Labels

Sunday, May 29, 2011

ராஜபக்ஷே, சோனியா உள்ளிட்டோரை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவது விரைவில் நடக்கும்! - வேலூரில் சீமான் ஆவேசம்



ராஜபக்ஷே, சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, கருணாநிதி போன்ற எல்லோரும் நம் தமிழ் இன மக்கள் கொடுமையாகச் சாகக் காரணமாக இருந்தார்கள். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதே நாம் தமிழர் கட்சியின் முடிவு. இது கூடிய விரைவில் நடக்கும்!'' என சீமான் பேச்சு முழுக்க அனல் பறந்தது.
வேலூரில் கடந்த 18-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது.

பாதையைத் தேடாதே... உருவாக்கு!’ கம்பீரமாக பிரபாகரன் சிரித்துக்​கொண்டு இருக்க, கீழே சிறுமி ஒருத்தி, 'வீர வணக்கம்... வீர வணக்கம்!’ என்றபடியே நாம் தமிழர் கட்சிக் கொடியைப் பிடித்துப் பேரணியைத் தொடக்கி வைத்தனர்.

பேரணியின் நடுவே ராஜபக்ஷே வேடத்தில் ஒருவர் செருப்பு மாலையுடன் நின்றார். ராஜபக்ஷே வேடம் அணிந்தவரை பேரணியில் அடித்தபடியே வந்தனர்.

மாலை பொதுக் கூட்டம் தொடங்கியது.

முதலில் இயக்குநர் செல்வமணி உரையாற்றுகையில்,

காங்கிரஸுக்கு யாரும் ஓட்டுப் போடா​தீங்கன்னு எல்லோரும் கத்தினோம். அதற்கு நல்ல பயன் கிடைத்து உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இனி யாரும் இருக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்யப்போகிறோம். காங்கிரஸில் இருப்பவர்கள் அங்கே இருந்து ஓடி​விடுங்கள்.

ஏன்னா இப்ப உங்களுக்கு ஐந்து தொகுதிகள் கிடைச்சிருக்கு. அடுத்த தேர்தல்ல யாருக்கும் டெபாஸிட் கூட கிடைக்காது. ஒரு பேச்சுக்குச் சொல்லுறேன்... தீ என்று சொன்னால் சுடாது. இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிற மேடையில் குண்டு வெடிச்சா என்ன ஆகும்? சீமான், நான், செல்வபாரதி, தீரன், சந்திரசேகர்னு எல்லோரும் மேல போக வேண்டியதுதான்.

ஆனா ராஜீவ் காந்தி இறந்தாரே... அப்ப அவர்கூட இருந்த 7 போலீஸ்காரர்களும் 10 பொதுமக்களும்தான் இறந்தார்கள். அப்போது வாழப்பாடியார், மூப்பனார் எல்லாம் எங்கே இருந்தார்கள்? குண்டு வெடிப்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரியுமா? உண்மையை எப்பவும் மறைக்க முடியாது.

சிறையில் இருக்​கும் என் தம்பி, அக்காமார்களை விரைவில் விடுதலை செய்... இல்லை என்றால், நாங்களும் வருகிறோம். சிறைச்சாலையைத் தயார் செய்....'' என்று முடிக்க, கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

இறுதியில், ஆக்ரோஷத்தோடு வந்து நின்ற சீமான்,

கடந்த ஆண்டு மே 18-ம் தேதி மதுரையில் நாம் தமிழர் கட்சியைத் தொடக்கினோம். அதற்கு முந்தைய ஆண்டு 2009 மே 18-ம் தேதி ஈழத்தில், முள்ளி வாய்க்காலில் நம் தமிழ் சகோதர - சகோதரிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

ஒரு காக்கை இறந்தால், அந்த காக்கை இனம் கூடிக் கரையும். ஒரு தெரு நாய் இறந்தால், அந்தத் தெரு முழுக்கக் குரைத்தபடி திரியும் தெருநாய் இனம்.

நம் தமிழ் சொந்தங்கள் அங்கு வன்புணர்ச்சி செய்யப்பட்டு மடிகிறார்கள். இதை நான் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். ஆனால், நம் தமிழ்நாட்டில் எத்தனை பேர் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பார்கள்? எல்லோரும் மானாட மயிலாடவும், நாயாட நரியாடவும்தான் பார்த்தார்கள்.

இந்தக் கூட்டம், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் போடப்பட்ட கூட்டம் அல்ல. தமிழர்களின் இரத்தம் குடித்த கூட்டத்தை விரட்டி அடிக்கப் போடப்பட்ட கூட்டம்.

பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளைப் பார்த்துக் கேட்கிறேன்... பதவி ஆசையில் நம் இனத்தை அழித்தவனிடம் போய் நீங்கள் மண்டியிட்டீர்களே... இப்போது மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

நடந்து முடிந்தது தேர்தல் களம் அல்ல... அது ஒரு யுத்த களம்! ஐந்து தொகுதியில் ஜெயித்ததை நினைத்துக் கொக்கரிக்காதீர்கள். அந்த ஐந்து தொகுதிகளுக்கு வர எனக்கு நேரம் இல்லை. உங்களை வேரோடு அழிக்கும் வரை நான் ஓயப்போவது இல்லை.

தி.மு.க. தனது வரலாற்றில் எதிர்க் கட்சி அந்தஸ்தை இழந்து உள்ளது. மறுபடியும் நீங்கள் கூட்டணி வைத்தால் 23 ஸீட்டுகள் இல்ல. மூணு ஸீட்டுகள்கூட வாங்க முடியாது. மேலும், சாதி அரசியலை வைத்து இனி எவனும் தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியாது.

ராஜபக்ஷே, சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, கருணாநிதி போன்ற எல்லோரும் நம் தமிழ் இன மக்கள் கொடுமையாகச் சாகக் காரணமாக இருந்தார்கள். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதே நாம் தமிழர் கட்சியின் முடிவு.

இது கூடிய விரைவில் நடக்கும்!'' என சீமான் பேச்சு முழுக்க அனல் பறந்தது.

வலி இருந்தால்தானே வார்த்தைகளில் தீப்பறக்கும்!

நன்றி - ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment