Labels

Tuesday, May 10, 2011

காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? ராஜீவ் கொலை வழக்கு! : இரகசியங்கள் வெளியிடும் வக்கீல்



எந்தவித சர்ச்சைப் புத்தகத்துக்கும் வெளிவந்த பிறகுதான் எதிர்ப்பு கிளம்பும். ஆனால், ராஜீவ் படுகொலை பற்றிய புதிய புத்தகம் ஒன்று, அச்சாவதற்கு முன்பே சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கிறது. இதை எழுதி வருபவர், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி.
ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக, விசாரணை நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை வாதாடியவர். துரைசாமியை சந்தித்தோம்.

ராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் எழுதியுள்ள புத்தகத்தில், ராஜீவ் கொலை நடந்த பொதுக் கூட்டத்துக்காக மரகதம் சந்திரசேகரின் மகனுக்கு, சிவராசன் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்ததாக இருக்கிறது. இதை வழக்கு விசாரணையின்போது இவர் சொல்லவில்லையே!

அப்படி சொல்லி இருந்தால், குறுக்கு விசாரணையில் பல உண்மைகள் வந்திருக்கும். நன்கொடையாக இருந்தாலும், தெரியாத ஒரு ஆளிடம் ஐந்து லட்ச ரூபாய் அதுவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வாங்குகிறார் என்றால், இருவருக்கும் தொடர்பு இல்லா​மல் இருக்​குமா?!

சம்பவத்தன்று, தனு, சிவராசன், சுபா, நளினி ஆகியோர் கொடுங்கையூரில் இருந்து நளினியின் வில்லி​வாக்கம் வீட்டுக்குப் போய், எல்லாரும் பாரி​முனைக்கு வந்து, ஸ்ரீபெரும்புதூருக்குப் பேருந்தில் போன​தாகச் சொல்கிறார்கள்.

ஐந்து லட்சம் இனாமாகக் கொடுக்கும் சிவராசன், சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூருக்குச் செல்ல 500 ரூபாய் இல்லாமல் போய்​விடுமா?

இன்னொன்று, கொடுங்கையூரில் தங்கியிருந்த வீட்டில் மதியம் 12.30 மணிக்கு, வெடிகுண்டை தனு கட்டிக்கொண்டாள் என்கிறார்கள். அப்படி கட்டிக்கொண்டு இருந்​தால், இரண்டு சுவிட்ச்களில் லேசாகக் கை பட்டால்கூட வெடித்து, பேருந்து தூளாகி இருக்காதா?

என்னுடைய அனுமானத்தின்படி, சம்பவத்துக்கு முந்தைய நாட்களிலேயே தனு ஸ்ரீபெரும்புதூர் போயிருக்க வேண்டும். அங்குதான் வெடிகுண்டைப் பொருத்தியிருக்க வேண்டும்.

மேலும், சிவராசனின் டைரியில், 'ராஜீவ்காந்தியின் பயணம் தாமதம்’ எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்குப் பேருந்தில் செல்லும் ஒருவருக்கு மாலை 6.30 மணியளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து வரவேண்டிய ராஜீவ் விமானம் தாமதம் என எப்படித் தெரியும்? எப்போது சிவராசன் அதை எழுதினான்? இதுபற்றி எந்தப் பதிலும் இல்லை!

எனவே, முன்பே ஸ்ரீபெரும்புதூர் சென்ற சிவராசன் குழு, அங்கு யார் வீட்டிலோ தங்கியிருக்க வேண்டும். அங்குதான் வெடிகுண்டையும் பொருத்தியிருக்க வாய்ப்பு உண்டு.

தரைவழித் தொலைபேசி இணைப்பு உள்ள வீட்டில்தான் அவர்கள் தங்கியிருக்க வேண்டும். செல்போன் இல்லாத அந்தக் காலத்தில், ராஜீவ் வருகை தாமதம் என்பதை டெல்லியில் உள்ள யாரோதான் சிவராசனுக்குச் சொல்லியிருக்க வேண்டும்.

இந்த வழக்கில் மூன்றாவது குற்றவளியாகச் சேர்க்கப்​பட்டவர் சாந்தன். சிவராசன் குழுவினரை இவர் கொடுங்கையூர் வீட்டில் வழியனுப்பி வைத்ததாகவும், கொலை நடந்த பிறகு அதே வீட்டில் சிவராசன் குழுவினரை வரவேற்றதாகவும், அதன் பிறகு ராஜீவ் படுகொலை பற்றி சாந்தனிடம், சிவராசன் விளக்கியதாகவும் குற்றச்​சாட்டில் உள்ளது.

ஆனால், கொலை நடப்பதற்கு சற்று முன்பு, ராஜீவுக்கு மாலையிட 20 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, அவர்களுக்கு அருகிலேயே சாந்தன் இருந்திருக்கிறார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்ட நிலையில், சாந்தன் எப்படி காங்கிரஸ் பிரமுகர் ஆனார்? அவருடன் காங்கிரஸார் யார் யார் பழகி இருந்தார்கள் என்பதை மறைக்க முயற்சி நடந்திருக்கிறது.

அன்றைய நிகழ்ச்சியை காங்கிரஸ் கமிட்டி, போலீஸ், உள்ளூர் காங்கிரஸ் சார்பில் வீடியோ எடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பில் எடுக்கப்பட்ட வீடியோவில், தனு நிற்க. ராஜீவ் வருகிறார். அடுத்த பகுதி அழிக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் சொல்கிற காரணம், 'திரும்பத் திரும்ப அதைப் போட்டுப் பார்த்ததால், டேப்பின் குறிப்பிட்ட பகுதி அழிந்துவிட்டது’ என்கிறார்கள். அது தெரிந்தால், அந்த நேரத்தில் சிவராசனும் தனுவும் யாருடன் எல்லாம் பேசினார்கள் என்பது உள்ளிட்ட பல முக்கிய உண்மைகள் தெரிந்துவிடும்.

மத்திய உளவுத் துறை எடுத்த வீடியோவை கடைசி வரை காட்டவே இல்லை. திட்டமிட்டோ.வேண்டும் என்றோ சாட்சியத்தை மறைத்துவிட்டார்கள். இதை அப்போதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தால், பல உண்மைகள் வெளிவந்து இருக்கும்.

ராஜீவைக் கொல்லப் பயன்படுத்தப்​பட்ட ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் இராணுவத்தில் மட்டுமே பயன்​படுத்தக்கூடியது. அதை சிவராசனுக்கு யார், எங்கே இருந்து எடுத்துத் தந்தது? சிவராசன் இதை எப்படித் தயார் செய்தான் என்பதையும் குறிப்பிடவே இல்லை!

இந்த வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகத்தான் பேரறிவாளனுக்குத் தூக்குத் தண்டனை தந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கொலையைச் செய்பவனுக்கு, பேட்டரி வாங்கித் தர ஒரு ஆள் வேண்டுமா? அது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், சிவராசனுக்கு வெடிபொருள் தந்தது யார்?

இப்படி இந்த வழக்கில், பல கேள்விகளுக்கும் பதில் இல்லை. நான் எழுதும் புத்தகத்தின் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்போது, இப்போது குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு உள்ளவர்கள் நிரபராதிகள் என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளும்!'' - உறுதியாகச் சொல்லி முடித்தார் வழக்கறிஞர் துரைசாமி.

எஸ்.துரைசாமி தயாரிப்பது புத்தகம் அல்ல... புத்தக வடிவில் ஒரு வெடிகுண்டு!

நன்றி : ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment