Labels

Sunday, July 31, 2011

இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது பன்னாட்டு நீதிமன்றத்தில் நடவடிக்கை: திமுக வலியுறுத்தல்



ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளப்படி இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் தண்டிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மக்களவைத் தலைவர் சபாநாயகர் மீராகுமார் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,


இலங்கை தமிழர் பிரச்சனையில் அந்நாட்டு ராணுவம் ஈவிரக்கமற்ற முறையில் கொடுமையாக நடந்து கொண்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அறிக்கையின்படி போர் குற்றங்கள் புரிந்தவர்கள் மீது பன்னாட்டு நீதிமன்றத்தில் தண்டிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்
என்றார்.

இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. மக்களவைக் கட்சித் தலைவர் தம்பிதுரை கலந்து கொண்டார். இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


இது குறித்து தம்பிதுரை கூறியதாவது, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை, இலங்கையில் தமிழர் மறுவாழ்வு, ஐ.நா. வெளியிட்டுள்ள இலங்கை அறிக்கை, உள்நாட்டு நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை, மின் பற்றாக்குறை பிரச்னை ஆகியவற்றை விவாதிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் கட்சியின் சார்பில் வலியுறுத்தினேன்.


குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து நாடாளுமன்ற ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற தமிழகத்தின் அண்டை மாநில நதி நீர்ப் பங்கீட்டு பிரச்னைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படவில்லை. அது குறித்து விவாதிக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வர உள்ள அணை பாதுகாப்புச் சட்டத்தை எங்கள் கட்சி எதிர்க்கிறது. தமிழகத்தில் புதிய மின் திட்டங்கள் தொடங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று வலியுறுத்தியதாக தம்பிதுரை தெரிவித்தார்.

No comments:

Post a Comment