Labels

Tuesday, May 10, 2011

''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - உருத்திரகுமாரனின் உருக்கமான பேட்டி





விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், எஞ்சி இருக்கும் நம்பிக்கையாக இவரைத்தான் இலங்கைத் தமிழர்கள் பார்க்கிறார்கள்.

இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களில் கில்லாடி. நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், ஆனந்த விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

''முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இந்த இரு ஆண்டுகளில் தமிழினம் கற்றுக்கொண்டு இருப்பது என்ன? கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?''

''முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய கடந்த இரு ஆண்டு களில், அனைத்துலக அரசுகளின் நலன்களையும் தமிழர் நலன்களையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவைக்க வேண்டிய அவசியத்தை நாம் மேலும் உணர்ந்து இருக்கிறோம். சுயநலன்களின் அடிப்படையில், தமது புவிசார் அரசியல் தளத்தில் இயங்கும் உலக அரசுகளிடம், நீதியையும் நியாயத்தையும் அறத்தின் அடிப்படையில் மட்டுமே எதிர்பார்க்க முடியாது என்பது யதார்த்தம். இந்த நிலையில், நாடு கடந்த சமூகமாக வாழும் தமிழர்களாகிய நாம், கீழிருந்து மேல் எழும் சக்தியாக மிளிர்ந்து, நீதியின்பால் பற்றுகொண்ட உலக மக்கள் சமூகத்தின் உதவியுடன் நமது விடுதலையை வென்றெடுக்கும் வாய்ப்பு களை மேலும் துல்லியமாகக் கண்டறிந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்!''

''இறுதிப் போர் தொடர்பான ஐ.நா குழுவின் அறிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?''

''இந்த அறிக்கை அனைத்துலகச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும். கொடூரமான முறையில் நடத்தப் பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக மட்ட விசாரணைதேவை என்ற குரலை மேலும் வலுவடையச் செய்யும். நீதியை மதிக்கக்கூடிய உலகச் சமூகத்தின் மத்தியில், களங்கப்பட்ட அரசாக சிறீலங்கா அரசு கூனிக் குறுகும் நிலையைத் தோற்றுவிக்கும். இலங்கைத் தீவில் இன்னும் ஒரு முறை இனப் படுகொலை நடக்காமல் இருப்ப தற்கான மாற்று வழி கருத்துப் பரி மாற்றத்தை சர்வதேச சமுதாயத்தில் ஏற்படுத்தும். தென் சூடான்,கொசாவோ, கிழக்கு திமோர் ஆகிய நாடுகள் தொடர்பாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு சுதந்திரத் தனி நாடே அவசியம் என்ற முடிவை சர்வதேச சமுதாயம் எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதே சமயம், இந்த அறிக்கை ஒரு வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வியையும் வெளிப்படுத்துவதாகக் கருதுகிறோம். இது ஐ.நா சபையின் மறுசீரமைப்பு குறித்த விவாதங்களைத் தோற்றுவிக்கலாம். இத்தகைய மறுசீரமைப்பு, ஐ.நா சபையை நீதியின் ஆலயமாக மாற்ற வேண்டுமே தவிர, அதிகார அரசியலின் பலிபீடமாகத் தொடர வழி செய்யக் கூடாது!
போரின் இறுதிக் காலகட்ட இன அழிப்பின்போது கொல்லப்பட்ட 80,000-க்கும் மேற்பட்ட நமது மக்களுக்கு நீதி கிடைக்கும் நாள் விரைவில் வந்தடைய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்!''

''தமிழ் மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?''

''ஈழத் தமிழ் மக்களை ஆக்கிரமிப்புக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும், கொடூரமான வாழ்க்கைச் சூழலுக்கும் உள்ளாக்கியது யார் என்பதை நமது மக்கள் நன்கு அறிவார்கள். அனைத்துலக விசாரணைகள் இதனை உறுதிப்படுத்தும்!''

''இறுதிப் போரின்போது தமிழகத்தில் வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிநடத்தலால் தான், புலிகள் தலைமையைக் காப்பாற்ற முடியாமல் போனதாகச் சொல்லப்படுவதுபற்றி..?''

''தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தேசியத் தலைமையின் மீதும் நெடுமாறன் ஐயா மற்றும் வைகோ அண்ணனுக்கு இருக் கும் விசுவாசம் குறித்து நாம் அப்பழுக்கற்ற நம்பிக்கை கொண்டு இருக்கிறோம்!''

''இப்போதைய சூழலில் தமிழகத் தமிழர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?''

''ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்னைக்கு, தமிழீழத் தனியரசே தீர்வாக அமைய முடியும். இதை வலியுறுத்தியும், தமிழீழத் தனிஅரசை அங்கீகரித்தும், தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்ய வேண்டும்.
சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசை வலியுறுத்தும் வகையில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றச் செய்ய வேண்டும்.
சுதந்திரத் தமிழீழ அரசை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக மக்களின் சார்பில், இந்திய அரசிடம் முன்வைத்து அதை வென்றெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துஉள்ள ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான, பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தப்படுவதுடன், இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள திபெத் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும், ஈழத் தமிழ் மக்களுக்கும் வழங்கப் படுவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி, இந்தியச் சிறைக் கூடங்களிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களை மனிதாபி மான அடிப்படையில் விடுவிக்க, மாநில, மத்திய அரசுகளைத் தூண்ட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்டு உள்ள ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பத் தேவையான உதவிகள், நம் மக்களை நேரடியாகச் சென்று அடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசின் ஊடாகவும், மற்றும் ஏனைய அனைத்துலக நிறுவனங்கள் ஊடாகவும் முன்னெடுக்க வேண்டும்.
இவையே எமது எதிர்பார்ப்புகள்!''

No comments:

Post a Comment