Labels

Wednesday, May 11, 2011

புலிகள் சரணடைவதையும், செஞ்சிலுவை சங்கத்தினரை அனுமதிப்பதையும் இலங்கை விரும்பவில்லை: விக்கிலீக்ஸ் தகவல்



இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகள் சரணடைவதை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தலையீட்டின் கீழ் இந்த சரணடைதலை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சே ஏற்றுக்கொள்ளவில்லை என்று விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா அழுத்தம் கொடுத்தபோதும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.


அதேநேரம் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரை அனுமதிக்க அமைச்சர் பசில் ராஜபக்சே அனுமதி மறுத்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.


நார்வேக்கான இலங்கை தூதர், இலங்கையில் உள்ள அமெரிக்காவின் இலங்கைக்கான தூதருக்கு தகவல் ஒன்றை அனுப்பினார்.


அதில் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி எனப்படும் செல்வராஜா பத்மநாதன், தம்முடன் தொடர்புக் கொண்டு எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலைப்புலிகள் சரணடைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாக நார்வே தூதர் குறிப்பிட்டிருந்தார்.


சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான தலைமையாளர் போல் கெஸ்டேலா புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சேவிடம் தகவல் அனுப்பினார். அதற்கு கோத்தபாயவும் இணக்கம் வெளியிட்டார்.


சரணடைவதற்கு முன்னர் குறித்த புலித்தலைவர்களின் பெயர்களை தருமாறு அவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கேட்டிருந்தார். எனினும் குறித்த பெயர் பட்டியலை நார்வே தரப்புக்கு புலிகளின் தரப்பு வழங்கவில்லை.


இதேவேளை காயமடைந்த பொதுமக்களை காப்பாற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை போர் இடம்பெறும் பகுதிகளுக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அதற்கு அமைச்சர் பசில் ராஜபக்சே மூன்று நாட்களாக அனுமதி வழங்கவில்லை என்று அமெரிக்க தகவல் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.


விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் - ஐநா :


ஐநா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில், இலங்கை போர்க்குற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அதில் கலந்துகொண்டு பேசிய ஐநா மனிதாபிமான உதவிகளுக்கான செயலர் வேலரி அமோஸ் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட தகவலையும் வேலரி அமோஸ் தனது பேச்சின்போது சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment