Tuesday, April 26, 2011
இலங்கை அரசை காப்பாற்றினால் உலக அரங்கில் இந்தியாவுக்கு தீரா பழி ஏற்பட்டுவிடும்: ராமதாஸ்
ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் இருந்து இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்று இலங்கை அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மையாக இருந்தால், உலக அரங்கில் இந்தியாவுக்கு தீரா பழி ஏற்பட்டுவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை போரில் சிங்களப்படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா.குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஈரமில்லாதவர்களின் இதயங்களையும் பதைபதைக்கச் செய்யும் அளவுக்கு உள்ளன.
இலங்கை போரில் 7,721 பேர் கொல்லப்பட்டதாகவும், 18,479 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஐ.நா. அமைப்பு கடந்த 2009ஆம் ஆண்டு கூறியிருந்த நிலையில், இறுதிக்கட்டப் போரில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று இப்போது வெளியிடப்பட்ட ஐ.நா. விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வலய பகுதிகளுக்குள் மக்களை இடம்பெயரச் செய்து குண்டுவீசிக் கொன்றது. மருத்துவமனைகள் மீது குண்டுவீசியது, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தடுத்தது, தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது என இலங்கை படைகள் அரங்கேற்றிய அத்தனை போர்க்குற்றங்களையும் ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
இலங்கை படைகளின் இந்த போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரிக்க வேண்டும். இலங்கை பிரச்சனைக்கு காரணமான அம்சங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனோ, இலங்கை அரசும், ஐ.நா. அமைப்புகளில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே, இலங்கை அரசு மீது விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
பான் கி மூனின் இந்த நிலைப்பாடு போகாத ஊருக்கு வழிகாட்டுவதைப்போல அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகத்தான் ஐ.நா. மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது உறுதியாக தெரிந்த பிறகும் அதுகுறித்து விசாரணை நடத்த தயங்குவது ஐ.நா. மன்றம் அமைக்கப்பட்டன் நோக்கத்தையே சிதைத்துவிடும்.
சூடான், தர்பர், ருவாண்டா, யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்காக அந்த நாடுகளின் தலைவர்கள் பன்னாட்டு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டதைப்போலவே, தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இலங்கை இனச்சிக்கலுக்கு காரணமாக அமைந்துள்ள பிரச்சனைகளை தீர்க்க இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மறையான விசாரணை நடத்தப்படவில்லை. இலங்கை அரசின் செயல்பாடுகள் எதுவுமே நம்பகத்தகுந்ததாக இல்லை என்றும் ஐ.நா. குழு கூறியுள்ளது. அவர்களுக்கு சம உரிமை வழங்கும் என்றோ எதிர்பார்த்து சூரியன் மேற்கே உதிக்கும் என்று எண்ணி காத்திருப்பதைப் போன்றதாகும். இனியும் இதற்காக காத்திருக்காமல் இலங்கை இனச்சிக்கலுக்கு ஓரே தீர்வு தனித் தமிழ் ஈழம் அமைத்துத் தருவதுதான் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை ஐ.நா.வும் உலக நாடுகளும் தொடங்க வேண்டும்.
பாகிஸ்தானுடன் இணைந்திருந்த கிழக்கு பாகிஸ்தானில் உள்ள மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத அன்னை இந்திரா காந்தி எப்படி கிழக்குப் பாகிஸ்தானை பிரித்து வங்கதேசம் என்ற தனி நாட்டை ஏற்படுத்தித் தந்தாரோ, அதேபோல், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை பிரித்தெடுத்து தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான முன்முயற்சிகளை இந்தியா தொடங்க வேண்டும்.
ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் இருந்து இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்று இலங்கை அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மையாக இருந்தால், உலக அரங்கில் இந்தியாவுக்கு தீரா பழி ஏற்பட்டுவிடும். தமிழர்களின் நலனிலும், இலங்கையை தண்டிப்பதிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்பதை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையில் இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வணிக உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment