Labels

Sunday, April 24, 2011

இலங்கை அரசின் கொடுங்கரங்களை வலிமைப்படுத்தத்தான் உதவின.. :கி.வீரமணி





"ராஜபக்சேயை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தி 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று கி.வீரமணி அறிவித்துள்ளார்.


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில்,


’’ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக நடைபெற்ற உரிமைப் போரினை தனது ராணுவத்தாலும், வெளி ஆதிபத்திய சக்திகளின் ராணுவம் மற்றும் பல்வேறு நிதி ஆதாரம் பெற்று தமிழின அழிப்பு வேலையை சிங்கள ராஜபக்சே அரசு நடத்தியதை ஐ.நா. மன்றத்தால் இலங்கையின் ராஜபக்சே அரசு, போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மீது ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்திடச் செய்து, அதன்மீது நடவடிக்கை எடுக்கவும் உடனடியாக இந்திய அரசு முன்வர வேண்டும்.

அத்துடன் அவ்வரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்ற மத்திய அரசு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையை மீண்டும் உறுதிப்படுத்த - உரிமைகளைப் பெற்றுத் தர முயலுவதுதான் அதன் செயலுக்கு ஒரே நடவடிக்கையாகும்.


தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை சிங்கள அரசு திட்டமிட்டே செய்யும் கொடுமை நடந்தேறி வருகிறது. ஈழத் தமிழர்களின் கண்ணீரும், செந்நீரும் வழிந்தோடும் நிலைக்கு முற்றுப்புள்ளி இல்லை.

நமது அரசுகள் கொடுத்த நிதி உதவிகள் இலங்கை அரசின் கொடுங்கரங்களை வலிமைப்படுத்தத்தான் உதவின போலும்.


மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை எனில் இனி காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணை அறவே மறந்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும். மீண்டும் `பழைய கள்; புது மொந்தை', பாணி அரசியல் நடத்தாமல், புதிய அணுகுமுறை மிகுந்த மனிதாபிமானத்துடன் கடைப்பிடிக்க முன்வரவேண்டும்.


இதனை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரம் அல்லது முக்கிய நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சிக் கண்ணோட்டம் இன்றி அனைத்து தமிழ் உறவுகளும் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

ராஜபக்சேவை கூண்டில் ஏற்ற வேண்டும் - ராமதாஸ் :

ராஜபக்சேவை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத்தர வேண்டும். இதற்கு முதல் குரல் இந்திய அரசு எழுப்ப வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,


’’ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் உலகமே அறிந்தவைதான் என்றபோதிலும், இப்போது ஐ.நா. அமைப்பின் மூலமாக அதிகாரப்பூர்வமாக அம்பலத்திற்கு வந்திருக்கின்றன.


இது பற்றி விசாரணை நடத்திய ஐ.நா. குழு, இலங்கைப் போரின்போது பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ் மக்களை இடம் பெயரச் செய்து, செயற்கைக்கோள் உதவியுடன் அவர்களை இலங்கைப் படையினர் குறிவைத்து தாக்குதல் நடத்தி கொன்றதை உறுதி செய்திருக்கிறது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, அரசை எதிர்ப்போர் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டது ஆகியவற்றுக்கும் ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு கூறியுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்தக் கொடுமைகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு அக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஐ.நா. குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க மனிதஉரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

உலகின் செல்வாக்குள்ளோர் பட்டியலில் ராஜபக்சேவை 4-வது இடத்தில் தேர்வு செய்திருந்த டைம்ஸ் இதழ் அவரை அப்பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.

ஐ.நா. குழுவின் அறிக்கை 25-ம் தேதி முழு அளவில் வெளியிடப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் உறுதி அளித்துள்ளார். அத்துடன் அவர் நின்றுவிடக்கூடாது. ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு இலங்கைப் போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.


தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத்தரவேண்டும். ஐ.நா. குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இதற்காக எழும் முதல் குரல் இந்தியாவினுடையதாக இருக்க வேண்டும். ஏழு கோடி இந்தியத் தமிழர்களின் தொப்புள்க் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக குரல் கொடுத்து ராஜபக்சேவிற்கு தண்டனை பெற்றுத்தருவதன் மூலம் மனிதஉரிமைகளை பாதுகாப்பதில் இந்தியா எந்த நாட்டிற்கும் சளைத்ததல்ல என்பதை மத்திய அரசு நிரூபிக்கவேண்டும்.



ஐ.நா. அறிக்கை வெளியான பிறகும் இலங்கையில் தமிழர்களுக்குத் துன்பம் தொடர்கிறது. இன்னும் 16 ஆயிரம் தமிழர்கள் அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்து அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தவும் இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment