
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி ஐ.நா. அலுவலகம் முன்பு வருகிற 18ஆம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் பங்கேற்கும் என்று தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
ஈழத்தமிழர் படுகொலை பற்றிய ஐ.நா. குழுவினரின் அறிக்கையும், மத்திய அரசின் கடமையும் என்பது பற்றி தஞ்சை நகர ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் சிறப்பு பொதுக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,
இலங்கையில் நடைபெற்ற ஈழத் தமிழர்களின் படுகொலை பற்றி இதுவரை மறைக்கப்பட்டு வந்த செய்தி இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலகத்துக்கே பொது அமைப்பான ஐ.நா. ஒரு குழுவை அமைத்து, அந்த குழு இது பற்றி விசாரணை நடத்தி, 240 பக்க அறிக்கை தயாரித்து அளித்துள்ளது.
இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாக அந்த அறிக்கையில் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இந்த அறிக்கை தயாரித்தளிக்க பத்து மாத காலம் ஆகியுள்ளது.
திராவிடர் கழகத்துக்கு வாக்குக் கண்ணோட்டம் கிடையாது. நாட்டுக் கண்ணோட்டம்தான் உண்டு. சர்வாதிகாரியான ஹிட்லரையே தோற்கடிக்கும் அளவுக்கு ராஜபக்சே கொடுமைகளை நிகழ்த்தி உள்ளார். இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போனது வெட்கக்கேடானது. இலங்கையில் தமிழர்கள், தங்கள் உரிமைக்காகத்தான் போராடினார்கள். உலகத்திலேயே சொந்த நாட்டு மக்களை குண்டு வீசிக் கொன்ற சம்பவம் இலங்கையில் மட்டும்தான் நடைபெற்று உள்ளது. தமிழின அழிப்பு நடைபெற்றபோது நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்போம் என்று மத்திய அரசு இருந்தது. இப்போது அவர்களின் நிலை என்ன?
இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளன; மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கே காரணம் தமிழ்நாடு தான். ஆனால் தமிழி னம் அழிக்கப்படுவது பற்றி இந்திய அரசு கவலையில்லாமல் இருந்தது. உதவி செய்யாவிட்டாலும், உபத் திரவம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா? இல்லை.
இலங்கையில் தமிழர்களின் மீதான கொடுமை இன்னும் தொடர்கிறது என்று அய்.நா. அறிக்கையில் கூறியுள்ளது. மத்திய அரசு இன்னும் ஏன் மவுனம் சாதிக்கிறது? இனியாவது இதற்கு பரிகாரம் தேட மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தமிழ் ஈழம்தான். எனவே தமிழ் ஈழத்தைப் பிரகடனப்படுத்த உதவ வேண்டும். ராஜபக் சேவை போர்க்குற்றவா ளியாக அறிவித்து சர்வ தேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்தவேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
மே 18ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமெரிக்கத் தமிழர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக பிரகடனப்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதில் திராவிடர் கழகம் பங்கேற்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்கிறார். பெரியார் பன்னாட்டு அமைப்பினரும், திராவிடர் கழகத்தினரும் பங்கேற்கிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment