Labels

Sunday, August 7, 2011

உலகத் தமிழர் அமைப்பு கருத்தரங்கம்



23 ஜூலை 2011 நடை பெற்ற உலகத் தமிழர் அமைப்பு கருத்தரங்கம் . தலைப்பு : தமிழர்கள் – புலம் பெயர் தமிழர்கள் – சவால்களும் கடக்க வேண்டிய பாதையும். இதில் பல்வேறு தமிழர் முன்னோடிகள் , கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் , சமூகத் தலைவர்கள் பங்கு கொண்டனர் . படுகொலை மீதான உலகக் கண்ணோட்டம் , தமிழினத் திற்கான தீர்வுகளில் தமிழர் பங்கு , விடுதலை புலிகள் போருக்கு பின்னான அவர்களது பங்கு , 2025 ம் ஆண்டிற்குள் தமிழர்கள் அடைய வேண்டிய இலக்கு, கல்வியின் பங்கு , பொருளாதார மேம்பாடு , தமிழர்களை அரசியல் ரீதியான மேம்படுத்துதல் , தமிழர் ப்ரச்சனையும் தமிழீழ போர் பற்றிய ஊடகங்களின் பங்கு போன்ற பல தலைப்புகளில் விவாதிக்கப் பட்டன . நிறைவாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன .

பேராசிரியை சரஸ்வதி அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த அறிமுக உரையை நிகழ்த்தியதோடு தமிழர்களின் பிரச்சினைகளை குறித்தும் , அதற்கான தீர்வுகள் குறித்தும் உரை நிகழ்த்தினார்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து திரு. டி.எஸ்.எஸ்.மணி அவர்களும், இலங்கை அரசு எவ்வாறு தமிழர்களின் மீது திட்டமிட்ட இனப்படுகொலையை நீண்ட காலமாக நிகழ்த்தி வருகிறது என்பது குறித்தும் பேராசிரியர் மணிவண்ணன் அவர்களும் விளக்கினார்கள்.

தமிழர்கள் வாழும் நிலமும், கடலும் எவ்வாறு உலகிற்கு மிக முக்கியமானவைகளாக மாறி வருகின்றன என்பதையும், இதனால் தமிழர்களுக்கு ஏற்பட இருக்கும் பிரச்சினைகளையும், வாய்ப்புகளையும் குறித்து பேசிய மே.17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி , தமிழர்கள் நீண்ட நாள் நிலைத்து இருக்கக் கூடிய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.

தமிழர்களின் ஈழ விடுதலை போராட்டத்தை யூதர்களின் விடுதலை போராட்டத்தோடு ஒப்பிட்டு பேசிய மருத்துவர் எழில் நாகநாதன் யூதர்கள் எவ்வாறு தங்களுக்கு என எதுவும் இல்லாத நிலையில், படிப்படையாக கல்வி, பொருளாதாரம் , அரசியல் என எல்லா தளங்களிலும் தங்களை வளர்த்துக் கொண்டு, மிகக் கடுமையான சூழ்நிலையிலும் தங்களுக்கென ஒரு நாட்டை அமைத்தார்கள் என்பதை விளக்கினார். அவர் தமிழர்கள் தங்களுக்குள் பொருளாதார இணைப்பு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், தமிழர்களின் உரிமைகளை பெறுவதற்கு பொருளாதார வலிமை எவ்வளவு அவசியம் என்பதையும் விளக்கினார்.

ஈழத்தில் தமிழர்கள் கல்விக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து இருந்தனர் என்பதை விளக்கிய வழக்கறிஞர் பாண்டிமாதேவி தமிழர்களுக்கு கல்வி எந்த அளவு அவசியம் என்பதை விளக்கினார்.

தமிழ்நாட்டில் தமிழில் படிப்பதன் அவசியத்தையும் , தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் அனைத்து வேலை வாய்ப்புக்களும் தமிழில் உருவாக்கப் பட வேண்டியதின் அவசியத்தையும் குறித்து திரு. காரை மைந்தன் உரை நிகழ்த்தினார்.

உலகின் ஊடகங்கள் செயல்படும் முறை குறித்து மிக நுட்பமாக விளக்கிய பத்திரிக்கையாளர் திரு. ராஜு சுந்தரம் , தமிழர்கள் தங்களுக்கு நேர்ந்த அநீதியை எவ்வாறு உலகின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்பது குறித்து அருமையான தீர்வுகளை முன் வைத்தார். ஈழத்தில் நடந்த படுகொலையை இந்தியா முழுவதும் பகிரங்கப்படுத்திய ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அனைத்து செயற்பாட்டாளர்களும் , திரு.ராஜூ சுந்தரம் அவர்களிடம் நேரடியாக நன்றி தெரிவித்தனர். அதே நேரம் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஐநூறு க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் குறித்தும், காயம்பட்ட , உடல் உறுப்புக்களை இழந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் குறித்தும் ஹெட்லைன்ஸ் டுடே இந்தியாவின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

உலகத் தமிழர் அமைப்பு தீர்மானங்கள் :

௧. தமிழீழத்தின் மண்ணுக்கும் மரபுக்கும் சொந்தக்காரர் களான தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி பிடித்த ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக இந்திய அரசும் உலகத்தாரும் அறிவித்து சர்வேதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டுமென உலகத் தமிழர் அமைப்பு தீர்மானம் செய்கிறது .

௨. மகிந்த ராஜபக்ஷேவின் தலைமையில் இலங்கையில் பேரினவாத அரசு தமிழீழ மக்களை படுகொலை செய்ததை தமிழக சட்டமன்றம் உறுதி செய்திருப்பதையும் , ராஜபக்ஷேவை போற்குற்றவாளி எனவும் இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுமெனவும் தமிழக சட்டமன்ற தீர்மானம் இயற்றியதையும் உலகத் தமிழர் அமைப்பு மனமார வரவேற்பதுடன் இந்திய அரசு இதனை ஏற்று செயல் படவேண்டும் என்று உலகத் தமிழர் அமைப்பு இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது .

௩. தமிழீழ இனப்படுகொலலையை கவனத்தில் கொண்டு உலக நாடுகளும் ஐ. நா மன்றமும் தமிழீத்தை அங்கீகரிக்க வேண்டும் என உலகத் தமிழர் அமைப்பு தீர்மானம் செய்கிறது .
௪. தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் தமிழீழத்தை அமைத்துத் தருவேன் என்று சொன்னது போல முதல்வர் தமிழீழத்தை உருவாக்க தமிழீழத்திலும் , புலம் பெயர் தமிழீழ மக்களிடத்திலும் பொது வாக்கெடுப்பு எடுக்க ஆவன செய்யவேண்டுமென உலகத் தமிழர் அமைப்பு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறது .

௫ . தமிழகம், தமிழீழம் மற்றும் புலம் பெயர் தமிழர்களின் கல்வி, வழிபாடு, நிர்வாகம், நீதி, பண்பாடு விழாக்கள் என அனைத்தும் தாய் மொழி வழியில் நடைபெற வேண்டுமென உலகதமிழர் அமைப்பு தீர்மானம் செய்கிறது .

௬ . உலகளாவிய இனப் படுகொலைக்கு எதிராக உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் அதை உலகத் தமிழர் அமைப்பு எதிர்க்கும் என உலகத் தமிழர் அமைப்பு தீர்மானம் செய்கிறது

௭ . உலகில் தமிழர்கள் எங்கு இருந்தாலும் சாதி மதங்களை கடந்து , மதச் சார்பின்மை கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என உலகத் தமிழர் அமைப்பு தீர்மானம் செய்கிறது .
௮ . தமிழர்கள் அனைவரும் தங்கள் மொழியை , அந்நிய மொழியின் தாக்கத்தில் இருந்து பாதுக்காக தேவையான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என உலக தமிழர் அமைப்பு தீர்மானம் செய்கிறது .

௯. மிகவும் தொன்மையான தமிழ் மொழியை இந்திய அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் எனவும் அதற்குரிய தீர்மானத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றவேண்டும் என உலகத் தமிழர் அமைப்பு கேட்டுக் கொள்கிறது .

௧௦. தமிழக மீனவர்களை இலங்கை இனவெறி கடற்படையிடம் இருந்து பாதுகாக்க தமிழக அரசு மீனவர் பாதுகாப்பு படையை உடனே ஏற்படுத்த வேண்டும் என உலகத் தமிழர் அமைப்பு தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறது .

௧௧ . தமிழ்வழியில் படித்த வர்களுக்கு முன் உரிமை வழங்க அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைக்க தமிழர்கள் அனைவரும் முனைய வேண்டுமென உலக தமிழர் அமைப்பு தீர்மானம் செய்கிறது .

௧௨. உலக தமிழ் பெண்ணினத்தை சரி நிகர் சமமாக வாழ்வில் அனைத்து தளங்களிலும் மதிப்பதுடன் கல்வி, வேலை, அதிகாரம் என அனைத்திலும் சரிசமமாக பங்களிக்க வேண்டுமென உலகத் தமிழர் அமைப்பு தீர்மானம் செய்கிறது.

No comments:

Post a Comment