Labels

Friday, August 12, 2011

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடல் முற்றுகை : பா.ஜ., போராட்டத்தால் பரபரப்பு





தமிழர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்கக்கோரி ராமேஸ்வரத்தில் கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜவினரை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை நிறுத்த வேண்டும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ ராமேஸ்வரத்தில் கடல் முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தது. அதன்படி பா.ஜ., கட்சியினர் ராமேஸ்வரத்தில் 07.08.2011 அன்று காலை திரண்டனர். ராமேஸ்வரம் தெற்கு கடல் பகுதியிலிருந்து மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் நாட்டுப்படகில் ஏறி துறைமுகம் பகுதிக்கு சென்றனர்.

அங்கிருந்த போலீஸ் தடுப்புகளை மீறி கடலுக்குள் சென்று போராட்டம் நடத்த முயன்ற பா.ஜ.,வினர் மற்றும் மீனவர்களை ராமநாதபுரம் எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கச்சத்தீவை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க வேண்டும் என பாஜ.,வினர் கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து துறைமுகம் பகுதியில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் சண்முகராஜா வரவேற்றார். முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன், தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினர் ராஜா, மாநில மீனவரணி தலைவர் காந்தி, மாநில மகளிரணி பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாறன் நம்பியார், மாநில பொதுச்செயலாளர்கள் சரவணபெருமாள், நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் பழனிச்சாமி, சுரேந்திரன், பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் சிப்பி சேசு பர்னாந்து, விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஆன்டன் கோமஸ் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், �கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களையும் திரட்டி கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றும் போராட்டத்தில் பாஜ., இறங்கும்� என்றார்.

அகில இந்திய பா.ஜ. செயலர் முரளிதர்ராவ் பேசியதாவது:

இலங்கை ராணுவத்தினரால், தமிழக மீனவர்கள் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி, அவரை கூண்டில் ஏற்றவேண்டும். கச்சத்தீவு, நமது மூதாதையர்களுக்கு சொந்தமான இடம். ஆனால், சீனா அங்கு தங்கி பயிற்சி அளிக்கிறது. இது பிரதமருக்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் தெரிந்தும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

தமிழர்களுக்கு காங்கிரஸ் அரசு மிகப் பெரிய அநீதியை இழைத்துள்ளது. இந்தியர்களின் மூச்சுக் காற்று பட்டாலே இலங்கை காணாமல் போய்விடும். ஆனால், தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கியும், கொன்றும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருகின்றனர்.


இதற்கு மத்திய காங்கிரஸ் அரசின் அலட்சியப் போக்குதான் காரணம். தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டி, பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்வதில்தான் அக்கறை காட்டி வருகின்றனர்.

கச்சத்தீவை திரும்பப்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் மீது தொடரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கூடிய விரைவில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பா.ஜ. சார்பில் இலங்கை செல்ல உள்ளார். மீனவர்களுக்கென வலைக்கடனாக ரூ.10 ஆயிரம் கூட வழங்க வங்கிகள் மறுக்கின்றன. அதே நேரத்தில் ரிலையன்ஸ நிறுவனத்திற்கு குறைந்த வட்டியில் 5 ஆயிரம் கோடியை வங்கிகள் வாரி வழங்கியுள்ளன.


இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில், தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினர் முரளிதரன், மாநில செயற்குழு உறுப்பினர் துரை.கண்ணன் ஏற்பாடுகளை செய்தனர். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கோட்டைபட்டினம் பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment