Labels

Monday, May 9, 2011

இலங்கை அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்: ஐ.நா. விசாரணை குழு



இலங்கையில் இறுதி கட்ட போரின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா, குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் இலங்கை போர் குற்றம் செய்ததாக சுட்டிகாட்டி இருப்பதுடன் இனி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரிந்துரைகளையும் செய்து உள்ளது.

அதன் விவரம் வருமாறு: இலங்கை அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

* இலங்கை அரசின் விசாரணைகளை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

* கண்காணிப்பு குழு இலங்கை அரசின் விசாரணைகளை உன்னிப்பாக கண்காணித்து ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* ஆதாரங்களை சேகரித்து, அதனை பாதுகாத்து வழங்க வேண்டும்.

* இலங்கை அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணை ராணுவக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

* போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களின் எச்சங்கள் வழங்குவதுடன் அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

* காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

* போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்க வேண்டும்.

* தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

* விடுதலை செய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

* காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

* அவசர காலச்சட்டம், பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத் துலக தராதரத்திற்கு மாற்ற வேண்டும்.

* தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும்.

* அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், வக்கீல்களும் அனுமதிக் கப்பட வேண்டும்.

* நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
* குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

* சுதந்திரமான நடமாட்டங்களை தடை செய்யும் இலங்கை அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

* பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூகப் பிரச்சனைகளை இலங்கை அரசு ஆராய வேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக் குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* போரின் இறுதி நாட்களில் இடம் பெற்ற பொது மக்களின் இழப்புக்களுக்கு அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

* இறுதிகட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசு அனைத்துலக தரத்தில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* 2009 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் வைத்த தீர்மானத்தை ஐ.நா. மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.

* மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடை முறைப்படுத்துவது தொடர்பாக போரின் போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும் - ஐ.நா. பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி :

இலங்கைப் பிரச்சினை குறித்து பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படும் என்றும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிபுணர் குழு அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாகவும், நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி பிரபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விருப்பத்திற்கிணங்கவே பாதுகாப்புச் சபையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


நிபுணர் குழு அறிக்கை வெளியான பின் இலங்கையில் அதற்கான பிரதிபலிப்புகள் குறித்தும் நாம் தீவிரமாக கவனித்து வருகின்றோம். இதுவரை அங்கு பொதுமக்களின் பிரதிபலிப்புகளே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இதுவரை எந்தவித பதிலையும் அதிகாரப்பூர்வ ரீதியில் அளிக்கவில்லை. நாங்கள் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காகவும் காத்திருக்கின்றோம்.


மேலும் இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் உட்பட போருக்குப்பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருக்கின்றது
என்றும் மார்ட்டின் நெசர்கி பிரபு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போர்க்குற்றம் - சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட மனித உரிமைகள் குழு வலியுறுத்தல் :

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மனித உரிமைகள் குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து ஐ.நா. சபை நடத்திய விசாரணையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது, இலங்கை ராணுவத்தினர் திட்டமிட்டு அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டு மழைகள் பொழிந்து தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.


இறுதிக்கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தினரால் அப்பாவித் தமிழர்கள் 40 ஆயிரம் பேர் குண்டு வீசி கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட எந்தவித மனிதாபிமான உதவிகளும் கிடைக்கவிடாமல் இலங்கை அரசு திட்டமிட்டு தடுத்ததாவும் கூறப்பட்டுள்ளது. இந்த போரில் சர்வதேச உரிமை சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே ஐ.நா. அறிக்கை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தவிட வேண்டும் என நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மனித உரிமைகள் குழு வலியுறுத்தியுள்ளது.


சர்வதேச விசாரணைகள் நடைபெற்றால்தான், எதிர்காலத்தில் இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்றும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment