்பட நடிகரும், இயக்குனருமான திரு. மனோஜ்.கே.பாரதி , நடிகை பாபிலோனா ஆகியோர் தமிழர்களை கொன்று குவித்த போர்குற்றவாளி இராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் கையொப்ப இயக்க படிவத்தில் கையொப்பமிடும் காட்சி.உடன் வன்னியரசு,இளஞ்சேகுவாரா, தகடூர் தமிழ்செல்வன், மடிபக்கம்.வெற்றிசெல்வன், எஸ்.எஸ்.பாலாஜி
Saturday, August 20, 2011
பேரறிவாளன், சாந்தன், முருகன் படம் பொறித்த பனியன் அணிந்து வைகோ, கொளத்தூர் மணி ஆர்ப்பாட்டம்
பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர் முழக்கங்களை எழுப்பினார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அந்த இயக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரையும் பாதுகாக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் 20.08.2011 அன்று தொடர் முழக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பனியனை அணிந்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த வைகோ உள்ளிட்ட தலைவர்களுக்கும் பனியன்கள் வழங்கப்பட்டன. அவர்களும் பனியன்களை அணிந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று வைகோ முழங்க மற்ற அனைவரும் அதை திரும்ப கூறினர்.
மாண்புமிகு முதல்வர் அவர்களே மூன்று தமிழர்களின் இன்னுயிரை காத்திடுங்கள்
வேண்டுகிறோம் வேண்டுகிறோம் மூன்று தமிழர்களையும் காப்பாற்றும்படி வேண்டுகிறோம்
வேதனையோடு கேட்கிறோம், விம்மலோடு வேண்டுகிறோம், கருணையோடு காத்திடுங்கள்.
தடுத்திடுங்கள் தடுத்திடுங்கள் தடுத்திடுங்கள்
உலகம் முழுவதும் வாழ்கிற பலகோடி தமிழர்கள் வேண்டுகிறார்கள் தூக்கு தண்டனையை தடுத்திடுங்கள்.
ஜாதி, மத எல்லை கடந்து அனைவரும் கண்ணீர் மல்க கேட்கிறோம்.
உங்களை விட்டால் எங்களுக்கு திக்கில்லை. வழியில்லை.
மரண தண்டனையை ஒழித்து இந்தியாவுக்கே புரட்சி வழி காட்டுங்கள்
வரலாறு நன்றி சொல்லும்
வரலாறு உங்களுக்கு நன்றி சொல்லும்
தமிழ் சந்ததிகள் நன்றி சொல்வர்
நிரபராதி தமிழர்களை காப்பாற்றிடுங்கள்
உங்கள் பின்னால் நாங்கள் நிற்போம்
கட்சி, ஜாதி, மத எல்லைகளை கடந்து தமிழ் உலகம் உங்கள் பின்னால் நிற்கும்.
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் மூன்று தமிழர்களை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு வைகோ தொடர் முழக்கங்களை எழுப்பினார்.
தங்களது கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் வரும் 22ஆம் தேதி எம்ஜிஆர் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று வைகோ தெரிவித்தார். அதில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல்வேறு கட்சி, இயக்கங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கொடி உள்ளிட்ட அடையாளங்களை எடுத்து வரவில்லை. மூன்று பேரை காப்பாற்ற முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கும் வாசகங்களை கைகளில் வைத்திருந்தனர்.
எந்த நேரத்திலும் இலங்கை தமிழர்களை மாணவர்களால் பாதுகாக்க முடியும்: வைகோ
வேலூர் ஊரீசு கல்லூரியில் தேவநேய பாவாணர் தமிழ் மன்ற தொடக்க விழா 19.08.2011 அன்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரூபஸ் மாணிக்கதாஸ் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் ஸ்டான்லி ஜோன்ஸ் முன்னிலை வகித்தார். தமிழ் மன்ற தலைவர் மணிவண்ணபாண்டியன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு தரப்பட்டுள்ள தலைப்பு உரிமைக்களம். சித்திரம் தீட்ட பயன்படும் காகிதம் உரிமைக்களம், சிலை வடிக்கும் சிற்பிக்கு பாறை உரிமைக்களம், வானம்பாடிக்கு வானம் உரிமைக்களம், போராளிக்கு யுத்தபூமியே உரிமைகளம்.
இது கட்சிக்கு அப்பாற்பட்ட விழாவாகும். வெளியில் சாலையில் கட்சியின் கொடி கட்டியிருப்பது அவர்களின் உரிமைகளமாகும். ஆனால் கல்லூரிக்குள் கட்சி கொடிகள் இருக்க கூடாது. நான் வரும் வழியில் எனது வாகனத்தில் கட்சி கொடி இருந்தது. எனக்கு பின்னால் மேலும் சில வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால் நான் கல்லூரி வாசலிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து வந்தேன். அதன்பிறகு இந்த அரங்கத்தில் உள்ள கட்சியினரை வெளியில் உட்காருமாறு கூறினேன். ஏனெனில் இது மாணவர்களின் நிகழ்ச்சி. இது கட்சி நிகழ்ச்சி கிடையாது.
வடமொழியின் பிடியில் இருந்து தாய் தமிழை மீட்க வேண்டும் என்று கூறிய தேவநேய பாவாணர் பெயரில் தமிழ்மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற தலைவர்கள் இங்கு வந்து சென்ற இந்த கல்லூரியில் நான் வந்தது குறித்து பெருமைப்படுகிறேன்.
உலகில் முதல் இனம் தமிழ் இனம் என்பதை ஆய்வின் மூலம் நிரூபித்தவர் தேவநேய பாவாணர். ஈழத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பல கொடுமைகள் அரங்கேறி உள்ளது. ஈழத்தில் மக்களுக்கு தொண்டு செய்தது திருச்சபைதான்.
ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழினம் கொன்று குவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். தமிழ் இளைஞர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்து சுட்டு கொல்லப்பட்டனர். ஈழத்தமிழரின் உரிமைக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் போராடினர். தமிழர் பகுதியில் இன்று சிங்களர்கள் குடியேறி வருகின்றனர். இவை எல்லாம் ஐ.நா.சபை அமைத்த 3 பேர் கொண்ட குழுவில் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது குற்றமற்ற 3 பேர் வேலூர் ஜெயிலில் தூக்கு மர நிழலில் உள்ளனர்.
எந்த நேரத்திலும் இலங்கை தமிழர்களை மாணவர்களாகிய நீங்கள் அவர்களை பாதுகாக்க முடியும். மாணவர்கள் கையில் தான் நாட்டின், தமிழ் இனத்தின் எதிர்காலம் உள்ளது. தமிழ் இனத்துக்காகவும், உலகின் மூத்த மொழியான தமிழை ஆட்சி மொழியாக்கவும் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
ராஜீவ் கொலையின்போது உங்கள் தலைவர்கள் எங்கே போனார்கள்! : இளைஞர் காங். யுவராஜுக்கு சீமான் கேள்வி!
பெரியார் திராவிட கழகமும், நாம் தமிழர் இயக்கமும் இணைந்து மரண தண்டனையை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம் என கடந்த 16.08.2011 அன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில்,
பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னை (சீமான்) கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியில் இருந்து எங்கள் கட்சிக்கு பாடுபட வேண்டாம். பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள்.
நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.
திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.
பெருமைக்குரிய பெருமகள் இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று. எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் ஒன்றும் இல்லையே. எங்கே போனீங்க நீங்க. எங்கே போனீங்க நீங்க.
யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன் இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா.
என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா.
யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால்நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
Friday, August 19, 2011
மரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்? - ஆனந்த விகடன்
மரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்?
ராஜீவ் கொலை மட்டும் அல்ல... எல்லாக் கொலைகளும் கண்டிக்கத்தக்கவை, பயங்கரமானவை, ஆதரிக்க முடியாதவை!
ஆனால், அநியாயத்தின் பெயரால் செய்யப்பட்ட கொலைக்குத் தண்டனையாக, நீதியின் பெயரால் கொலை செய்வது தீர்வாகுமா? கொலை செய்தவனைக் கொலை செய்வதுதான் தீர்வா? கண்ணுக்குக் கண்... பல்லுக்குப் பல்... என்று சொல்லக்கூடிய காட்டுமிராண்டிக் காலம் இருந்தது என்றால், இப்போது நடப்பதற்கு என்ன பெயர்? - மொழி எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வரும் கேள்வி இதுதான்!
இந்தக் கேள்விக்கு இறுதி விடை சொல்லாமலேயே, பேரறிவாளன் (எ) அறிவு, தாஸ் (எ) முருகன், ரவிராஜ் (எ) சாந்தன் ஆகிய மூன்று உயிர்களைத் தூக்கு மேடையில் நிறுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் தயாராகிவிட்டார்.
பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் போன்றவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள். ஆனால், புலிகளையோ, பிரபாகரனையோ தெரியாத மகாத்மா காந்தி சொன்னதையாவது கேட்க வேண்டாமா? 'குற்றவாளிக்கு உரிய மன நோய் மருத்துவமனைதான் சிறைச்சாலை. அது கொலைக் களம் அல்ல’ என்றவர், 'உயிர் இறைவனால் அளிக்கப்பட்டது. அதனைப் பறிக்க, அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை’ என்றார். காந்தி சொன்ன எதையுமே கேட்கவில்லை காங்கிரஸ். இதை மட்டுமாவது கேட்கக் கூடாதா?
1991 மே 21 - ஸ்ரீபெரும்புதூர் பனங்காட்டுக்குள் பழி தீர்க்கப்பட்டார் ராஜீவ். அந்த வழக்கில் 41 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு, பெண்கள் படைத் தலைவர் அகிலா ஆகிய மூவரும் பிடிக்க முடியாத குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள். மனித வெடிகுண்டாக வந்த தணு, பெங்களூரில் தற்கொலை செய்துகொண்ட சிவராசன் மற்றும் சுபா, மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய கோடியக்கரை சண்முகம் உள்ளிட்ட 12 பேர் மரணம் அடைந்தனர். மீதம் உள்ள 26 பேர் மீது வழக்கு விசாரணை பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் நடந்தது. 1998 ஜனவரி 28-ம் நாள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி நவநீதன் தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை ஒழிப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.
ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக் கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. ஆயுள் தண்டனை என்றால், இதுவரை நடந்த குற்றங்களுக்கு எல்லாம் 14 ஆண்டுகளில் விடுதலை செய்ய... இந்த வழக்கில் கைதானவர்கள் மட்டும் 20 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள். 'ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முழுக்க உள்ளேயே இருக்க வேண்டும்’ என்று வியாக்யானம் சொல்லப்படுகிறது. இதே தமிழ்நாட்டில்தான் ஏழு ஆண்டு களுக்குள் வெளியே வந்த ஆயுள் தண்ட னைக் கைதிகளும் உண்டு.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் - என்பதுதான் எல்லாச் சட்டத்துக்கும் முதல் விதி... மீறப்படும் முதல் விதியும் இதுதான். செத்துப்போனது ராஜீவ் காந்தியா, ராஜா ராமா என்று சட்டம் பார்க்கக் கூடாது. 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கள், 'இது பயங்கரவாத வழக்கு அல்ல. எனவே, தடா சட்டம் இந்த வழக்குக்குப் பொருந்தாது’ என்று சொல்லிவிட்டார்கள்.
''இந்திய அரசைத் திகைக்கச்செய்வதோ, இந்திய மக்களுக்கு அச்சம் உண்டாக்குவதோ சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது என்பதை மெய்ப்பிக்க போதிய ஆதாரம் இல்லை. தடா சட்டத்தின் பிரிவுகளுக்கான குற்றங்களுக்கு எங்களுக்கு முட்டுக் கொடுக்க முடியவில்லை'' என்று நீதிபதிகள் சொன்னார்கள். பழ.நெடுமாறன், மேல் முறையீடு செய்யாமல் போயிருந்தால், இன்று 26 பேரும் தூக்கு மேடையில் நின்றிருப்பார்கள். மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் வாதத் திறமையால், 22 பேருடைய உயிர்கள் தப்பின. இப்போது நான்கு உயிர்கள் துடிக்கின்றன!
பேரறிவாளனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று இங்கு இருப்பவர்களுக்கு இணையாகக் குரல் கொடுப்பவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர் கிருஷ்ணய்யர். இவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்ல. நல்லவேளை, தமிழரும் அல்ல. இந்திய நீதிமன்றங்களும் நீதிபதிகளும் 'வாழும் நீதி தேவதை’யாக எவரை நினைக்கிறார்களோ, அவரே சொல்கிறார்...
''இந்தியன் என்ற முறையில், உலகக் குடிமகன் என்ற முறையில், நீதிபதி என்ற முறையில் மரண தண்டனையை ஒழிக்கப் போராடுகின்றவன் என்ற முறையில், இதுவே என் நெடுநாளைய விருப்பம். நான் ஒரு கொள்கை வெறியன். உயிருக்கு ஆதரவும் சாவுக்கு எதிர்ப் பும் காட்டுகிற கொள்கை வெறியன். தூக்குத் தண்டனையைத் தூக்கில் இடுங்கள். இதுவே என் உறுதியான நிலைப்பாடு!'' என்றார் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
சட்டங்கள் மனிதனைத் திருத்துவதாக அமைய வேண்டும் என்ற அவர், தன்னு டைய எண்ணத்துக்கு 'வால்மீகி நடவ டிக்கை’ என்றும் பெயரிட்டார்.
''ஒரு காலத்தில் கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி, உலகின் மாபெரும் இதிகாசப் புலவர் ஆக முடியும் என்றால், எந்தக் குற்றத்துக்காகவும் ஒரு மனிதனின் உயிரை ஏன் பறித்துத் தண்டனை தர வேண்டும்?'' என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் கேட்டார். மேலும், தூக்கு மேடையில் நின்றுகொண்டு இருக்கும் பேரறிவாளன் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம், சந்தேகத்துக்கு இடமற்ற முறையில்மெய்ப் பிக்கப்படவும் இல்லை.
'சிவராசன், சுபா, தணு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும்’ என்ற தனியார் ரேடியோ ஸ்டேஷன் உரையாடலை (எக்ஸ்.பி.392) சி.பி.ஐ. தனது ஆதாரங்களில் ஒன்றாகக் காட்டி, அதையே நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டார்கள். அது உண்மையானால், இன்றைக்கு தூக்கு மேடையில் நிறுத்தப்படும் நான்கு பேரும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நான்கு பேரும் சதி தெரியாமலேயே அந்தச் சுழலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்றுதானே சொல்ல முடியும்? - பேரறிவாளனின் விடுதலைக்குப் போராடுபவர்கள் இதையே தங்கள் தரப்பு வாதமாக வைக்கிறார்கள்.
1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு சோனியா எழுதிய கடிதத்தில், 'என் அன்புக் கணவரின் கொடூரமான கொலைக்குக் காரணமாக இருந்த நான்கு பேரும் தூக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று, எங்கள் குடும்பம் நினைக்கவில்லை. எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ, கொலையாளிகள் நான்கு பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை. கொலையாளிகள் தங்களுக்குக் கருணை மனு அனுப்பும்போது, தாங்கள் அவர்களை மன்னித்து தூக்குத் தண்டனையை நிறுத்தும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார்.
'இதே நிலைப்பாட்டில்தான் நான் இன்றும் இருக்கிறேன்’ என்பதை சோனியா உறுதிப்படுத்துவதில்தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களும் அடங்கியிருக்கிறது.
120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் எனும் உலகச் சட்டம் 'கொல்லாமை’பற்றி நிறையவே சொல்கிறது.
வள்ளுவர், காந்தி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் மூவரில் யார் பேச்சைக் கேட்டாலும் மூவர் தலை தப்பும். தப்புமா?
நன்றி : ஆனந்த விகடன்
Subscribe to:
Posts (Atom)