
தமிழ் இனத்தை உலகம் மதிக்க, உலகத் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.
ஆஸ்திரேலிய பேராசிரியர் முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழர்- ஒரு முழுமையான வரலாறு' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை (13 .08 .2011 அன்று )நடைபெற்றது. நூலை வெளியிட்ட பழ. நெடுமாறன் பேசியது:
தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு குறைவு என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களிலும் வரலாற்று குறிப்புகள் அதிகம் உள்ளன.
ஆனால், தமிழ்நாட்டு வரலாறு என்று எடுத்துக்கொண்டால், சேர, சோழ, பாண்டியன், பல்லவர் வரலாற்றோடும், பிற்காலத்தில் நாயக்கர், மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் வரலாறு என, பேராசிரியர் முருகர் குணசிங்கம் இப்போது பதிவு செய்துள்ளார்.
ஆனால், உலகம் முழுவதும் இன்று தமிழர்கள் பரவிக் கிடக்கின்றனர். இந்த உலகத் தமிழர்களுக்கு என்று ஒரு வரலாறு இதுவரை கிடையாது.
சங்க காலத்திலிருந்து மேற்கே எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமாபுரி வரை சென்று தமிழர்கள் வணிகம் செய்தனர். கிழக்கே சீனா வரை சென்று வணிகம் செய்தனர்.
இதுபோல் உலக நாடுகள் அனைத்திலும் தமிழர் வரலாறுகள் புதைந்து கிடக்கின்றன. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் தமிழர்களின் வரலாற்று தடையங்கள் இன்னமும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தொகுத்து உலகத் தமிழர் வரலாறு ஒன்று எழுதப்பட வேண்டும்.
இலங்கைத் தமிழர் வரலாற்றை எழுதியதைப்போல், உலகத் தமிழர் வரலாறும் எழுதப்படவேண்டும்.
தமிழ் இனம் இன்றைக்கு அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தட்டிக் கேட்க தமிழக மக்கள் முன்வராவிட்டால், நாளை மலேசியாவில், தென் ஆப்பிரிக்காவில், மொரீசியஸ் தீவில் என உலகம் முழுவதும் வாழும் தமிழருக்கும் இலங்கை தமிழருக்கு ஏற்பட்ட நிலைதான் நேறும். இறுதியில் இந்தியாவில் வாழும் தமிழ்நாட்டு தமிழனுக்கும் அது வந்து சேரும் என்றார்.
No comments:
Post a Comment