
இந்தியாவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கம் நிலை வரும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கை கொலை களம் என்கிற குறுங்தகடுகளை கிராமம் கிராமமாக மக்களிடம் ஒளிபரப்பி கையெழுத்து இயக்கத்தை நடத்த இருக்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிக்கிறது. அது முன்னெடுக்கிற முயற்சிகளுக்கு சர்வதேச அளவில் ஒத்துழைப்பு நல்க முடிவு எடுத்திருக்கிறது. ஈழத்தில் மறுவாழ்வு பணிகள் முறையாக நடப்பது இல்லை. இந்திய அரசு அளித்த உதவித் தொகை முறையாக மக்களுக்கு செலவு செய்யப்படவில்லை.
வன்னிப் பகுதி முழுவதும் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. நிலையான ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்ட கலாச்சார சீரழிவு நடத்தப்பட்டு வருகிறது. புலிகள் என்கிற பெயரால் 11 ஆயிரம் பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். திருமணக்கூடங்களில், தனியார் இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வதைசெய்யப்படுகிறார்கள்.
சிங்கள ராணுவத்தினால் தமிழ் பெண்கள், பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதையெல்லாம் சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்து வருகிறது. குறிப்பாக இந்திய அரசு இதை அனுமதித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது
மத்திய அரசாங்கத்தை சர்வதேவ சமூகம் மட்டும்தான் பணிய வைக்கமுடியும். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே ஈழம் கூடாது என்பதுதான். என்றைக்கு ராஜபக்சேவோடு இந்தியாவுக்கு கடுமையான முரண்பாடு ஏற்படுகிறதோ, அன்றைக்கு இந்தியாவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கிற நிலை வரும். விடுதலைப்புலிகளை ஆதரித்து தமிழீழம் வாங்கி தருகிறோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பார்கள்.
இந்திராகாந்தி அம்மையார் அன்றைக்கு ஜெயவர்த்தனே அரசை மிரட்டுவதற்காக போராளிகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுத்தார். போராளிகள் யாரும் அதை கேட்கவில்லை. அன்றைக்கு அவர்களுக்கு பயிற்சி கொடுத்தது இந்திய அரசுதான். ஆயுதங்கள் கொடுத்தது இந்திய அரசுதான். ஐந்து குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களுக்கு ஆயுதங்களை அள்ளி கொடுத்து, ஜெயவர்த்தனேவுக்கு எதிராக கலவரங்களை உண்டுபண்ணுங்கள் என்று சொன்னது இந்திய அரசுதான். ஜெயவர்த்தனே பணிந்த பின்னர், ஆயுதங்களை கீழே போடுமாறு போராளிகளிடம் சொன்னார்கள். அப்போது பிரபாகரன் மட்டும் அதனை மறுத்தார். உங்களுக்காக ஒன்றும் நாங்கள் ஆயுதம் ஏந்தவில்லை. எங்களுக்காகத்தான் ஆயுதம் ஏந்தினோம் என்று அன்று உரைத்தார். இதுதான் அவர்களுக்கிடையே இருக்கும் முரண்பாடு.
சர்வதேச அளவில் இலங்கை அரசோடு முரண்பாடு வரும்போது மட்டும்தான், இந்திய அரசு பணியுமே தவிர, தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டில் நடத்துகிற போராட்டங்களால் இந்திய அரசு பணியாது. சர்வதேச சமூகத்தின் அழுத்தம் வரும்போதுதான் ஈழம் கூடாது என்கிற இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை மாறும்.
இலங்கை அரசாங்கம் இந்தியாவை சார்ந்து இருக்கிற வரையில் இந்தியா ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருக்கும். ராஜபக்சே இந்தியாவை எதிர்க்கிற நிலையில், விடுதலைப்புலிகளை இந்தியா ஆதரிக்கும் நிலை வரும். இந்தியாவே விடுதலைப்புலிகளை மறுபடியும் உயிர்பிக்கும். சிங்கள அரசோடு இந்திய அரசாங்கம் முரண்படுகிறபோது இந்த நிலை ஏற்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திருமாவளவன் பதில் அளித்தார்.
கேள்வி: ஈழத்தை ஆதரிக்கிற பல அமைப்புகள் தமிழகத்தில் இருக்கிறது. தனித் தனியாக போராடுவதைவிட கட்சியை மறந்து மற்ற மாநிலங்களைப் போல ஒற்றுமையோடு அனைவரும் போராடுகிற நிலை தமிழத்தில் ஏற்படுமா?
பதில்: அந்த முயற்சிகள் எல்லாம் எடுத்து நான் தோற்றுப்போன நிலையில்தான் இந்த முயற்சி எடுக்கிறோம். தமிழகத்தில் ஈழத்தை வெளிப்படையாக ஆதரிக்கிற கட்சிகள் மூன்றுதான். மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள். இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதற்கு என்று 2009 நாடாளுமன்ற தேர்தலில் நான் போராடி பார்த்தேன். நெடுமாறன் அவர்களுடன் நான் இதைப்பற்றி பேசினேன்.
அன்று பாமகவும், மதிமுகவும் அதிமுகவை ஆதரித்து வந்தார்கள். என்னை திமுகவின் ஆதரவாளனாகவே பார்த்தார்கள். நான் அப்படி இருக்கவில்லை. திமுக அணியில் இருந்தபோதும் கூட, அவர்களோடு பயணம் செய்தேன். தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பு, கருணாநிதியின் எதிர்ப்பு என்றே தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சனையை பார்க்கிறார்கள்.
இலங்கையை எதிர்ப்பதைவிட, ராஜபக்சேவை எதிர்ப்பதைவிட, சோனியா காந்தியை எதிர்ப்பதைவிட, ஈழத்துக்கு எதிரான சர்வதேச நாடுகளை அம்பலப்படுத்துவதைவிட தமிழ்நாட்டில் ஈழத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் வெறும் கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு என்கிற வகையில் இப்பிரச்சனையை சுருக்கி விட்டார்கள். இது ஒரு வெட்கக்கேடான, சாபக்கேடான நிலை.
கேள்வி: ஈழம் என்கிற ஒரு விஷயத்திற்காக இனி வரும் காலங்களிலாவது தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: வைகோவோடு கைகோர்ப்பதற்கும், நெடுமாறன் அவர்களோடு கைகோப்பதற்கும், பாமகவோடு கைகோப்பதற்கு நான் என்றும் தயாராக இருக்கிறேன். எந்த ஒரு நிபந்தனைகளும் இல்லாமல் ஈழத்தை ஆதரிக்கிறவர்களோடு பயணம் செய்ய நான் தயார்.
No comments:
Post a Comment