
'ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்!’ என்று ஐ.நா. மன்றத்தை நோக்கி உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கர்நாடகத் தமிழர்களிடம் கையெ ழுத்து வேட்டை நடத்தி, நேரடியாக ஐ.நா. சபைக்கே சென்று மஹிந்த ராஜபக்ஷேவைத் தண்டிக்குமாறு மனு கொடுத்து இருக்கிறார், கன்னடத் திரைப்பட இயக்குநர் கணேசன்.
கணேசனை பெங்களூருவில் சந்தித்தோம். ''பிறப்பால் நான் ஒரு தமிழன். முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழ் இனத்துக்கு இன்னல் நேர்ந்ததை எண்ணி, கையாலாகாத தமிழனாக பல முறை பொங்கி அழுது இருக்கிறேன்.
ராஜபக்ஷேவைத் தண்டிக்கக் கோரி, கடந்த இரண்டு மாதங்களாக 21,000-க்கும் அதிகமானவர்களிடம் கையெழுத்து வாங்கினேன். கையெழுத்துகள் வாங்கிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஜெனீவா புறப்பட்டேன்.
சுவிற்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபைக்குள் நுழைந்தவுடனே, 'நான் ஒரு தமிழன். இந்தியாவில் இருந்து வருகிறேன்’ என சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே, 'தமிழினப் படுகொலை குறித்த மனுவா?’ என ஐ.நா. மன்றத்தின்ஊழியர்களே கேட்டனர்.
அந்த அளவுக்கு ஐ.நா. முழுக்கவே, தமிழர்களின் இரத்தம் தெறித்த கோரங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். நான் கொண்டுசென்ற கையெழுத்துப் புத்தகத்தை ஐ.நா-வின் மனித உரிமைப் பிரிவில் கொடுத்தேன். அப்போது வெள்ளைக்கார அதிகாரிகள், 'நிச்சயமாக ராஜபக்ஷே தரப்பினர் தண்டிக்கப்படுவார்கள்!’ என நம்பிக்கை தெரிவித்தனர்.
சுவிற்சர்லாந்து, கனடா, பிரான்ஸ் என எங்கு சென்றாலும், போரின் கடைசிக் கட்டத்தில் வெளியேறிய ஈழத் தமிழர்கள் முறையான விசா இல்லாமல், அகதிகளாக, அடிமைகளாக, வேலை இன்றித் திரிவதைக் காண முடிகிறது.
அவர்களிடம் பேச்சுக் கொடுத்தால், 'எங்கள் நிலைமையாவது சற்று பரவாயில்லையாம்... முகாமில் தவிக்கும் எம் உறவுகள் பாவம் என கண் கசிகிறார்கள். அவர்களே, 'சந்தேகம் வேண்டாம்... நிச்சயம் தலைவர் வருவார்... தமிழ் ஈழத்தில் சந்திப்போம்’ என உற்சாகமாகக் கை குலுக்குகிறார்கள்!
உலக அரங்கில் எமக்கு ஆதரவாக எழும்பி வரும் குரல்களைக் காட்டிலும், தமிழகத்தில் இருந்து வரும் ஆதரவே எமக்கு மகிழ்ச்சி தருகிறது. அதுவும், தமிழக முதல்வர் நிறைவேற்றிய தீர்மானம் எமக்குப் புதிய தெம்பு தருகிறது.
உலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக பலமான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. இது தமிழினத்தின் கனவை நிறைவேற்றப் பெரிதும் உதவும் என என் கைகளை இறுகப் பற்றி உருத்திரகுமாரன் உறுதியாகச் சொன்னது புதுத் தெம்பை தந்தது என்று கண்கள் பனிக்கப் பேசினார்.
இதை ஐ.நா. எப்படிப் பயன்படுத்துகிறது என்று பார்ப்போம்!
நன்றி : ஜூனியர் விகடன்
No comments:
Post a Comment