Labels

Tuesday, April 26, 2011

ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்று தர அனைவரும் போராட முன் வர வேண்டும்: வைகோ



போர் குற்றம் புரிந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் போராட முன் வர வேண்டும் என்று வைகோ கூறினார்.


ஈழத்தமிழர்களை படுகொலை செய்து போர் குற்றம் புரிந்துள்ள சிங்கள அரசை கண்டித்தும், ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 25.04.2011 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், ஆசிரியர் நடராஜன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:


ஐ.நா.சபையின் அறிவிப்பால் உலகத்தின் கண்கள் ஒளிப்பெற்றது போல் இருக்கிறது. தமிழகத்தின் உறக்கம் கலைகிறது. ஐ.நா.சபை மூலம் சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சேவை நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.


ஈழத்தமிழர்களுக்காக எத்தனையோ பேர் தீக்குளித்து மரணத்தை தழுவியிருக்கிறார்கள். நாங்கள் தீக்குளிப்பை ஊக்குவிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். யாரும் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள். நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்களுக்காக போராட வாருங்கள். மக்கள் கூட்டத்தை திரட்டுங்கள்.

எங்களை பொறுத்தவரையில் எந்த அணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விடுதலைப்புலிகளை ஆதரித்து வருகிறோம். இனியும் ஆதரிப்போம். விடுதலைப்புலிகளை பற்றி பேச எந்த அரசியல் கட்சிக்கும் அருகதை கிடையாது. புலியை கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செய்யும்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்காதவர்களை, விடுதலைப்புலிகள் பற்றி பேசாதவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.


சர்வதேச நீதிமன்றத்தில் கொடூரன் ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்று தர தமிழக மக்கள் ஒன்று திரள வேண்டும். இளைஞர்கள் போராட முன் வர வேண்டும். எங்கள் கட்சியில் சேர நான் அழைக்கவில்லை. தமிழர்களுக்காக, தமிழர்களை கொன்று குவித்த கொடூரனுக்கு தண்டனை பெற்று தர கட்சி பாகுபாடின்றி போராட முன் வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன்
என்றார்.

ராஜபட்சே தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட ஒன்று - பழ.நெடுமாறன் :

ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பேசுகையில்,


உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இடைவிடாத போராட்டத்துக்கு இப்போது ஒரு உருவம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையைக் கூட இலங்கைக்குள் அனுமதிக்காத தைரியம் ராஜபட்சேவுக்கு உண்டு.


இலங்கைக்குள் ஐக்கிய நாடுகள் சபையை அனுமதிக்காத ராஜபட்சே, இப்போது ஐக்கிய நாடுகளுக்கு எதிராக மே 1 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சிங்களவர்களை தூண்டி வருகிறார். இவர் லண்டன் சென்ற போது அவரை போர்க் குற்றவாளி எனக்கூறி அங்குள்ள அமைச்சர்கள் அவரைச் சந்திக்க மறுத்ததுடன் அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் இதை பின்பற்றின.


போர்க் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை இப்போது எவ்வாறு முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். ராஜபட்சே மீது விசாரணை இல்லாமல் தடுக்க இந்தியா உதவி செய்யும். இதை முறியடிக்க தமிழகத்தில் 6.5 கோடி தமிழர்களும் ஒன்று சேர்ந்து ராஜபட்சே போர்க் குற்றவாளி என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும்
என்றார்.

ஈழத்தமிழர்களுக்கான போராட்டம் தொடரும் - தா.பா. :

ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்,


நாம் நடத்தும் போராட்டம் இன்றுடன் முடிந்துவிடுவதில்லை. இந்தப் போராட்டம் தொடரும். இலங்கைத் தமிழர்களுக்காக நாம் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி, இப்போது உலக நாடுகள் பார்வைக்குச் சென்றுள்ளது. இதனால் ஐக்கியநாடுகள் சபையும் ராஜபட்சவை போர்க் குற்றவாளி என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


இலங்கையில் போர் நடந்தபோது சர்வதேச பத்திரிக்கையாளர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் கேமராவுக்கு அனுமதி அளிக்கவில்லை. செஞ்சிலுவைச் சங்கத்தைக் கூட அங்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அதையும் மீறி இலங்கை ராணுவத்தால், இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்போது சாட்சியமாக வந்துள்ளது.


இதுவரை நாம் போராடிய போராட்டத்துக்கு மேலும் வலு சேர்க்க இந்தியா முழுவதும் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி போராட நாம் தயாராக வேண்டும். அப்போதுதான் ராஜபட்சவுக்கு தண்டனை பெற்றுத் தரமுடியும்
என்றார்.

ராஜபக்சேவுக்கு தமிழர்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது போல செய்து காட்டி ஆர்ப்பாட்டம் :

நூதன முறையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சே போல் வேடமணிந்த ஒருவருக்கு கை விலங்கு அணிவிக்கப்பட்டு, மேடையில் அமைக்கப்பட்டிருந்த சிறை கூண்டில் அடைப்பட்டு இருப்பது போல் காட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. அவருக்கு தமிழர்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது போலவும் செய்து காட்டப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக ராஜபக்சேயின் உருவ பொம்மைகளை தமிழ் ஆர்வலர்களும், தமிழ் உணர்வாளர்களும் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் ராஜபக்சேயின் உருவபடத்தின் மீது செருப்புகளை கொண்டு அடித்தனர்.

No comments:

Post a Comment