Labels

Friday, July 15, 2011

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்: இந்தியா



இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட போரில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக ஐ.நா. சபை நியமித்த நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சில போராளிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொல்லும் காட்சிகள், இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்சினை குறித்து டெல்லியில் 15.07.2011 அன்று மத்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:


இலங்கையில் பல்வேறு வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர். எனவே, அவர்களின் நலனில் இந்தியாவுக்கு அக்கறை உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சட்டரீதியான மனக்குறைகள் உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அந்த அடிப்படையில், தாம் இலங்கையின் சம அந்தஸ்து பெற்ற குடிமக்கள்தான் என்றும், தாம் கவுரவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ முடியும் என்றும் இலங்கை தமிழர்கள் எண்ணும் அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதான், இப்பிரச்சினையில் இந்தியாவின் பார்வை.

இலங்கை போரின் இறுதி நாட்களில் நடந்தவை பற்றி தெளிவாக தெரியவில்லை. அப்போது நடந்தவை பற்றி தனக்கு விளக்குவதற்காக, ஐ.நா. பொதுச்செயலாளர் ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையை பொறுத்தவரை, பல்வேறு கேள்விகள் உலவுகின்றன. இப்பிரச்சினையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சில நாடுகள் எழுப்பின.

இந்தியாவை பொறுத்தவரை, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசின் கருத்துகளை பல்வேறு தருணங்களில் கேட்டுள்ளது. கடந்த மே மாதம், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி டெல்லிக்கு வந்தபோதும், கடந்த மாதம் கொழும்பு நகரில் நடைபெற்ற சந்திப்பின்போதும் கேட்டுள்ளோம்.

இந்த குற்றச்சாட்டுகள் பற்றி இலங்கை அரசு விரிவான முறையில் ஆய்வு செய்வது அவசியம். மனித உரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.

இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிந்ததால் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்களை மறுகுடியேற்றம் செய்யும் பணிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்.


இவ்வாறு விஷ்ணு பிரகாஷ் கூறினார்.

No comments:

Post a Comment