Labels

Tuesday, July 19, 2011

‘விடுதலை பெற்ற தெற்கு சூடானும்- தமிழீழ விடுதலையும்’- சென்னையில் கருத்தரங்கம்





நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையத்தின் ஏற்பாட்டில், ‘விடுதலை பெற்ற தெற்கு சூடானும்-தமிழீழ விடுதலையும்’ எனும் கருத்தரங்கமொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.

தோழமை மையத்தின் தலைவர் பேராசிரியர் சரஸ்வதி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் கல்வியாளர்கள், கட்சித் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் என பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

கருத்தரங்கின் தொடக்கத்தில் அவுஸ்ரேலியாவில் உருவாக்கப்பட்ட யாழினி எனும் குறும்படம் திரையிடப்பட்டது. இக்குறும்படம், சமகாலத்தில் தமிழீழத்தில் பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் பற்றிய பதிவினைக் கொண்டிருந்தது.

தென் சூடானிய விடுதலைப் போராட்டத்துக்கும், ஈழவிடுதலைப் போராட்டத்துக்கும் இடையிலான ஒற்றுமைகள் – வேறுபாடுகள் பற்றி கருத்துரைத்த தமிழர் தேசிய இயக்க தலைவரும் – தோழமை மைய ஒழுங்கிணைப்பாளர்களில் ஒருவருமாகிய தோழர் தியாகு,
“பிரித்தானிய வல்லாதிக்க சக்தி எவ்வாறு தமிழர்களை ஆட்சி செய்கின்ற அதிகாரத்தை சிங்கள பேரினவாத அரசிடம் கையளித்துச் சென்றதோ அதுபோலவே தென் சூடானிய மக்களை ஆட்சி செய்கின்ற அதிகாரத்தை வட சூடானிய அதிகார மையத்திடம் கையளித்துச் சென்றது.

1970களில் வீழ்ச்சி கண்ட தென் சூடானிய விடுதலைப் போராட்டம், 1983களில் மீளவும் எழுர்ச்சி கொண்டது போல், ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றுத் தடத்தில் மக்கள் எழுச்சிக்கு 1983 வித்திட்டது.

தென்சூடானிய சுதந்திரத்துக்கான கருத்து வாக்கெடுப்பில், தென்சூடான் நிலப்பரப்புக்குள் வாழ்கின்ற தென்சூடானிய மக்கள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழ்கின்ற தென்சூடானிய மக்களும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று, வாக்களித்து சுதந்திர உரிமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

எதிர்காலத்தில், தமிழீழ சுதந்திரத்துக்கான கருத்து வாக்கெடுப்பில், புலம்பெயர் ஈழத் தமிழ் மக்களும், வாக்களிப்பதற்கான உரிமையை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும், தமிழீழ தேசிய அட்டை வெளிப்படுத்தி நிற்கின்றது“ என்று தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கில் மனிதநேய மக்கள் கட்சிப் பிரதிநிதி அஸ்னம் பாட்சா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஸ்ணசாமி, இந்திய கொம்யூனிற் கட்சிப் பிரதிநிதி நா.நஞ்சப்பன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பிரதிநிதி மு.தனியரசு, ஊடகவியலாளர் எஸ்.மணி, அகில இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதி மகேஸ் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல்பீடத் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன் உட்பட பல பேராளர்கள் பங்கெடுத்து தமிழீழ விடுதலைக்கான தங்களது ஆதரவுக் கரத்தை நீட்டினர்.

No comments:

Post a Comment