Labels

Saturday, April 23, 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. தீவிர கண்காணிப்பு



இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போர் நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சர்வதேச போர் விதிமுறைகளை மீறி, பல்வேறு மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாகவும் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்துவதற்காக நிபுணர் குழு ஒன்றை, ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான்கிமூன் அமைத்து இருந்தார். இந்த குழு தனது விசாரணையை முடித்துக் கொண்டு 196 பக்க அறிக்கை தயாரித்து உள்ளது.


இந்த அறிக்கை, கடந்த வாரத்தில் பான்கிமூனிடம் வழங்கப்பட்டது. அறிக்கை விவரம் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.


பொது மக்களை குறி வைத்தும், மருத்துவ மனைகள், ஐ.நா.சபை, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் மீதும் இலங்கை ராணுவம் கண்மூடித்தனமான குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.


நம்பகத்தன்மை வாய்ந்த இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அறிக்கையில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.


இறுதி கட்ட போரின் போது விடுதலைப்புலிகளுடன் அப்பாவி பொது மக்கள் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் முள்ளிவாய்க்கால் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு இருந்தனர். பொது மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக, தாக்குதல் நடத்தா பகுதி என்று அறிவிக்கப்பட்ட 3 இடங்களிலும் ராணுவத்தின் தொடர் தாக்குதல் நடைபெற்றதாகவும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.


ஆனால், இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்று, இலங்கை அரசு மறுத்து வருகிறது. அதே நேரத்தில், இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்றும், ஐ.நா.சபையிடம் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து இருந்தது.


அது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ், இந்த விசாரணை அறிக்கைக்கு சட்டபூர்வ அதிகாரம் கிடையாது என்றும், அறிக்கையை வெளியிட்டால், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சமாதான முயற்சிக்கு பின்னடைவாக அமையும் என்றும் கூறி இருந்தார்.


ஆனால், இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரித்த ஐ.நா.சபை, இந்த போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அதன் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் இந்த தகவலை வெளியிட்டார்.


இலங்கை அரசின் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல், போர்க்குற்றம் பற்றிய விசாரணை அறிக்கை எந்தவித திருத்தமும் இன்றி முழுமையாக வெளியிடப்படும் என்று அவர் உறுதியுடன் அறிவித்தார்.


நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.சபையும் அதன் இலங்கை அலுவலகமும் தீவிரமாக கண்காணிக்கின்றன.


நிபுணர் குழு அறிக்கைக்கெதிராக இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனைத்துச் செயற்பாடுகள் மற்றும் வெளியிடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை தினந்தோறும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது.


இதற்கான அறிக்கை இலங்கையில் அமைந்துள்ள ஐ.நா. சபையின் கிளை அலுவலக அதிகாரியொருவரால் தினந்தோறும் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றது.

No comments:

Post a Comment