Labels

Thursday, May 19, 2011

தேவை அதிரடி – குமுதம் தலையங்கம்



மீண்டும் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து ஒரு தூதுக் குழு இந்த வாரம் செல்ல இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் இங்கே வருவாராம். பேச்சுவார்த்தை நடத்துவாராம். விருந்தினர் வீட்டில் காபி சாப்பிட்டு வருவது போல் போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைப் போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது.இது போன்ற குழுக்கள் போவதும் வருவதுமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுவரை உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.ஈழத் தமிழர்களின் கண்ணீரும் கவலையும் அப்படியேதான் இருக்கிறது.

இந்தமுறை செல்வது சிங்கள அரசின் போர்க்குற்றங்களைப் பற்றி விசாரிக்கவாம். சிங்களர்களின் கொடூரமான போர்க்குற்றங்களை பலர் சொல்லியிருக்கிறார்கள். காட்சிகளாய் வெளிவந்திருக்கின்றன. இப்போது ஐ.நா.சபையும் தனது விசாரணை அறிக்கையில் சிங்கள அரசு போர்க்குற்றவாளிதான் என்று தெளிவாய் குறிப்பிட்டிருக்கிறது.இதற்கு மேல் என்ன விசாரணைக் குழு வேண்டியிருக்கிறது என்று புரியவில்லை.

ஐ.நா. சபை இந்த அறிக்கையைத் தந்ததுமே இலங்கைக்கு கொடுத்துக் கொண்டிருந்த வர்த்தகச் சலுகைகளை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருக்கிறது. அடுத்த நடவடிக்கைகளைக் குறித்து தங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்க இருக்கிறது.உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால், தமிழர்களைக் கொன்று குவித்து போர்க்குற்றங்கள் புரிந்துள்ள சிங்கள அரசின் மீது இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழ் இனத்தின் வாழ்க்கைப் பிரச்னை என்பதை தூது செல்லும் மேனன்களும் ராவ்களும் உணர்ந்ததாக தெரியவில்லை.

இப்போதைய தேவை விசாரணைக் குழுக்கள் அல்ல, தமிழர் துயர் தீர்க்கும் அதிரடி நடவடிக்கைகள்.

- குமுதம்

No comments:

Post a Comment