Monday, May 9, 2011
ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வீரமணி ஆர்ப்பாட்டம்
சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை முன் 28.4.2011 காலை 11 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் பங்கேற்றனர்.
ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று நிறுத்தக் கூடிய கால கட்டம் வந்துவிட்டது - கி.வீரமணி :
ஆர்ப்பாட்டத்தில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி,
இலங்கை புரிந்த இனப் படுகொலையை கடந்த 10 மாதங்களாக விசாரித்து இலங்கை அரசு ராஜபக்சே அரசு குற்றவாளி என்பதை ஐ.நா. மன்றம் அதிகாரபூர்வமாக ஆதாரத்துடன் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. சிங்கள இன வெறியர்கள் தமிழின அழிப்பு வேலையை அங்கு நடைபெற்ற போருக்கு முன்பும் சரி, போருக்குப் பின்பும் சரி இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
உலக நாடுகளின் கண்கள் முன்பு இலங்கை அரசு போர் குற்றவாளிதான் என்பதை அய்.நா. மன்றம் அறிவித்திருக்கிறது. எனவே, இலங்கை அதிபர் ராஜபக்சேவை உலகத்தின் முன்பு போர் குற்றவாளி என்று நிறுத்தக் கூடிய கால கட்டம் வந்துவிட்டது.
எம் இனம் அழிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையை சிங்கள அரசு தர மறுக்கிறது. ஆட்டிக்குட்டி ஓநாயிடம் பாதுகாப்பாக உள்ளது என்று சிங்கள அரசு சொல்கிறது.
ஈழத் தமிழருடைய பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான். தனி ஈழம் மலரும் வரை நாம் ஒன்றுப்பட்டு போராட வேண்டும். தனி ஈழம் வந்தாக வேண்டும். நம்மிடையே அரசியலில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக தமிழர்கள் எந்தவித சுருதி பேதமும் இல்லாமல் குரல் கொடுக்க வேண்டும்.
இந்திய அரசு ஈழத் தமிழர்களின் படுகொலைக்குத் துணைபோகக் கூடாது. கடந்த கால செயல்களுக்கு கழுவாய்த் தேட வேண்டும். இந்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இந்தியா தமிழர்களுக்கு விரோதமான செயல்களுக்கு துணை நிற்கக் கூடாது. ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையில் இந்திய அரசின் வெளியுறவுத்துறை கவலையோடு கவனம் செலுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுடைய உரிமையை மத்திய அரசு மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும். அடுத்து மலரப் போவது தமிழ் ஈழம்தான். தமிழ் ஈழ மாநாட்டை அடுத்து நடத்தலாம் என்று இருக்கின்றோம். மத்திய அரசு மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராகத்தான் இருக்கிறோம் என்று காட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, உலக குற்ற வாளிக் கூண்டில் ஏற்றி கைது செய்யும் வரை போராட்டம் ஓயாது. இது போன்ற போராட்டங்கள் தொடரும். பிறவியிலேயே ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இன்றைக்கு ஏதோ ஆதரவாளர்களைப் போல காட்டிக் கொள்கிறார்கள். தமிழ் ஈழம் வருகிற வரை தமிழர்களுடைய போராட்டம் தொடரும் என்றார்.
இலங்கைக்கு உதவினால் அவர்கள் உலக தமிழர்களுக்கு விரோதி ஆவார்கள் - சுப.வீரபாண்டியன் :
ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசும்போது,
இலங்கையில் நடந்து வரும் இன அழிப்பு குறித்து இன்று உலக நாடுகள் விழிப்படைந்துள்ளன. இப்போது ஐ.நா. மன்றம் ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவித்துள்ளது. இந்த நேரத்தில், இந்திய கட்சிகள் கருத்து வேறுபாடின்றி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இலங்கைக்கு யார் உதவ முன் வந்தாலும் அவர்கள் உலக தமிழர்களுக்கு விரோதி ஆவார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இன அழிப்பு வேலையை செய்ததற்காக சிங்கள இலங்கை அரசை ராஜபக்சேவை குற்றவாளி என்று உலக நாடுகள் ஐ.நா. மன்றத்தின் மூலமாக முதல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.
அதற்கு ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்து என்ன சொன்னார்? இலங்கை அரசை போர் குற்றவாளி என்று அறிவித்ததற்காக மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி ஐ.நா.வுக்கு எதிர்ப்பைக் காட்டுவோம் என்று சொல்லியிருக்கின்றார்.
இரண்டாவது தமிழக மக்களுக்கு வழங்கும் உதவி பாதிக்கும். மூன்றாவது எங்கள் அரசுக்கு இந்தியா உதவு வதாக அறிவித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சொல்லியிருக்கின்றார்.
இந்தியா உதவி செய்யும் என்று ராஜபக்சே கூறியிருப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படி ராஜபக்சே கூறியிருப்பது தமிழர்களுக்கும் இந்தியாவுக்குப் பெருத்த அவமானமாகும். உலகம் முழுவதிலும் இருக்கின்ற தமிழர்கள் இலங்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட நேரிடும். ராஜபக்சேவை சிறைக் கைதியாக ஆக்கும் வரை ஒன்றுபட்டு நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment