Labels

Friday, August 19, 2011

ஒருமைப்பாட்டைத் தூக்கிலிட்டு விடாதீர்கள்! – வைகோ



ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அந்த இளைஞனை எனக்கு நன்றாகத் தெரியும். ராஜீவ் கொலைச் சதிபற்றி அவருக்கு எதுவும் தெரியாது


பேரறிவாளனை பொலிஸார் கடுமையாகச் சித்திரவதை செய்துதான் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள். 19 வயதில் கைதான அந்த இளைஞன் 20 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். அவரது வாழ்க்கையே அழிந்துவிட்டது.

நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏற்கனவே ரத்து செய்ததுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்!” – பிரதமர் முன்னால் கலங்கிய குரலில் கோரிக்கை வைத்தார் வைகோ.

இது நடந்தது கடந்த 2-ம் தேதி. ஒரு வாரம் கடந்த நிலையில், டெல்லியில் இருந்து ஒரு செய்தி. ‘பேரறிவாளனின் மனு நிராகரிக்கப்பட்டது, தூக்குத் தண்டனை உறுதி!’

இந்த நிலையில் வைகோவைச் சந்தித்தோம்!


பிரதமரைச் சந்தித்து நீங்கள் கோரிக்கை வைத்ததுமே, எதிர்மறையான முடிவு வெளிப்பட்டுள்ளதே?


இப்படி ஒரு உடனடி முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பேரறிவாளன் குறித்து நான் எழுதி இருந்த கடிதத்தை முழுமையாகப் பிரதமர் படித்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாண்புமிகு வி.ஆர்.கிருஷ்ணய்யர் 2010 ஆகஸ்ட் 10-ம் நாள் பேரறிவாளனுக்கு மரண தண்டனையைக் குறைப்பதற்கான காரணங்களை அடுக்கி எழுதிய விரிவான கடிதத்தை நான் அதில் முழுமையாகக் குறிப்பிட்டு இருந்தேன்.

உயிர் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் இரக்கம் காட்டுவதை அரசியல் சட்டத்தின் கடமையாகச் (பிரிவு 15எ) சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கைதியைப் பொறுத்த வரை 20 ஆண்டு காலச் சிறைவாசம் என்பதே துன்பம் தரக்கூடிய, கண்ணீர் விடக்கூடிய மன வேதனையை ஏற்படுத்த வல்லது என்று அதில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் சொல்லி இருப்பார்.

பேரறிவாளன் குற்றமற்றவர் என்று பிரதமரிடம் சொன்னேன். 9 வோல்ட் பற்றரியை வாங்கி சிவராசனிடம் கொடுத்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 9 வோல்ட் பற்றரி, பொம்மைகளை இயக்குவதற்குப் பயன்படக்கூடியது. இது எதற்காகப் பயன்படப்போகிறது என்று தெரியாமல் பற்றரி வாங்கியது மரண தண்டனை வழங்குவதற்கான வலுவான காரணமாகக் கருத முடியாது. என்றும் சொன்னேன்.

நான் சொன்னதை கவனமாகக் கேட்ட பிரதமர், ‘இதை மத்திய உள்துறை அமைச்சருக்குப் பரிந்துரை செய்கிறேன்.’ என்று சொன்னார். ‘நீங்களும் பரிந்துரை செய்யுங்கள். நானும் அவரைச் சந்திக்கிறேன்.’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்!


உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்ன சொன்னார்?


பிரதமரிடம் கொடுத்த அதே கடிதத்தை ப.சிதம்பரம் பெயருக்குத் தயாரித்துக்கொண்டு, அன்றைய தினமே அவரைச் சந்தித்தேன்.

நீங்கள் கேட்பது பேரறிவாளனுக்கு மட்டும்தானா? என்று அவர் கேட்டார். ‘மூன்று பேருக்காகவும்தான்’ என்றேன். ‘ஒருவருக்கு குறைக்கப்பட்டால், மற்றவர்களுக்கும் அது பொருந்தும்தானே’ என்ற அமைச்சர், ‘உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய மரண தண்டனைத் தீர்ப்பில் குறை கண்டுபிடித்து, நாம் தண்டனையைக் குறைக்க முடியாது.

எனவே, கருணை அடிப்படையில்தான் எந்த முடிவும் எடுக்க முடியும்.’ என்று சொன்னார். நம்பிக்கையுடன்தான் நான் வெளியில் வந்தேன்.

அடுத்த சில நாட்களிலேயே கருணை மனு நிராகரிக்கப்பட இருப்பது உள்துறை அமைச்சருக்குத் தெரியாதா? ‘என் கையைவிட்டுப் போய்விட்டது’ என்றோ, ‘நான் என்ன செய்ய முடியும்?’ என்றோ சிதம்பரம் சொல்லி இருக்கலாம். ஏமாற்றப்பட்டது நான் மட்டும் அல்ல… ஓர் இனம் என்பதை இன்றைய மத்திய அரசு உணர வேண்டும்!


இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது திடீரென முடிவெடுக்க என்ன காரணம்?


இலங்கையில் ராஜபக்ஷ நடத்திய நாசகாரப் படுகொலைகளும்… அதற்கு இந்தியா நிதி உதவியும், இராணுவ உதவியும், தகவல் பரிமாற்ற உதவியும் செய்த விவகாரங்கள் இன்று உலக நாடுகள் முழுவதும் பரவிவிட்டன.

தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனின் மனச்சாட்சியையும் இது உசுப்பிவிட்டது. அகில இந்தியத் தலைவர்கள் இது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.

எங்களது டெல்லி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான யஸ்வந்த் சின்ஹா, ‘வைகோ படகுகளை ஏற்பாடு செய்யட்டும். நாம் அனைவரும் இலங்கையை நோக்கிச் செல்வோம்’ என்றார்.

உ.பி.யிலும் பீகாரிலும் இதுபற்றி பொதுக் கூட்டம் போடும்போது வைகோ வந்து பேச வேண்டும் என்று ராம்விலாஸ் பஸ்வான் அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஈழப் போர்க் கொடுமைகள் இந்தியாவின் முக்கிய சனல்களில் ஒளிபரப்பப்படுகின்றன. இவை அனைத்தையும் தடுப்பதற்கு காங்கிரஸ் அரசாங்கம் எடுக்கும் தற்காப்புக் கேடயம்தான் ஸ்ரீபெரும்புதூர் சம்பவம்.

அதற்காக, ராஜீவ் கொலையை உங்களால் நியாயப்படுத்த முடியுமா?

நான் ராஜீவ் கொலையை நியாயப்படுத்தவில்லை. அதற்காக, கொலையில் சம்பந்தப்படாத அப்பாவிகளையும் சதியில் உள்ளடக்கினால், அதைக் கண்டிக்க உரிமை இல்லையா? இந்த வழக்கைக் காரணமாகக் காட்டி, ஈழத் தமிழன் அனுபவித்த கொடுமையை, கொலையை, கற்பழிப்பைப் பற்றி பேசுவதைத் தடுக்க நினைப்பதைத்தான் கண்டிக்கிறேன்.

ராஜீவ் வழக்கில் ஐந்து நாட்கள் என்னையும் விசாரித்தார்கள். இந்த வழக்கின் 250-வது சாட்சியாக என்னையும் இணைத்தார்கள். ‘இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்று பூந்தமல்லி தனி நீதிமன்றத்திலேயே சொன்னவன் நான். இன்றும் அது ஆவணங்களில் இருக்கிறது.

மத்திய அரசாங்கம், இலங்கைக்கு நிதி உதவி, ஆயுத உதவி மற்றும் இராணுவத் தொடர்புள்ள அனைத்து தளவாடங்களையும் கொடுத்துள்ளது. எனவே இலங்கையில் நடக்கும் இனப் படுகொலைக்கு பொறுப்பாளியாகி, நீங்கள் பதில் சொல்ல வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாகவே சொல்லி இருக்கிறேன். இதற்கு எத்தனையோ கடித ஆதாரங்கள் இருக்கின்றன.

எனவே, ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தைக் காரணமாகக் காட்டி எங்கள் வாயைப் பூட்ட முடியாது. நாங்கள் இதுவரை பேசாமல் இருந்த வேறு விஷயங்களை இனி பேசப்போகிறோம்!


எதைச் சொல்கிறீர்கள்?


நான் காங்கிரஸ் அரசாங்கத்துக்குச் சொல்வதெல்லாம்… மூன்று உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தால்… இந்திய அமைதிப் படையை அனுப்பி இலங்கையில் நடத்திய அட்டூழியங்களைத் தமிழ் நாட்டின் தெருத் தெருவாய்ப் போய் நாங்கள் இனி சொல்வோம்.

உண்ணாவிரதம் இருந்த திலீபனைச் சாகடித்தது யார்? சென்னையில் தங்களது அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு அமைதியாகத் திரும்பிய குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர் சாவுக்கு யார் காரணம்?

சமாதானத் தூதனாக வந்த ஜானியைக் கொன்றது யார்? பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு வரவைத்து சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது யார்?

இந்திய அமைதிப் படையால் எத்தனை வீடுகள் தகர்க்கப்பட்டன? எத்தனை அப்பாவிகள் கொல்லப்பட்டனர்? எவ்வளவு தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதை எல்லாம் சொல்வேன்.

இந்தியன் பீஸ் கீப்பிங் ஃபோர்ஸ்… இந்தியன் பீஸ் கில்லிங் ஃபோர்ஸாக எப்படி எல்லாம் செயல் பட்டது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. 1987-89 காலகட்டத்தில் ராஜீவ் செய்த காரியங்கள் இன்றைய இளைய தலைமுறைகளுக்குத் தெரியாது. அதை இனி தெரியப்படுத்துவோம்!

இந்த விஷயத்தில் ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும்?

இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற 26 பேரின் விடுதலைக்காக தொடக்க காலத்தில் இருந்தே இயக்கம் நடத்தியவர் அண்ணன் பழ.நெடுமாறன். அவருடன் நானும் தோழர் தியாகு போன்றவர்களும் 1999-ம் ஆண்டு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து மனு கொடுத்தோம்.

பிரதமர் வாஜ்பாயை சந்தித்தோம். உள்துறை அமைச்சர் அத்வானியைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானியைச் சந்தித்தோம்.

உங்கள் மாநிலத்தின் முதலமைச்சர் நினைத்தால், செய்யலாம். அமைச்சரவை கூடி ஒரு முடிவெடுத்து மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றார். ஆனால், அன்றைய முதல்வர் கலைஞர் அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், கவர்னர் பாத்திமா பீவி கருணை மனுவை நிராகரித்தார்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு போட, அப்போது வழக்கறிஞராகவும் இப்போது நீதியரசராகவும் இருக்கும் கே.சந்துரு ஆஜரானார். மனுவை விசாரித்த நீதியரசர் கோவிந்தராஜன், ‘மந்திரி சபையின் கருத்துப்படிதான் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.’ என்று பாத்திமா பீவியின் உத்தரவை ரத்து செய்தார்.

இந்த சூழ்நிலையைப் புரிந்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, முதல்வர் சில முடிவுகளை எடுக்க வேண்டும். மத்திய அரசுதான் இறுதி முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கிறது. ஆனால், மாநில முதல்வர் ஓர் அழுத்தம் தரலாம்.

தமிழீழத்தைப் பிரிப்பதுபோல, தமிழ் நாட்டையும் பிரிக்கப் போகிறார்கள் என்ற பொய்யைச் சொல்லி, விடுதலைப் புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது.

ராஜீவ் கொலையைச் சொல்லி, ஈழத்தில் நடந்த இனக் கொலையை மறைக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழர் எழுச்சியை அடக்க இந்த மூன்று உயிர்களை பலியிட்டால், அதைத் தொடர்ந்து நடக்கும் விளைவுகளால், இந்தியாவின் ஒருமைப்பாட்டைத் தூக்கிலிட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை!!

நன்றி : ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment