Labels

Saturday, April 2, 2011

ராஜபக்சே வருகையை கண்டித்து போராட்டங்கள்



ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு: மதிமுகவினர் கைது

மும்பையில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுகவினர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.


கோவை காந்திபுரம்û பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.


அப்போது அவர்கள் இலங்கை அதிபருக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது ராஜபக்சேவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து கிருஷ்ணசாமி உள்ளிட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈழத்தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேவை கிரிக்கெட் போட்டியை காண்பற்கு இந்திய அரசு அழைத்திருப்பது தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் தெரிவிததனர்.


ராஜபக்சே உருவப் படம் எரிப்பு :

ராஜபக்சே வருகைக்கு எதிர்பபு தெரிவித்து அவரது உருவ படத்தை மும்பையில் எரித்தனர்.
மும்பையில் நடைபெறும் இலங்கை, இந்தியா மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார்.


இதையொட்டி ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முற்பட்ட மும்பை விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் பொறுப்பாளர் ஸ்ரீதரன் உள்பட 8 பேரை நேற்று இரவு மும்பை போலீசார் கைது செய்தனர். இதனை அந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான பாண்டியன் தெரிவித்துள்ளார்.


இதேபோல் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த நாம் தமிழர் இயக்கத்தினர் தயாரானார்கள். அப்போது மும்பை தாராவி பகுதியில் ராஜபக்சேவின் உருவ படம் எரிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்டார்.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு - நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

இந்தியா இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று (சனிக்கிழமை) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியை காண இலங்கை அதிபர் ராஜபக்சே மும்பை வர உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் இயக்கத்தினர் 01.04.2011 அன்று தாராவியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ஆ.கணேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவப்படத்தை நாம் தமிழர் இயக்கத்தினர் தீயிட்டு கொளுத்தினர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கென்னடி, சுந்தர், நாதன், பன்னீர் செல்வம், ராஜா உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் கறுப்பு கொடி காட்ட உள்ளதாக நாம் தமிழர் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு- பெங்களூரில் ஆர்ப்பாட்டம் :


இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று மும்பையில் நடந்தது. இந்த போட்டியை பார்க்க இலங்கை அதிபர் ராஜபக்சே 02.04.2011 அன்று மும்பைக்கு வந்தார்.

இந்த நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் டவுன் ஹால் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது ராஜபக்சேயின் உருப்படத்துக்கு தீ வைத்து எரித்தனர். மேலும், ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் கர்நாடக பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் பழனி, நாம் தமிழர் கட்சி தலைவர் பிரபு, தமிழர் ஈழத்தின் ஆதரவாளர் செல்வம், கர்நாடக நவ நிர்மாண் வேதிகே ராஜேந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இதுபற்றி கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன்,


’’இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போர் நடந்தபோது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை ராஜபக்சே கொன்று குவித்தார். கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி அவர் நடந்து கொண்ட விதத்தை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன.


அப்படிப்பட்ட மோசமான ராஜபக்சே இந்தியா வர அனுமதிக்கவோ அல்லது வரவேற்கவோ கூடாது.

போர் முடிந்த பின்னரும் அங்குள்ள தமிழர்களுக்கு எந்த வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைபட்டு உள்ளார்கள். இலங்கையில் தமிழ் இனத்தை அழித்து வரும் ராஜபக்சேவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்று கூறினார்.

No comments:

Post a Comment