Labels

Monday, May 9, 2011

ராஜபக்‌சே பேரணி: தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும் - சீமான்


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று குற்றம் சாட்டி வெளியிடப்பட்ட ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், மே 1 ஆம் நாள் கொழும்பில் நான்கு இடங்களில் இருந்தும் ராஜபக்‌சேவின் உத்தரவின் பேரில் பேரணிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ராஜபக்‌சேவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணி ஐ.நா.வுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல. முக்கியமாகத் தமிழர்களுக்கு எதிரானது ஆகும். இந்தப் பேரணியின் மூலம் ராஜபக்‌சே தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.


தமிழர்களின் வணிக நிறுவனங்கள், மற்றும் வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அங்குள்ள தமிழர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், திட்டமிட்ட முறையில் இந்தக் கலவரத்தினைச் செய்ய சிங்கள ரவுடிகளுக்கும், சிறைக் கைதிகளுக்கும் குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன எனறும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப்பேரணியில் கலந்து கொள்ளுமாறும் மறுத்தால் கொலை செய்யப்படுவீர்கள் என்றும் தமிழர்கள் மிரட்டப்பட்டு வடகிழக்கில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.


இவ்வாறு திட்டமிட்டு நிகழ்த்தப்படும் பேரணி மற்றும் வன்முறையின் மூலம் தனக்கு எதிரான எதிர்ப்புக்குரல் உலகெமெங்கிலும் உள்ள தமிழர்களிடம் இருந்து எழுவதை அச்சுறுத்தி தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும்,வடகிழக்கில் இருந்து தமிழர்களை விரட்டியதைப் போல கொழும்பு நகரத்தில் இருந்தும் விரட்ட வேண்டும் என்னும் நோக்கிலும் ராஜபக்‌ஷே தலைமையிலான அரசு செயல்படுகிறது.


இந்தப்பேரணியினால் ஐ.நா. அலுவலகமும், அதன் ஊழியர்களுமே அச்சத்தில் இருக்கும் பொழுது அங்கிருக்கும் அப்பாவித் தமிழர்கள் நிலை பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. ஏற்கனவே சமீபகாலமாக கொழும்பில் வெறித்தனமாக அலைந்து திரியும் சில பேரினவாதக் கும்பல்களால் தமிழ் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே இந்தப்பேரணி தடுக்கப் பட வேண்டியது ஒன்று ஆகும். ஏற்கனவே கொழும்பில் 1983ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பேரணியில் தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது.அது போன்ற சம்பவம் மீண்டும் தொடர அனுமதிக்க்க் கூடாது. ஆகவே இந்தியா இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்.

லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்ய சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்த இந்தியா கொழும்பில் வசிக்கும் பெருவாரித் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நலன் கருதியாவது உடனே தலையிட வேண்டும்.அங்கு வாழும் தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதனையும் மீறி தமிழர்கள் அங்கு தாக்கப்பட்டால் தொடர்ந்து தமிழன் அடிவாங்கிக்கொண்டு மட்டும் இருக்க மாட்டான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment