
சங்கரன்கோவில் கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து உயிர் நீத்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.
கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்தத வைகோ கண்கலங்கினார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார்.
அப்போது பேசிய வைகோ,
நெல்லை மாவட்டம் சீவகம்பட்டியை சேர்ந்த ராமசுப்பு சுப்புலட்சுமி ஆகியோரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 25) என்ற இளைஞன், என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இலங்கை தமிழர்களையும், அவர்களின் பச்சிளங் குழந்தைகளையும் ராஜபக்சே அரசு கொன்று குவித்து விட்டது. இந்த கொடூர சம்பவத்தை என்னால் தாங்க முடியவில்லை என அந்த இளைஞன் தனது வீட்டிலும் நண்பர்களிடத்திலும் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்து, வீட்டில் வைத்து இருந்த 2 லிட்டர் பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயம் அடைந்த அவரை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், ராஜேபக்சேவுக்கு எதிராகவும் பேசி உள்ளார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் இலங்கை தமிழர்களுக்காக கிருஷ்ணமூர்த்தி உயிரை விட்டதை தெரிந்தும், அதனை சாதாரணமான தற்கொலை என்று பதிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
இலங்கை அரசு மீது போர் குற்றம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த ஐ.நா. சபை 3 பேர் கொண்ட குழு அமைத்து இலங்கைக்கு அனுப்பியது. அவர்களை அந்த அரசு இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இலங்கை மந்திரி மூலம் ஐ.நா. சபை தலைவர் அவமதிக்கப்பட்டார். இந்திய அரசு, இலங்கை அரசை பல்வேறு நிலைகளில் ஆதரித்து வருகிறது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்ற போது அதை இலங்கை ராணுவத்தினரால் தாங்க முடியாமல், சர்வதேச எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்சென்று கொன்று, அவர்களது உடல்களை அரசு மருத்துவமனையில் வைத்து உள்ளனர். இதுகுறித்து தமிழகத்தில் மீனவர்களை காணவில்லை என கொந்தளிப்பு ஏற்பட்டது. உடனே இலங்கை அரசு அந்த மீனவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடுகிறது. எனவே இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செய்ய கூடாது.
தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர்தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்படவேண்டும். ஐநா சபையால் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன்.
இளைஞர்களே போராடுங்கள், உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியை நம்பி இருந்த ஏழை குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
தமிழருக்காய் இன்னுயிர் தந்த கிருட்டிணமூர்த்திக்கு நாம் தமிழரின் வீரவணக்கம் - சீமான் :
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கிருட்டிணமூர்த்தி என்ற நம் தமிழ் உறவு ஈழத்தில் தமிழ்ச் சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை கண்டு மனம் பொறுக்காமலும், தமிழர்கள் இன்னும் அங்கு படும் இன்னல் கண்டும் நேற்று அதிகாலை 5 மணி அளவில், 3 லிட்டர் கல்லெண்ணையை (பெட்ரோலை), தன் மீது ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு தன் இன்னுயிரைப் போக்கிக் கொண்டார் என்னும் துயரச் செய்தி என் நெஞ்சில் இடியாய்த் தாக்கியது. அவருக்கு நாம் தமிழர் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மண்ணில் இன்னும் இனமானம் அற்றுப்போய் விடவில்லை அது இன்னும் நீறு பூத்த பெரு நெருப்பாக அனைவரின் நெஞ்சிலும் இருக்கிறது என்று அப்துல் ரவூப் தொடங்கி, முத்துக்குமார், ரவிச்சந்திரன், உள்ளிட்டு இப்பொழுது தன் இன்னுயிர் துறந்த கிருட்டிணமூர்த்தி போன்ற எத்தனையோ மானமுள்ள மறத்தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இந்தச் சமூகத்தின் செவிட்டுக்காதில் மட்டும் எம் தமிழ்ச் சொந்தங்களின் கூக்குரலும் அவர்கள் படும் துயரமும் இன்னம் விழவில்லை.
இனம் வீழ்ந்தது அழுவதற்கு அல்ல, மீண்டும் எழுவதற்கு என்றும் அதற்கு நம் அனைவரின் பங்களிப்பும் தேவை என்பதால் உயிரைப்போக்கிக் கொள்வது போன்ற அளப்பரிய தியாகச் செயலில் ஈடுபட வேண்டாம் என்று எம் சொந்தங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே சமயத்தில் லட்சிய உறுதி கொண்ட கிருட்டிணமூர்த்தி போன்ற மறத்தமிழர்கள் எதற்காக தம் இன்னுயிரை இழந்தார்களோ அந்த லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். அதே சமயத்தில் இனியொரு கிருட்டிணமூர்த்தி தோன்றாமல் இருப்பது, நமது கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும் தான் அந்த நிலையை உருவாக்கும். நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் போராட்டப் பாதையை நாம் தொடர வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment