Thursday, May 19, 2011
மே 18 : நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்
மே 18 வேலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்
1. தமிழக மக்களுக்கு நன்றி
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், ஈழத் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி, திட்டமிட்டு தமிழினப் படுகொலைப் போரை நடத்திய சிங்கள பௌத்த இனவாத அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு தந்து துணைபோன, தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய காங்கிரஸ் அரசிற்கு பாடம் புகட்ட காங்கிரஸ் கட்சியை தமிழ் மண்ணில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் துடைத்தெறிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும், இதர தமிழ்த் தேச இயக்கங்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து தமிழினத்தின் கோபத்தை டெல்லிக்கு காட்டிய தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது.
ஈழத் தமிழினத்தின் படுகொலைக்குத் தெரிந்தே துணைபோன தி.மு.க. அரசையும், தமிழினத்தை பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளிய அதன் திட்டங்களையும், குடும்ப ஆட்சியை வலிமைப்படுத்தும் அதன் தலைமையையும் கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாலர் செந்தமிழன் சீமானும், அவருடைய தம்பிகளும் செய்த பரப்புரைக்கு முழுமையாகச் செவி சாய்த்து தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்றியுள்ளனர். அதற்காகவும் தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
தமிழனத்தின் மானத்திற்கு சவாலாக நடைபெற்ற இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியோடு இணைந்து பணியாற்றிய தமிழ்த் தேச இயக்கங்களுக்கும், ஆங்காங்கு தங்களது சக்திக்கு உட்பட்ட அளவில் காங்கிரஸை வீழ்த்த பரப்புரை மேற்கொண்ட தமிழ்த் தேச அமைப்புகள் அனைத்திற்கும் நாம் தமிழர் கட்சி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
2. புதிய ஆட்சிக்கு வாழ்த்துகளும், நாம் தமிழரின் விண்ணப்பமும்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழ மக்கள் மாபெரும் வெற்றியைத் தந்துள்ளனர். தமிழக மக்கள் தந்த நிகரற்ற ஆதரவினால் அ.இ.அ.தி.மு.க. தனித்தப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு முதலைமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கும் அவரது அமைச்சரவைக்கும் நாம் தமிழர் கட்சி தனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி உறுதியானதும் அளித்த பேட்டியில், ஈழத்தில் தமிழினத்தை இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்; அதற்கு இந்திய அரசு உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களுக்கு கௌரவமான கண்ணியமான ஒரு வாழ்க்கையை அமைத்துத்தர சிறிலங்க அரசு தவறுமானால், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறிய பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு
ஈழத் தமிழினம் முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியான சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி கீழ்க்கண்ட கோரிக்கைகளை வைக்கிறது.
ஈழத் தமிழினத்தை முற்றாக அழிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட இனப் படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். பெரும் பாலியல் கொடுமைக்கு தமிழ்ப் பெண்கள் இன்றளவும் ஆட்படுத்தப்படுகின்றனர். தெற்காசிய வல்லாதிக்கங்களின் பேராதரவுடன் நடத்தப்பட்ட இனப் படுகொலைப் போரில் ஈழத் தமிழினம் சிதைக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ தேசம் சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்னமும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கும் தேவைப்படும் அத்தியாவசிய உதவிகளை அளிக்க முன்வரும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தமிழர் பகுதிகளுக்குள் அனுமதிக்க சிங்கள பௌத்த இனவெறி அரசு மறுத்து வருகிறது. அவர்களுக்கு நிதி அனுப்பினாலும் அதனை அனுமதிக்க மறுத்து வருகிறது.
தமிழ் மக்களின் காணிகள் (நிலங்கள்) பறிக்கப்பட்டு தமிழ் மண்ணில் குடியேற்றப்படும் சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. தமிழர் வாழ்ந்த நகரங்களின் பெரும் பகுதிகள் இன்று சிறிலங்க இராணுவப் பகுதிகளாக (Cantonments) அறிவிக்கப்பட்டு, பெரும் முகாம்களும், இராணுவக் குடியிருப்புகளும் கட்டப்படுகின்றன. பிழைக்க வழியேதுமற்ற நிலையில் மிக ஆபத்தான கண்ணி வெடி அகற்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் தாங்களாகவே முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். மொத்தத்தில் வாழ வழியுமின்றி, உழைக்க காணியுமின்றி ஈழத் தமிழினம் சிங்கள – பௌத்த இனவாத அரசின் திட்டமிட்ட இன அழித்தலிற்கு இன்றளவும் ஆட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில்தான், தமிழர்களுக்கு எதிரான அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் பல பத்தாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரையின்படி சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் எழுந்துள்ளது. அந்தக் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக அரசு, இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்றும், அந்த மக்களுக்கு அரசியல் ரீதியான நியாயம் கிடைக்க பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு முழுமையாக துணை நிற்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் வைக்கிறது.
தமிழீழ அகதிகள் நிலை மாற வேண்டும்
ஈழத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடந்துவந்த இனப் படுகொலைப் போர் முடிந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தாலும் இன்னமும் அதன் இன அழிப்பு நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் போரின்போது தாய்த்தமிழ் மண்ணான நமது தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து தஞ்சமடைந்த ஈழத் தமிழர்கள் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டு வருகின்றனர்.
அவர்களின் அவலத்தை பல இதழ்களும், ஊடகங்களும் ஆதாரத்துடன் வெளிக்கொணர்ந்தன. ஆயினும், அம்மக்களின் நிலையில் மாற்றமில்லை. இந்த நாட்டிற்கு வந்து தஞ்சமடைந்த திபெத்தியர்கள் அகதிகளுக்கு உரிய அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிறைவுடன் வாழ்ந்து வருகையில், தாய்த்தமிழ்நாட்டிற்கு அடைக்கலம் தேடி வந்த ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை அவலம் நிறைந்ததாக உள்ளது. அவர்களை தமிழக காவல் துறையின் கியூ பிரிவு காவல்துறையினர் இழிவுபடுத்துகின்றனர். அவர்கள் வெளியில் சென்று பணிபுரிய சுதந்திரம் அளிக்கப்படுவதில்லை. அம்மக்களின் பிள்ளைகள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பும் இல்லை, வசதிகளும் இல்லை. மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமைப் பிரகடனத்தின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாக அம்மக்கள் நடத்தப்படுகிறார்கள். இந்நிலையை மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மாற்றிட வேண்டும். அவர்களும் கௌரவமான ஒரு வாழ்க்கை நடத்திட எல்லா விதத்திலும் உதவி புரிந்திட வேண்டும்.
சிறப்பு முகாம்களை அகற்ற வேண்டும்
தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் பலரை ஐயத்தின் பேரில் வழ்க்கேதுமின்றி, வழக்கு இருந்தாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தாமலும், நீதிமன்றத்தில் அவர்கள் பிணைய விடுதலை பெறுவதைத் தடுப்பது உள்ளிட்ட சட்ட ரீதியான உரிமைகளை மறுத்து, சிறப்பு முகாம் என்ற பெயரில் அநியாயமாக சிறைப்படுத்தி வைத்திருக்கின்றனர். அவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்து அல்லது விடுதலை செய் என்று நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேச அரசியல் இயக்கங்கள் பலவும் பல முறை போராட்டம் நடத்தியுள்ளன. அதன் விளைவாக அறுபதுக்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆயினும் இன்னும் சிலர் பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் சிறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்படுத்தல் சட்ட விரோதமானது. மனித உரிமைகளுக்கு எதிரானது. எனவே இதற்கு மேலும் அவர்களை சிறையில் வைத்திருக்காமல் உடனடிக விடுதலை செய்து இதர முகாம்களில் உள்ள அவர்களின் உறவினர்களோடு வாழ தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கம் தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கிறது.
இராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டோருக்கு விடுதலை
முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரும், ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட நளினி, இரவி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ஆகியோரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்படுள்ளனர். 1991-ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் அனைவரும் 20 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் உள்ளனர். நளினி, இரவி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறைவாச விதிகளின்படி தங்களை விடுவிக்க வேண்டும் என்றும், அதற்குத் தாங்கள் தகுதியானவர்களே என்றும் நீதிமன்றம் சென்று சட்டரீதியாக நிரூபித்தும் உள்ளனர். ஆனால், தமிழக அரசு கூட்டணி அரசியல் தர்மம் என்ற பெயரில் இல்லாத பொல்லாத காரணங்களைக் கூறி நியாயமாக அவர்கள் பெறக்கூடிய விடுதலையைத் தடுத்து வந்தது. இந்த நிலை தொடர்வது மானுட மனப்பாங்கிற்கு உகந்ததல்ல.
மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற – காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயில்ன் தம்பி கோபால் கோட்சே விடுவிக்கப்பட்டு புனேயில் வாழ்ந்து வருகிறார். எனவே ஆயுள் தண்டனை என்ற காரணத்தைக் காட்டி எந்த ஒரு குற்றவாளியையும் நிரந்தரமாக சிறைப்படுத்தி வைத்திருப்பது சிறைப்படுத்தலின் அடிப்படையாகத் திகழும் தத்துவத்திற்கு முரணானது ஆகும். எனவே இந்த நால்வரையும் விடுதலை செய்வதில் அரசுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்பதை நீதிமன்றத்திற்குத் தெரிவித்திடல் வேண்டும். அதன் மூலம் மனிதாபிமானத்தைத் தமிழக அரசு நிலைநிறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
ராஜீவ்காந்தி கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அறிவு என்கிற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் நிலை இன்னமும் கவலைக்குரியது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக இவர்களும் சிறையில் உள்ளனர். 1998-ல் இவர்களுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அன்றிலிருந்து 13 ஆண்டுகளாக சாவை எதிர்நோக்கி சிறையில் வாடுகின்றனர். ராஜீவ் கொலையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாற்றப்பட்ட முக்கிய குற்றவாளீகள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர். கொலையாளிகளுக்கு இடமளித்தனர், கொலைக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பது போன்ற சாதரண குற்றங்களுக்காக தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட ஒரு கொடும் தண்டனைக்கு உரியவர்கள்தானா? மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டாமா? 13 ஆண்டுகள் சாவை மட்டுமே எதிர்நோக்கி வாழ்ந்து வரும் இவர்களை இதற்கு மேலும் அதே நிலையில் வைத்து அவர்களை உயிருடன் கொல்லப்போகிறோமா? தண்டனை என்ற பெயரில் இவர்களின் வாழ்வுரிமை மறுப்பிற்கு போதுமான காரணங்கள் உள்ளனவா? இப்படி சிறையில் இருந்து இவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு இன்றுவரை எவரும் பதில் கூறவில்லையே!
19 வயதில் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, இளமை பறிக்கப்பட்டு 20 ஆண்டு காலமாக சிறையில் வாடுகிறானே பேரறிவாளன் – பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றம் அவனது வாழ்வை சூனியமாக்க போதுமானதா? அப்படி நாம் கருதுவோமானால் அது நியாயமானதா? என்கிற வினாக்களை ஈர நெஞ்சுடன் மாநில அரசிற்கு நாம் தமிழர் கட்சி எழுப்புகிறது.
ராஜீவ்காந்தி கொலையில் பல மர்மங்கள் உள்ளன. அவைகள் அவிழ்க்கப்படவில்லை. அவரை சதித்திட்டம் தீட்டி கொன்றது தமிழினமே என்று உறுதிப்படுத்திடவே இவர்கள் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இராஜீவ் கொலையை ஒரு கரணமாக்கியே ஈழத் தமிழர் இனப்படுகொலையை இந்திய அரசு ஆதரித்து உதவியது என்று இந்தியாவில் மட்டுமல்ல, சிறிலங்க அமைச்சர்களும் கூறுகின்றனர். இப்படி தமிழினத்தின் மீது அபாண்ட பழி சுமத்தி, அதையே காரணமாக்கி தமிழினத்தை அழித்துள்ளரே இது நியாயம்தானா என்ற வினாவை நாம் தமிழர் கட்சி எழுப்புகிறது.
’பழி ஒரு பக்கம்; பாவம் ஒரு பக்கம்’ எனும் முதுமொழி இராஜீவ் கொலைக்கு மிகவும் பொருத்தமானது. எனவே இராஜீவ் கொலையோடு பின்னியுள்ள அரசியலை ஒதுக்கிவிட்டு, மனிதாபிமான உணர்வோடு – வாழ்வுரிமையை மதித்து இன்றைய உலகம் செல்லும் பாதையில் சென்று – இந்த மூன்று பேரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்து, அவர்கள் இத்தனை ஆண்டு காலம் சிறையில் இருந்ததே பெரும் தண்டனைதான் என்பதை சட்ட ரீதியாக எடுத்துக்கூறி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி இந்த மாபெரும் மக்கள் திரளின் பேராதரவோடு தமிழக அரசிற்கு முன்வைக்கிறது.
3. தமிழீழ விடுதலையை முன்னெடுப்போம்
முழு உரிமையுடனும், கண்ணியத்துடனும் இறையாண்மையுடனும் வாழ தமிழீழ மக்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்றும் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை முடக்க தமிழினத்தையே அழித்தால் மட்டுமே முடியும் எனத் திட்டமிட்டு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, சிங்கள – பௌத்த இனவாத அரசு இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை கொன்று போரை முடித்த நாளின் இரண்டாவது நினைவு நாள் இன்று.
முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் எனும் இரண்டு சிறிய கிராமங்களுக்குள் சிங்கள – பௌத்த இனவாத அரசு நடத்திய இனப்படுகொலை போரின் இறுதி கட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் செலுத்துவதோடு எம் மண்ணையும் மக்களையும் காக்க களத்தில் நின்று போராடி தங்கள் இன்னுயிர் நீத்த போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சி புரட்சிகரமான வீர வணக்கத்தை செலுத்துகிறது.
முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் படுகொலையோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிந்தது என்று நினைத்தன சிங்கள அரசும், அதற்கு உற்ற துணையாக நின்று தமிழினப் படுகொலையை முழுமையாக முடித்த டெல்லி அரசும். ஆனால், அது நடக்காது. தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகெங்கிலும் முன்னெடுக்கப்படும் என்பதை தமிழினிம் இன்று நிரூபித்து வருகிறது. தமிழீழ தேசத்தின் விடுதலை என்ற அந்த நியாயமான அரசில் ஆர்வத்திற்கு வடிவம் தர நாம் தமிழர் கட்சி அனைத்து வகையிலும் தொடர்ந்து போராடும் என்பதை இத்தீர்மானத்தின் மூலம் வலிமையாக உறுதி செய்கிறது.
4. ஐ.நா. மன்றமே பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிடு
ஈழத்தில் சிறிலங்க இனவாத அரசு நடத்திய போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் சிங்கள படையினரின் கொடூரமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பொறுப்பாக்க, பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் சிறிலங்க அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஐ.ந. நிபுணர் குழுவின் பரிந்துரையை வரவேற்கும் நாம் தமிழர் கட்சி, விசாரணைப் பொறுப்பை சிறிலங்க அரசிடம் அளிப்பது நியாயத்திற்கு வழிவகுக்காது என்பதால், சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ. நா. பொதுச் செயலருக்கும், ஐ. நா. பாதுகாப்புப் பேரவையின் உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுக்கிறது.
போரால் சின்னாபின்னமாக்கப்பட எமது இனத்திற்கு நியாயம் கிட்ட சுதந்திரமான பன்னாட்டு விசாரணையே ஒரே வழி என்பதை நாம் தமிழர் கட்சி சிரத்தையுடன் வலியுறுத்துகிறது.
5. உலக நாடுகளுக்கு வேண்டுகோள்
இலங்கைப் போர் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகளுக்கு முழுமையான ஆதரவு நல்கிடுமாறு உலக நாடுகளை – குறிப்பாக ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் நிரந்த உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இரஷ்யா, ஆகிய 5 நாடுகளின் அரசுகளை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தனது நாட்டு மக்களின் மீது ஒரு பெரும் போரை திட்டமிட்டு நடத்தி இனப்படுகொலை செய்துள்ளது சிறிலங்க அரசு. இனவெறியுடன் அது நிகழ்த்திய இந்தப் போரை உள்நாட்டு பிரச்சனை என்றோ, பயங்கரவாதப் பிரச்சனை என்றோ கூறி திசை திருப்ப வேண்டாம் என்று அமெரிக்கா, இரஷ்யா, உள்ளிட்ட வல்லரசுகளை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
சம உரிமைக்காகவும், கண்ணியமான வாழ்விற்காகவும் அரை நூற்றாண்டிற்கு மேலாக ஈழத் தமிழ் மக்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை தங்கள் சுய நிர்ணய உரிமையை மீட்க நடத்திய தியாகப் போராட்டத்தை உள்நாட்டுப் பிரச்சனை, பயங்கரவாதம் என்றெல்லாம் கூறுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பான, அநியாயமான கூற்றாகும் என்பதை நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூறுகிறது. எனவே வல்லரசுகளும், உலக நாடுகளின் அரசுகளும் பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
6. சுப. முத்துக்குமார் கொலையாளிகளை கைது செய்க.
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சுப. முத்துக்குமார் புதுக்கோட்டை நகரில் படுகொலை செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகியும் கொலையாளிகள் யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கொலையாளிகளை கண்டுபிடிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பிலும் மற்ற தமிழ்த் தேசிய அமைப்புகள் சார்பிலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆயினும் இன்றுவரை கொலையாளிகள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முந்தைய அரசு கொலையாளைகளை கைது செய்யவில்லை.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இது அத்தாட்சியாகும். இப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் சட்டம் ஒழுங்கு சீர்படுத்தப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது, மக்கள் சுதந்திரமாக, அச்சமற்று பாதுகாப்பாக வாழலாம் என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே தங்களது தலையாயப் பணி என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பது எங்களுக்கு நம்பிக்கையளிக்கிறது. எனவே இதற்கு பிறகாவது கொலைகாரர்கள் அனைவரையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment