Labels

Monday, May 9, 2011

இலங்கை போர்க்குற்றம் பற்றி மேலும் விசாரணை தேவை: ஐ.நா.சபை மனித உரிமைகள் கமிஷன்




இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கமிஷன் தலைவர் வற்புறுத்தி இருக்கிறார்.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் இறுதிக் கட்ட போர் நடத்திய போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். சிங்கள ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, இது பற்றி விசாரணை நடத்த இந்தோனேசிய அட்டார்னி ஜெனரல் மார்சுகி தருஷ்மென் தலைமையில் 3 பேர் கொண்ட குழு ஒன்றை ஐ.நா.சபை அமைத்தது.


அந்த குழு விசாரணை நடத்தி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி உள்ளது. இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடந்த 5 மாத காலத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், மருத்துவமனைகள் மீது ராணுவம் குண்டுகளை வீசியதாகவும், மக்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பதை அரசு தடுத்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. பெண்கள் ஈவு இரக்கமின்றி கற்பழிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதனால், இலங்கை அரசை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வற்புறுத்தி உள்ளன.


இந்த நிலையில், ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கமிஷன் தலைவர் நவி பிள்ளை, இலங்கையில் நடந்த போர்குற்றம் பற்றி மேலும் விசாரணை நடத்த வேண்டும் வற்புறுத்தி இருக்கிறார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.


ஐ.நா.சபை அமைத்த 3 பேர் குழு விசாரணை நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி வெளியாகி இருக்கும் புதிய தகவல்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு இருப்பது விசாரணையின் மூலம் தெரிய வந்து இருப்பதால் சர்வதேச சட்டப்படி இந்த பிரச்சினையை அணுக வேண்டிய கடமை உள்ளது.


போரின் போது நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த நம்பகமான தகவல்கள் அறிக்கையில் இடம் பெற்று உள்ளன. எனவே இறுதிக் கட்ட போரின் போது நடந்த குற்றங்கள் குறித்து மேலும் முழு அளவில் பாரபட்சமின்றி ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்த வேண்டும். போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று இலங்கை அரசு மறுத்து வருவதால் சர்வதேச அளவிலான விசாரணை அவசியம் ஆகிறது.


ஐ.நா. விசாரணை குழுவிடம் சாட்சியம் அளித்தவர்கள், தகவல் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரின் பாதுகாப்பு கவலை அளிப்பதாக உள்ளது.


ஐ.நா. விசாரணை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் படி, நெருக்கடி நிலை நடவடிக்கைகளை ரத்து செய்வது, தீவிரவாத தடுப்பு சட்ட விதிமுறைகளை மாற்றி அமைப்பது, காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து நிலைமையை மேம்படுத்துவதோடு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இலங்கை இறுதிக்கட்ட போரில் உயிரிழப்பை ஐ.நா. தடுத்திருக்கலாம் - ஐ.நா. முன்னாள் பேச்சாளர் :

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஐ.நா தவிர்த்திருக்க முடியு‌ம் என ஐ.நாவின் முன்னாள் பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கைப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது ஐநா கடுமையான அழுத்தங்களை கொடுத்திருக்க வேண்டும்.


போரின் இறுதி ஐந்து மாதக் காலப்பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லையென சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் அடிக்கடி வாக்குறுதிகளை அளித்த போதிலும் பெரும்பாலான பொதுமக்கள் ராணுவத்தின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா நிபுணர் குழு கண்டறிந்துள்ளது.


பொதுமக்களிடம் கணக்கெடுப்புகளை ஐநா எடுக்க முற்பட்ட போதெல்லாம் இலங்கை அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டைகளைப் போட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment