Tuesday, May 10, 2011
மீனவர் படுகொலை.. அம்பலமாக்கும் சீமான்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள வெறியர்கள், தமிழக மீனவர்கள் நால்வரைக் கொடூரமாகக் கொன்றுபோட்டார்கள். தமிழகத்தையே உலுக்கிய அந்த ‘வினையாட்டு’ விவகாரம் அரசியல் தலைவர்களின் துக்க விசாரிப்புகளோடு அமுங்கிவிட்டது. இந்த நிலையில், படுகொலையான மீனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்த சீமான், ”மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய – மாநில அரசுகள் தமிழகத் தேர்தலை மனதில் வைத்து விளையாடிவிட்டன!” எனத் திகீர் கிளப்புகிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஈழக் கோரத்தைத் தடுக்கக் கோரி தமிழகத்தில் தம்பி முத்துக்குமார் தொடங்கி 16 பேர் தீக்குளித்து மடிந்தார்கள். ஒருங்கிணைந்த உக்கிரமாக அது வெடித்துவிடக் கூடாது என்பதற்காக, குடும்பத் தகராறு, குடி விவகாரம் என இறந்தவர்களை அசிங்கப்படுத்தியது இந்த அரசாங்கம். அதையும் விஞ்சிய அயோக்கியத்தனத்தை, தற்போதைய சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ், தி.மு.க. அரசுகள் செய்திருக்கின்றன. கடந்த 2-ம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த அன்று சிங்களக் கடற்படையினர் அவர்களுடைய கப்பலில் தொலைக்காட்சி பார்த்திருக்கிறார்கள். இலங்கை தோற்றுவிட்ட ஆவேசத்தில் தமிழக மீனவர்களின் படகை முற்றுகை இட்டிருக்கிறார்கள். ஈவு இரக்கமே இல்லாமல் அவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். ஜான் பால் என்பவரின் கைகளை வெட்டியும் ஆணுறுப்பை அறுத்தும் கொக்கரித்து இருக்கிறார்கள். மாரிமுத்து என்பவரின் தலையைத் துண்டித்து வீசி இருக்கிறார்கள். இந்தியா ஜெயித்த பாவத்துக்காக நடுக்கடலில் தமிழர்கள் பழிவாங்கப்பட்ட கொடூரம் அன்றைக்கு இரவே இந்தியக் கடற்படைக்குத் தெரிய வந்திருக்கிறது. அந்தத் தகவல் தமிழக அரசுக்கும் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால், தேர்தல் நேரத்தில் மீனவர்கள் கொல்லப்பட்ட தகவல் வெளியானால் தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்படும், அது தேர்தலைப் பாதிக்கும் என்பது தெரிந்து தமிழக அரசு திட்டமிட்டு, அந்தக் கொலைகளை மறைக்கச் சொல்லி இருக்கிறது. சம்பந்தப்பட்ட மீனவர்களைத் தேடிப் போன உறவினர்கள் சிங்களக் கடற்படை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘என்ன நடந்தது என்பதை இந்தியக் கடற்படை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளுங்கள்!’ எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்தியக் கடற்படைக்கும், தமிழக அரசுக்கும், சிங்கள அதிகாரிகள் சொன்ன தகவல் தேர்தல் ஆதாயத்துக்காகத் திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது.
கொன்றுபோட்ட சிங்கள வெறியைக் காட்டிலும், தேர்தலுக்காக அதை மறைத்த அரசாங்கத்தின் வெறி கொடூரமானது. கொலையான மீனவர்களின் சடலத்தைத் தேடி அவர்களின் உறவினர்கள் இலங்கை மீனவர்களைச் சந்தித்தபோது, அங்கே டக்ளஸும் இருந்திருக்கிறார். ‘தேர்தல் முடியும் வரை மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை மறைத்துவிடுங்கள்’ என்கிற கோரிக்கை சிங்கள அரசாங்கத்துக்கு மட்டும் அல்லாது, டக்ளஸ் போன்ற கைக்கூலிகளுக்கும் சொல்லப்பட்டு இருக்கிறது!” என வெடித்த சீமானிடம், ”மீனவர்கள் கொல்லப்பட்டது தமிழக அரசுக்குத் தெரியும் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டோம்.
”சம்பந்தப்பட்ட மீனவக் குடும்பங்களிடம் சிங்களக் கடற்படை, ‘உங்கள் நேவியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லி இருக்கிறது. கடலுக்குள் செல்லும்போதே, மீனவர்களைப் பலவித சோதனைகளுக்கும் ஆளாக்கி பதிவு எடுத்துக்கொள்ளும் இந்தியக் கடற்படை அதிகாரிகள், அந்த மீனவர்கள் திரும்பிவிட்டார்களா என்பதை மட்டும் ஏன் விசாரிப்பது இல்லை?
நால்வரும் கொல்லப்பட்ட தகவல் உரிய நேரத்தில் வெளியாகி இருந்தால், தமிழகமே கொந்தளித்து இருக்கும். அதனால், நிச்சயம் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரிய அடி விழுந்திருக்கும். அதனைத் தடுப்பதற்காக அந்தத் தகவலையே மறைத்தவர்கள், தேர்தல் முடிந்த பிறகு இலங்கை அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவையே ஆர்ப்பாட்டம் நடத்தவைத்தார்கள். விளையாட்டில் தோற்றதைக்கூட பொறுக்காமல் சிங்கள அரசு நடத்திய இந்த வெறியாட்டத்தை உலக அரங்கில் அம்பலமாக்கி இருக்கவேண்டிய இந்திய அரசே, தமிழக அரசோடு கைகோத்து அந்தக் கோரத்தை மறைக்கச் சொல்லி இருக்கிறதே… பிணத்தை வைத்தும் அரசியல் செய்வார்கள் என்பது இதுதானே?!”
சீமானின் இந்த உக்கிரக் கேள்வி, உரியவர்களுக்கு உறைத்தால் சரி!
- இரா.சரவணன்
நன்றி : ஜூனியர் விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment