Monday, May 9, 2011
இலங்கை அரசு பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்: பான் கி மூன்
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இறுதிகட்ட போர் நடந்தபோது அப்பாவி தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகளை சிங்கள விமானப்படை வீசியது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினார். மேலும், ஆயிரக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, சர்வதேச மனித உரிமை சட்டம் மற்றும் போர்க்குற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, இந்த கொடுஞ்செயல் குறித்து விசாரிக்க இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ்மென் தலைமையில் 3 பேர் விசாரணை குழுவை ஐ.நா அமைத்தது. அந்த குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என ராஜபக்சே அரசு அறிவித்தது. எனினும், கடந்த 10 மாதங்களாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து அந்த குழுவினர் விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையில், இறுதிகட்ட போரின் போது 40 ஆயிரம் அப்பாவி தமிழர்களை கொன்று இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்துள்ளது. 214 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஐ.நா. சபை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபோது 5 மாத காலத்துக்குள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசு நடத்திய குண்டு வீச்சினாலேயே அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்தனர். மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. போர் நடைபெறும் நிலையில் மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி போன்ற அடிப்படை மனித உரிமைகள் கிடைப்பதை அரசு மிக கவனமாக தடுத்துள்ளது.
எனவே, இலங்கை ராணுவம் நடத்திய இறுதிகட்ட தாக்குதலானது, போர்க் குற்றங்களாகவே உள்ளன. இதுபோல, அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திய விடுதலைப்புலிகளின் செயலும் போர்க்குற்றமாகும்.
இறுதிகட்ட போர் நடந்தபோது ஒரே இடத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் முடக்கப்பட்டனர். தடை விதிக்கப்பட்ட குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இரு தரப்பினருமே பொது மக்களின் அருகிலேயே அபாயகர ஆயுதங்களை பயன்படுத்தினர். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை கூட அளிக்காமல் மனித உரிமைகள் மீறப்பட்டன.
பத்திரிகைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு ஊடக அடக்கு முறை கையாளப்பட்டுள்ளது. பெண்கள் ஈவு இரக்கமின்றி கற்பழிக்கப்பட்டனர். எனவே, இலங்கையில் நடந்தது போர்க்குற்றமாகும். இது தொடர்பாக இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்தலாம். அதற்காக, சுதந்திரமான விசாரணை அமைப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஐ.நா. பொதுச் செயலாளர் தொடங்கலாம்.
இவ்வாறு ஐ.நா. விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால், இலங்கை அரசை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி உள்ளன. இதற்கிடையே, அறிக்கை தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியதாவது:
இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு தனியாக என்னால் உத்தரவிட முடியாது. அத்தகைய விசாரணை நடத்த சம்பந்தம்பட்ட நாடு (இலங்கை) ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பொதுச்சபை அல்லது பாதுகாப்பு கவுன்சில் அல்லது மனித உரிமை கவுன்சில் அல்லது சர்வதேச அமைப்பு ஆகியவற்றில் ஏதாவது ஒரு அமைப்பினால் விசாரணைக்கு ஏற்பாடு செய்யலாம்.
இலங்கையில் போர்க்குற்ற செயலில் ஈடுபட்டதற்காக அந்த நாட்டு அரசு பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment