Labels

Saturday, April 2, 2011

ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் ஆவேசம்



மும்பையில் நடைபெறும் உலககோப்பை இறுதி போட்டியை காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார். இதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையிலான உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியுடன் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப்படுத்துவதாகும். மேதகு பிரபாகரன் அவர்களின் தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நான் சென்றபோது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையிலும், இலங்கை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்க முடியாதெனத் தடை விதித்து இந்திய அரசை அவமதிக்கும் வகையில் திருப்பி அனுப்பிய ராஜபக்சே இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியா வருகிறார்.


இந்திய அரசைத் தொடர்ந்து அவமதித்து வருகிற ராஜபக்சேவை அவ்வப்போது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய அரசின் போக்கு வேதனைக்குரியதாகவும் வியப்புக்குரியதாகவும் உள்ளது.

சர்வதேசப் போர்க் குற்றவாளி என உலகின் பல நாடுகள் ராஜபக்சே மீது குற்றம்சாட்டுகிற நிலையில், இந்திய அரசு மட்டும் ராஜபக்சேவை வரவேற்று ஊக்கப்படுத்துவது தமிழினத்தை மேலும் மேலும் இந்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்நிலையில், தமிழின உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கிற இந்திய அரசின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், இந்திய அரசுக்குள்ள கடமையைக்காட்டும் வகையில் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாதென விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment