Labels

Thursday, August 18, 2011

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற காட்டுமிராண்டித்தனம் : திருமாவளவன் ஆவேசம்



பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.


இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


’’ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்திருந்த கருணை மனு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.


இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் அவர்கள் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விரைந்து தூக்கிலிடப்படலாம் என்கிற அச்சம் பரவியுள்ளது.


20 ஆண்டுகள் என்பது ஆயுட்காலத் தண்டனையைவிடக் கூடுதலான தண்டனையாகும். மேலும் மரண தண்டனை விதிக்கப்படும் என்கிற முடிவானது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை என்கிற நிலையாக உள்ளது. இதுவே சட்டவிரோதமாகும்.




உலகளவில் மரண தண்டனையே கூடாது என்கிற கருத்து வலுப்பெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படும் இந்தியாவில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டுவது வியப்பாக உள்ளது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட சுமார் 44 பேருக்கான மரண தண்டனையை விலக்கிக் கொள்வதற்கான கருணை மனு குடியரசுத் தலைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


மேலும் கருணை மனு விண்ணப்பிக்காமல் மரண தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 286 பேர் காத்திருப்பதாகவும் தெரிகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்தியா முழுவதும் சுமார் 330 பேர் மரண தண்டனைக்கு ஆளாகும் நிலை உள்ளது.


ஒரு ஜனநாயக நாடு இவ்வளவு பேரையும் தூக்கிலிட்டுக் கொல்லப் போகிறதா என்கிற கேள்வி எழுகிறது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற காட்டுமிராண்டித் தனமான தண்டனைக் கொள்கையிலிருந்து விலகி குற்றவாளிகளைத் திருத்துவது என்கிற தண்டனைக் கொள்கையை ஏற்றுச் செயல்படுவதற்கு உலகில் எண்ணற்ற நாடுகள் முன்வந்துள்ளன.


இன்னும் இந்தியா தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாதது பழமை வாதங்களின் பிடியிலிருந்து இந்தியா இன்னும் மீளவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்திய அரசு தமது தண்டனைக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


கொலைக் குற்றத்திற்கு தண்டனை வேண்டும்! ஆனால் கொலையே தண்டனை என்பது காட்டுமிராண்டித் தனமாகும். ஆகவே மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்திட வேண்டும்.

அத்துடன் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதே காரணங்களுக்காக சாந்தன், முருகன் என்கிற ஈழத் தமிழ் இளைஞர்களையும், ஒரு ‘பேட்டரி’ வாங்குவதற்கு உதவி செய்த குற்றத்திற்காக பேரறிவாளன் என்கிற தமிழ்நாட்டு இளைஞரையும் தூக்கிலிடுவது இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும்.


எனவே இந்திய அரசு இம்மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை விலக்கிக்கொள்ளவும், 20 ஆண்டு காலச் சிறைவாழ்வை தண்டனைக் காலமாகக் கருதி அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.


இக்கோரிக்கையை வலியுறுத்தி 19-8-2011 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் சார்பில் சென்னையில் எனது (தொல். திருமாவளவன்) தலைமையிலும், 22-8-2011 அன்று பிற மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வார்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment