Labels

Sunday, August 7, 2011

இலங்கையில் போர் முடிந்திருப்பதை அரசியல் தீர்வுக்கான ஒரு வாய்ப்பாகவே இந்தியா கருதுகிறது: எஸ்.எம்.கிருஷ்ணா



பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இலங்கை பிரச்சினை தொடர்பாக ஒரு அறிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாராளுமன்றத்தில் 05.08.2011 அன்று தானாக முன் வந்து (சூ மோடோ) தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


இலங்கையில் போர் முடிந்திருப்பதை அரசியல் தீர்வுக்கான ஒரு வாய்ப்பாகவே இந்தியா கருதுகிறது. ஒன்றுபட்ட நாடு என்ற வரையறைக்குள் தமிழர்கள் உள்பட அனைத்து பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இது, நீண்டகால பிரச்சினையாகவே இருந்து வருகிறது. அரசு மற்றும் தமிழர் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.


தேசிய அளவிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை தொடர்பான அரசியல் தீர்வை அடைய இந்த பேச்சு வார்த்தை உதவ வேண்டும். தேசிய நல்லிணக்கம், மறு கட்டமைப்பு மற்றும் வலுவான மேம்பாடு ஆகியவை விரைவில் நிறைவடைய வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இந்த பணிகளுக்காக இந்தியாவால் என்னென்ன உதவிகளை செய்ய முடியுமோ அனைத்தையும் செய்யும்.

தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் ஆகிய பணிகளுக்கு மிக உயரிய மற்றும் உடனடி முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இலங்கையில் அமலில் இருக்கும் நெருக்கடி நிலை நடைமுறைகள் விரைவில் ரத்து செய்யப்பட வேண்டியது அவசியம். மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்க வேண்டும்.


இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதே நேரத்தில், இலங்கையின் நிலையையும் உணர்ந்து கொள்வது அவசியம். இலங்கை மீனவர்களும் நீண்ட தூரம் கடந்து வருகின்றனர். இரண்டு தரப்பிலும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேசி வருகிறது.


இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

No comments:

Post a Comment