
வேலூர் ஊரீசு கல்லூரியில் தேவநேய பாவாணர் தமிழ் மன்ற தொடக்க விழா 19.08.2011 அன்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரூபஸ் மாணிக்கதாஸ் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் ஸ்டான்லி ஜோன்ஸ் முன்னிலை வகித்தார். தமிழ் மன்ற தலைவர் மணிவண்ணபாண்டியன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு தரப்பட்டுள்ள தலைப்பு உரிமைக்களம். சித்திரம் தீட்ட பயன்படும் காகிதம் உரிமைக்களம், சிலை வடிக்கும் சிற்பிக்கு பாறை உரிமைக்களம், வானம்பாடிக்கு வானம் உரிமைக்களம், போராளிக்கு யுத்தபூமியே உரிமைகளம்.
இது கட்சிக்கு அப்பாற்பட்ட விழாவாகும். வெளியில் சாலையில் கட்சியின் கொடி கட்டியிருப்பது அவர்களின் உரிமைகளமாகும். ஆனால் கல்லூரிக்குள் கட்சி கொடிகள் இருக்க கூடாது. நான் வரும் வழியில் எனது வாகனத்தில் கட்சி கொடி இருந்தது. எனக்கு பின்னால் மேலும் சில வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால் நான் கல்லூரி வாசலிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து வந்தேன். அதன்பிறகு இந்த அரங்கத்தில் உள்ள கட்சியினரை வெளியில் உட்காருமாறு கூறினேன். ஏனெனில் இது மாணவர்களின் நிகழ்ச்சி. இது கட்சி நிகழ்ச்சி கிடையாது.
வடமொழியின் பிடியில் இருந்து தாய் தமிழை மீட்க வேண்டும் என்று கூறிய தேவநேய பாவாணர் பெயரில் தமிழ்மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற தலைவர்கள் இங்கு வந்து சென்ற இந்த கல்லூரியில் நான் வந்தது குறித்து பெருமைப்படுகிறேன்.
உலகில் முதல் இனம் தமிழ் இனம் என்பதை ஆய்வின் மூலம் நிரூபித்தவர் தேவநேய பாவாணர். ஈழத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பல கொடுமைகள் அரங்கேறி உள்ளது. ஈழத்தில் மக்களுக்கு தொண்டு செய்தது திருச்சபைதான்.
ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழினம் கொன்று குவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். தமிழ் இளைஞர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்து சுட்டு கொல்லப்பட்டனர். ஈழத்தமிழரின் உரிமைக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் போராடினர். தமிழர் பகுதியில் இன்று சிங்களர்கள் குடியேறி வருகின்றனர். இவை எல்லாம் ஐ.நா.சபை அமைத்த 3 பேர் கொண்ட குழுவில் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது குற்றமற்ற 3 பேர் வேலூர் ஜெயிலில் தூக்கு மர நிழலில் உள்ளனர்.
எந்த நேரத்திலும் இலங்கை தமிழர்களை மாணவர்களாகிய நீங்கள் அவர்களை பாதுகாக்க முடியும். மாணவர்கள் கையில் தான் நாட்டின், தமிழ் இனத்தின் எதிர்காலம் உள்ளது. தமிழ் இனத்துக்காகவும், உலகின் மூத்த மொழியான தமிழை ஆட்சி மொழியாக்கவும் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
No comments:
Post a Comment