Wednesday, May 11, 2011
கனடாவில் இருந்து ஓர் உரிமைக் குரல்! - முதல் தமிழ் எம்.பி. ராதிகா
வெளிநாட்டில் எம்.பி. ஆன முதல் ஈழத் தமிழர் எனும் பெருமையைப் பெற்று இருக்கிறார் ராதிகா சிற்சபை ஈசன்.
கனடா நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த 2-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஒன்டாரியோ மாநில ஸ்காபரோ ரூஜ்-ரிவர் தொகுதியில் போட்டியிட்டார் ஈழத் தமிழ்ப் பெண் ராதிகா.
ராதிகாவின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் கனடா வாழ் தமிழர்கள், ''ரூஜ்-ரீவர் தொகுதியில் 1988 முதல் லிபரல் கட்சியின் டெரிக் லீ என்பவரே தொடர்ந்து வெற்றி பெற்றார். கடந்த பொதுத் தேர்தலில், லீயை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டையன் ஸ்லோன் 5,954 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதே கட்சியின் சார்பில் இந்த வருடம், முதல் முறையாகப் போட்டியிட்ட ராதிகா, 18,935 (40.65%) வாக்குகளைப் பெற்று, கட்சிக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறார். லிபரல் கட்சி எளிதாக வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்ட இந்தத் தொகுதியை, ராதிகா புதிய ஜனநாயகக் கட்சிக்கு கிடைக்கச் செய்துள்ளார்!'' என்கிறார்கள் பெருமிதத்துடன்.
இலங்கையில் யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பூர்வீகமாகக்கொண்ட ராதிகா, ஐந்து வயதுச் சிறுமியாக, தன் பெற்றோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் ஆனார். படிப்பு ஒரு பக்கம், உரிமைப் போராட்டம் ஒரு பக்கம் என வளர்ந்த ராதிகாவை, காலம் தன் போக்கில் அரசியல் பாதைக்கு இழுத்து வந்து எம்.பி. ஆக்கி இருக்கிறது.
வாழ்த்துகளுக்கு நன்றி சொல்வதில் மும்முரமாய் இருந்தவரை, செல்போனில் பிடித்தோம்.
''வெளிநாட்டில் இருந்து வந்து எப்படி கட்சியில் முக்கிய இடம் பிடித்தீர்கள்?''
''இலங்கையில் 83-ம் ஆண்டு நடந்த இனக் கலவர நேரத்தில் பெற்றோருடன் தப்பி இங்கு வந்து சேர்ந்தேன். அப்போது, இங்கு நிறையத் தமிழ் மக்கள் இல்லை. தமிழ் படிப்பதற்கு, மூன்று பேருந்துகள் மாறி, வெகு தூரம் சென்று வர வேண்டும். அதனால், அப்பாவுடன் சேர்ந்து தமிழ்ப் பள்ளியை உருவாக்கினோம். அதனால், சிறுபிள்ளையிலேயே தமிழ் உணர்வோடு வளர்ந்தேன். டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் அமைப்பில் துணைத் தலைவராகவும், கால்டன் பல்கலையில் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தேன். குயின் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்துக்காக நிர்வாக மேலாண்மை பாடத்தைவிட்டு, தொழில் உறவுகள் பாடத்தைத் தேர்ந்து எடுத்தேன். அந்தக் காலகட்டத்தில், துப்புரவுத் தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றும் சூழல் வாய்த்தது. இப்படி இருக்கையில்தான், தமிழ் மக்களின் பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்த, புதிய ஜனநாயகக் கட்சி என்னை ஈர்த்தது. கனடாவில் உள்ள சராசரி மக்களுக்கான கட்சியாக இந்தக் கட்சி இருப்பதால், இக்கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன்.''
''மக்கள் தந்த இந்த அங்கீகாரம் எப்படி இருக்கிறது?''
''கனடா நாடாளுமன்ற ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி 167 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. எங்களின் புதிய ஜனநாயகக் கட்சி 102 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக எதிர்க் கட்சியாக அமர்ந்துள்ளது. இதுவரை எதிர்க்கட்சியாக இருந்த லிபரல் கட்சி 34 இடங்களை மட்டுமே பெற்று, மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. நம்பிக்கையாக இருக்கிறது எதிர்காலம்!''
''ஈழத் தமிழரின் வரவை கடுமையாக எதிர்க்கும் பழைமைவாதக் கட்சிதான், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் எம்.பி. பதவி மூலம் எந்த அளவுக்கு தமிழருக்கு உதவ முடியும்?''
''கடந்த தேர்தலில் எங்கள் கட்சிக்கு 36 இடங்கள்தான் கிடைத்தன. அப்போதே, இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவரச் செய்து, உலக அளவில் கவனத்தை ஈர்த்து விவாதிக்கவைத்தோம். இப்போது, முக்கிய எதிர்க் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், முன்பைவிட உரத்த குரலில் பேச முடியும். எங்கள் கட்சியின் தலைவர் ஜாக் லெய்ட்டன், கடந்த காலங்களில் ஈழத் தமிழரின் சகல பிரச்னைகளிலும் முன் நின்றவர். இப்போதும் எனக்குக் கொடுத்த இந்த வாய்ப்பை, ஈழத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாகவே கருதுகிறேன். கடந்த காலங்களைப்போலவே, கனடிய மக்களுடன் சேர்ந்து எமது இனத்துக்கான உரிமைக் குரலை வலியுறுத்த முடியும் என நம்புகிறேன்!''
நன்றி : ஜூனியர் விகடன் 11-மே -2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment